டிரெண்டிங் ஹேஷ்டேக் #ResignModi சர்ச்சைகள்! – பின்னணி என்ன தெரியுமா?

இந்தியாவில் கொரோனா அலை ஒருபுறம் அதிதீவிரமாக பரவிவரும் நிலையில் சோஷியல் மீடியாக்களில் #ResignModi என்ற அலை இன்னொருபுறம் அதிதீவிரமாக பரவி வருகிறது. என்ன நடக்கிறது?

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படுத்திய பாதிப்பு தொடர்பான புகைப்படங்களும் செய்திகளும்தான் சமூக வலைதளங்களை அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நோயாளிகளின் உறவினர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

படுக்கை வசதிகள் இல்லாத சூழலும் தேவையான அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத சூழலும் பல மருத்துவமனைகளில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை சரியாக கையாளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என சோஷியல் மீடியாக்களில் ஹேஷ்டேக்குகள் கடந்த சில நாள்களாக வைரலாகி வருகின்றன. “பிரதமர் மோடியை இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுத்ததுதான் இந்தியர்கள் செய்த தவறு. அதற்கு காரணமான அனைவரும் குற்றவாளிகள்” என்று சோஷியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

#ResignModi
பிரதமர் மோடி

இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என பிரச்னைகள் ஒருபக்கம் தீவிரமாக சென்று கொண்டிருக்க மறுபுறம் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, “மேற்கு வங்க தேர்தலின் கடைசி கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. கொரோனா தொடர்பான நெறிமுறைகளைப் பின்பற்றி மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். கொரோனா பரவும் நேரத்தில் பிரதமர் மோடி வாக்குகளைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறார் என எதிர்கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் தங்களது விமர்சனங்களை இந்த ஹேஷ்டேக்கின் கீழ் வைக்கத் தொடங்கினர்.

Also Read : கோவிஷீல்டு vs கோவாக்ஸின்… என்ன வித்தியாசம்?

ட்விட்டரில் `#ResignModi’ ஹேஷ்டேக் தொடர்ந்து வைரலாகிக் கொண்டிருக்க ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். ஆனால், ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த ஹேஷ்டேக் திடீரென முடக்கப்பட்டது. இதனால், ரிசைன் மோடி ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், இந்த சம்பவம் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு #ResignModi மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தியாவெங்கும் ட்ரெண்ட் ஆன இந்த ஹேஷ்டேக் முடக்கப்பட்டது தொடர்பாக ட்விட்டர் அதிகாரிகள், “ரிசைன் மோடி ஹேஷ்டேக்கை தவறுதலாக தற்காலிகமாக நாங்கள் முடக்கிவிட்டோம். இந்திய அரசு கூறியதால் நாங்கள் இதனைச் செய்யவில்லை. தற்போது அதனை சரி செய்துவிட்டோம்” என்று தெரிவித்துள்ளனர். ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் ஹேஷ்டேக்குகள் முடக்கப்படுவது அவ்வப்போது நடைபெறும் சம்பவம் தான். எனினும், தற்போது நடந்துள்ள சம்பவம் தேசிய அளவில் மட்டுமல்லாது இன்டர்நேஷனல் அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top