உலக அளவில் பல்வேறு வகையான பாலினங்கள் உள்ளன. இவற்றை எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ + என்று குறிப்பிடுகின்றனர். எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ+ (LGBTQIA+) சமூகத்தைச் சேர்ந்தவர்களை 1990-களில் ஜி.எல்.பி.டி என்று சுருக்கமாக அழைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லெஸ்பியன் ஆர்வலர்கள் அதிகளவில் போராட்டங்களை நடத்தியதால் பின்னாளில் அதாவது 2000-களின் நடுப்பகுதியில் ஜி.எல்.பி.டி என்பது எல்.ஜி.பி.டி என மாற்றப்பட்டது. எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ + சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து எந்த எல்.ஜி.பி.டி என்பதை எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ + என்று மாற்றியுள்ளனர். லெஸ்பியன், கே, பைசெக்ஷூவல், டிரான்ஸ்ஜென்டர், குயர், இன்டர் செக்ஸ், ஏசெக்ஷூவல் மற்றும் பல பாலினங்களைக் குறிப்பதையே எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ + என்கின்றனர். பலவித போராட்டங்களுக்குப் பிறகு மக்கள் இன்றைக்கு இந்த எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ + சமூகத்தினரைப் பற்றி விவாதிக்கவும் அவர்களை ஏற்றுக்கொள்ளவும் தொடங்கியுள்ளனர். ஜூன் மாதம் பிரைட் மாதம் என்று எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ + சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ + என்றால் என்ன? என்பதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
எல்
எல் என்றால் `லெஸ்பியன்’ என்று அர்த்தம். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் லெஸ்பியன் என்பதை, பெண் ஒருவர் மற்றொரு பெண்ணால் உணர்வு மற்றும் காதல் ரீதியாக ஈர்க்கப்படுவதை விவரிப்பதாக குறிப்பிடுகிறது. லெஸ்பியன் என்ற சொல் 1960 மற்றும் 1970-க்கு இடைப்பட்ட காலங்களில் பெண்ணிய இயக்கங்களின் வழியாகத் தோன்றியது. இந்த சொல் பயன்படுத்துவதற்கு முன்பு ஆண்கள் மற்றும் பெண்கள் தன்பாலின ஈர்ப்புகளைக் குறிப்பிட `கே’ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், `கே’ என்ற சொல் பெரும்பாலும் ஆண்களின் தன்பாலின ஈர்ப்பை குறிப்பிடுவதாகவே இருந்துள்ளது. லெஸ்பியன் என்ற சொல்லானது கிரேக்க தீவான லெஸ்போஸ் என்ற பெயரில் இருந்து பெறப்பட்டதாகவும் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி தெரிவிக்கிறது. கி.மு ஆறாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற கவிஞராக இருந்த சப்போ என்பவர் இந்த லெஸ்போஸ் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் தனது கவிதைகளில் பெண்கள் மீதான ஈர்ப்பை அதிகளவில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜி
ஜி என்றால் `கே’ என்று அர்த்தம். 19 நூற்றாண்டின் பிற்பகுதியில் `கே’ என்ற வார்த்தை கவலையற்ற, மகிழ்ச்சியான மற்றும் பிரைட்டான ஒருவரைக் குறிப்பதாக ஆக்ஸ்போர்டு அகராதி குறிப்பிட்டுள்ளது. 1940 மற்றும் 1950-களில் ஒரே பாலினத்தால் ஈர்க்கப்படும் ஆண்களையும் பெண்களையும் இந்த வார்த்தை குறிப்பிடுவதாக இருந்துள்ளது. இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, `கே’ வார்த்தையானது ஒரு ஆண் மற்றொரு ஆணால் காதல் மற்றும் உணர்வு ரீதியாக ஈர்க்கப்படுவதைக் குறிக்கிறது.
பி
பி என்றால் பைசெக்ஷூவல் என்று அர்த்தம். இருபாலினங்களின் மீதும் ஈர்ப்பு உடையவர்களை பைசெக்ஷூவல் என்று கூறுவர். அதாவது ஒரு ஆண் ஒரு ஆணின் மீதும் பெண்ணின் மீதும் ஈர்ப்பு உடையவராகவோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணின் மீதும் அல்லது பெண்ணின் மீதும் ஈர்ப்பு உடையவராகவோ இருந்தால் அவர்களை இருபாலினத்தவர் என்பர். எனினும், எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ + சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு இன்னும் பல வரையறைகளை வழங்குகின்றனர்.
