பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி, “இன்று எனது மறைந்த நண்பர் ராம் விலாஸ் பஸ்வானின் பிறந்தநாள். இவரது இருப்பை நான் மிகப்பெரிய அளவில் இழக்கிறேன். இந்தியாவில் மிகவும் அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அவர். சமூகத்தில் நலிந்த மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் பொது சேவைகளை செய்வதிலும் அவர் செய்த பங்களிப்புகள் எப்போதும் நினைவில் இருக்கும்” என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார். யார் இந்த ராம் விலாஸ் பஸ்வான்? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
ராம் விலாஸ் பஸ்வான், மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக இருந்தார். பீகார் மாநிலத்தில் ககாரியா மாவட்டத்தில் உள்ள ஷஹர்பன்னி எனும் கிராமத்தில் 1946-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி ஜமுன் பஸ்வான் மற்றும் சியா தேவி ஆகியோருக்கு மகனால ராம் விலாஸ் பஸ்வான் பிறந்தார். கோஷி கல்லூரி மற்றும் பாட்னா பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றுள்ளார். சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் ராம் விலாஸ் பஸ்வான் 1969-ம் ஆண்டு பீகார் காவல்துறையால் டி.எஸ்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தான் அரசியல்வாதி ஆனது குறித்து ஒருமுறை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நான் பீகாரில் 1969-ம் ஆண்டு பீகார் பப்ளிக் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதே ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது என்னுடைய நண்பர் என்னிடம் கேட்டார். `நீங்கள் அரசாங்கமாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது ஊழியராக இருக்க விரும்புகிறீர்களா? என்று, நான் அரசியலைத் தொடர முடிவு செய்தேன்” என்று தான் இறப்பதற்கு சில ஆண்டுகள் முன்பு தெரிவித்திருந்தார்.

பிரதமர்கள் விஸ்வநாத் பிரதாப் சிங், தேவகவுடா, அடல் பிகாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளார். 1977-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தியை தோற்கடித்த சுதந்திர போராட்ட வீரரும் அரசியல்வாதியுமான ராஜ் நரேன் மற்றும் மற்றொரு சுதந்திர போராட்ட வீரரான ஜெய்பிரகாஷ் நாராயணன் ஆகியோரை பஸ்வான் தீவிரமாக பின்பற்றினார். காங்கிரஸ் எதிர்ப்பு மைய அரசியலின் வழியாக தனது அரசியலைத் தொடங்கியவர். பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பகுதியான சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக நின்று தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார். 1969-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை ராம் விலாஸ் பஸ்வான் சுமார் 51 ஆண்டுகள் தீவிர அரசியல்வாதியாக விளங்கினார். மக்களவைத் தேர்தலில் சுமார் 8 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் 1977-ம் ஆண்டு முதல் 2004 வரை தொடர்ந்து வெற்றி பெற்றார். இதில் இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டும் வேறு தொகுதியில் போட்டியிட்டார். 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது ஏற்பட்ட அனுதாப அலை காரணமாக தோற்றுவிடுவோம் என்றெண்ணி வேறு தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் 1991-ல் பீகார் மாநிலத்தில் உள்ள ரோசரா தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
பீகார் மாநிலத்தின் முக்கியமான தலித் முகமாக ராம் விலாஸ் பஸ்வான் அறியப்படுகிறார். 1996-ம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட அனைத்து அரசுகளிலும் தவிர்க்க முடியாத ஆளாக திகழ்ந்தார். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு தனது சொந்த கட்சியான லோக் ஜன்ஷக்திக்கு அதிக முக்கியத்துவத்தை அளித்தார். தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதைக் கட்சியின் நோக்கமாகக் கொண்டிருந்தார். பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி என இரு கட்சிகளைச் சார்ந்துமே பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மக்களின் தேர்தல் கணக்கை சரியாக கணிக்கும் நபராக ராம் விலாஸ் பஸ்வான் அறியப்படுகிறார். அவர் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வதை வைத்தே இதனை எளிதாகக் கூற முடியும். மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருதையும் இந்த ஆண்டு வழங்கியுள்ளது. ராம் விலாஸ் பஸ்வானின் பிறந்தநாளையொட்டி அவரது மகன் சிராக் பஸ்வான் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
Also Read : திருச்சி டு ஜார்க்கண்ட்.. பழங்குடியினர் உரிமைக்காகப் போராடிய ஸ்டேன் ஸ்வாமி யார்?
Yay google is my queen assisted me to find this outstanding website ! .
I consider something really special in this site.