தழும்புகள் என்பது இயற்கையான ஹீலிங் புராசஸின் பயனாக வருவது. அதனால், தழும்புகள் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்கிறது மருத்துவ உலகம். அதேநேரம், சில சிம்பிளான வழிமுறைகள் மூலம் தழும்புகளைக் குறைக்கலாம். காயப்படுவதில் இருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வதன் மூலம், காயங்கள் ஏற்பட்டு விட்டால் அதை முறையாகக் கவனிப்பதன் மூலம் தழும்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். அதுவும் முகத்தில் ஏற்படும் நிரந்தரமான தழும்புகளை எல்லோரும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். முகத்தில் இருக்கும் தழும்புகளைக் குறைக்க வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
வெங்காயம்
வெங்காயத்தில் இருக்கும் வேதிப்பொருட்கள் காயங்களை ஆற்றும் மகத்துவம் கொண்டது. வெங்காயத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை ஜெல் போன்ற திரவத்தைத் தினசரி 3 முறை பயன்படுத்துவதன் மூலம் தழும்புகளைக் குறைக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு. அதேபோல், இந்த ஜெல் தழும்புகளின் தன்மையைக் குறைக்கவும் செய்யும். வெங்காயத்தை பேஸ்ட் பதத்தில் நன்றாக அரைத்து தழும்புகள் இருக்கும் இடத்தில் பூசி வர அது குறையும்.
வைட்டமின் சி
எண்ணெய், சீரம்களில் செறிந்திருக்கும் வைட்டமின் சி தழும்புகளைக் குறைக்கும் தன்மை கொண்டது. வைட்டமின் சி நிறைந்திருக்கும் சிலிக்கான் ஜெல், மருத்துவர்களின் அறிவுரைப்படி பயன்படுத்தப்படும் ஹைஅலுரானிக் ஆசிட் (hyaluronic acid) போன்றவை அறுவை சிகிச்சைகளால் ஏற்பட்ட தழும்புகளைக் கூட குறைக்கும் ஆற்றல் பெற்றவை என்கிறது ஒரு ஆய்வு. அதேபோல், எலுமிச்சை சாறும் தழும்புகளைக் குறைக்கும் வல்லமை பெற்றது.
எலுமிச்சை சாறு, தேன், பாதாம் எண்ணெய், பால் ஆகியவற்றை தலா ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எடுத்து நன்றாகக் கலந்து தழும்புகள் இருக்கும் இடத்தில் தொடர்ந்து 10 நாட்கள் தேய்த்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
கற்றாழை
கற்றாழைச் செடிகள் பாரம்பரிய மருத்துவத்தில் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தவை. தோல் காயங்களை ஆற்றவும் புதிய செல்கள் உருவாகவும் தேவையான சத்துகளை கற்றாழை அளிக்கும்.
காயங்களால் ஏற்பட்ட தழும்புகளில் கற்றாழை சோற்றைத் தடவி, அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். இதை தினசரி இரண்டு முறை 10 நாள்களுக்குத் தொடர்ந்து செய்வதால் தழும்புகளின் வீரியம் குறையும். அதேபோல், உங்கள் ஃபேஸ் க்ரீமோடு கத்தாழை சோற்றைச் சேர்த்து இரவில் பூசிக்கொள்ளலாம்.
தேன்
தேன், அதனுடைய நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் காரணமாக மருத்துவத்தில் உதவுகிறது. காயங்களை ஆற்றுவதிலும் தழும்புகளைக் குறைப்பதிலும் தேன் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டு டேபிள் ஸ்பூன் தேனை கால் கப் ஓட் மீலுடன் சேர்த்து தழும்புகளில் தேய்க்கலாம். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
வைட்டமின் E
தழும்புகளைக் குறைப்பதில் வைட்டமின் E முக்கியப் பங்காற்றுகிறது. மருந்துக் கடைகளில் கிடைக்கும் வைட்டமின் E கேப்சூலை உங்கள் ஃபேஸ் க்ரீம்களில் கலந்தோ அல்லது நேரடியாகவோ தழும்புகளில் தடவி வர நல்ல பலன் கிட்டும்.
Also Read – முகத்தில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளைக் குறைக்கலாம் வாங்க – 5 வழிகள்!