டி
டி என்றால் டிரான்ஸ்ஜென்டர் என்று அர்த்தம். மூன்றாம் பாலினத்தவர்களைக் குறிப்பதை டிரான்ஸ்ஜென்டர் என்பர். பிறக்கும்போது ஒரு பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்து வளரும்போது அல்லது வளர்ந்த பிறகு மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவராக அவர் உணர்ந்தால் அவர் டிரான்ஸ்ஜென்டர் என்று அழைக்கப்படுவார். திருநங்கை மற்றும் திருநம்பி என இருபாலினத்தைச் சேர்ந்தவர்களும் இந்த டிரான்ஸ்ஜென்டரில் அடங்குவர். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த பலரும் தாங்கள் மனதால் உணர்வதை உடலிலும் கொண்டு வர விரும்பி அதற்கான மாற்றங்களைச் செய்து கொள்வர். டிரான்ஸ்ஜென்டர் என்ற வார்த்தையை கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஜான் எஃப் ஆலிவன் என்பவர் உருவாக்கினார். இதற்கு முன்பு வரை டிரான்ஸ் செக்ஷூவல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனை தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
க்யூ
க்யூ என்றால் குயர் என்று அர்த்தம். 1980-ம் ஆண்டுகளுக்கு முன்பு ஆர்வலர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியபோது எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ + சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இதனை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ + சமூகத்தைச் சார்ந்தவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்த அதிகளவில் இன்றும் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குயர் என்பது பல விஷயங்களை கூட்டாக கூறுவது என்று பொருள். அதாவது எந்தவித லேபிளையும் விரும்பாதவர்கள். தங்களை லெஸ்பியனாகவோ, கேயாகவோ, டிரான்ஸ்ஜெண்டராகவோ வெளிப்பத்த விரும்பாதவர்கள் குயர் என்று அழைக்கப்படுவார்கள். ஒருவர் தங்களை குயர் என்று அழைத்துக்கொண்டால் அவர்களை எந்தவித சொல்லுக்குள்ளும் அடக்க முடியாது.
ஐ
ஐ என்றால் இன்டர்செக்ஸ் என்று அர்த்தம். உறுப்புகளில் மாற்றம் உடைய நபர்களை இன்டர்செக்ஸ் வரையறைக்குள் கொண்டு வரலாம். அதாவது வெளியே ஆண் உறுப்புகளையும் உள்ளே பெண் தன்மையையும் அல்லது வெளியே பெண் உறுப்புகளையும் உள்ளே ஆண் தன்மையையும் கொண்டிருப்பவர்களைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. டிரான்ஸ்ஜென்டர் என்பதில் இருந்து இன்டர்செக்ஸ் என்பது முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏ
ஏ என்றால் ஏசெக்ஷூவல் என்று அர்த்தம். அதாவது யயாரிடமும் செக்ஷூவல் அட்ராக்ஷன் இல்லாத ஆட்களை ஏ செக்ஷூவல் என்பர். இவங்களுக்கு செக்ஷூவல் அட்ராக்ஷன் என்பது இருக்காது. ஆனால், காதல் போன்ற உணர்வுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏ என்பது ஏல்லி என்ற வார்த்தையையும் குறிக்கும். அதாவது அதற்கு நட்பு என்று பொருள். பாலியல்ரீதியாக தொடர்புகளை வைத்துக்கொள்ளாமல் காதல் மற்றும் நட்புடன் பழகுவது என்று இதற்கு பொருள்.
+
எல்.ஜி.பி.டி.க்யூ.ஏ – வைத் தவிர மீதமுள்ள பாலினங்களைச் சேர்ந்தவர்களை `+’ என்ற குறியீடு மூலம் குறிக்கின்றனர்.
Also Read : கேரளாவை உலுக்கிய மாணவி விஸ்மயா மரணம்… என்ன நடந்தது?