`Finisher’ தோனி, இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியபோது, ஃபினிஷராக அவரின் எவர்கிரீன் 5 இன்னிங்ஸ்களைத்தான் பட்டியலிட்டிருக்கிறோம்.
`Finisher’ தோனி
எனக்குள்ள Finisher-க்கு இன்னும் வயசாகலைனு மும்பைக்கு எதிரான போட்டி மூலமா மெசேஜ் கொடுத்திருக்கிறார் 40 வயசான தோனி. ஐபிஎல் தொடர்கள்ல இதுமாதிரி பல சம்பவங்கள் செய்திருந்தாலும், இந்திய அணிக்காகவும் ஃபினிஷரா கடைசி வரை களத்துல நின்னு பல தரமான சம்பவங்களைச் செய்திருக்கிறார். அப்படி எம்.எஸ்.தோனி இந்திய அணிக்காக ஃபினிஷராக செய்த 5 தரமான சம்பவங்கள் பற்றிதான் இந்தக் கட்டுரைல நாம பார்க்கபோறோம்.
இந்தியா Vs இலங்கை (போர்ட் ஆஃப் ஸ்பெயின், 2013)
கடந்த 2013 ஜூலை 11-ம் தேதி நடந்த இலங்கைக்கு எதிரான டிரை சீரிஸ் இறுதிப் போட்டி அது. இலங்கை நிர்ணயித்த 202 ரன்கள் டார்கெட்டை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 139/4 என்ற நிலையில் இருந்தபோது கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னாவோடு கைகோர்த்தார். அடுத்த சில ஓவர்களில் ரெய்னா ஆட்டமிழக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. மிரட்டலான அந்த பிட்சில் 52 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார் கேப்டன் தோனி.
கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் வீசிய 49-வது ஓவரில் விக்கெட்டை இழக்காமல் தடுப்பாட்டம் ஆடினார் இந்தியாவின் நம்பர் 11 பேட்ஸ்மேன் இஷாந்த் ஷர்மா. அந்த ஓவரில் இரண்டு ரன்களும் கிடைக்கவே, ஷமிந்தா எரங்கா கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலை. முதல் பந்தை தோனி மிஸ் செய்தார். அடுத்த இரண்டு பந்துகளில் முறையே ஒரு சிக்ஸர், பவுண்டரி என 10 ரன்கள் கிடைத்தது. 5 ரன்கள் தேவை என்கிற நிலையில், அடுத்த பந்தில் சிக்ஸரை அடித்து, இந்தியாவை வெற்றிபெறச் செய்த தோனி, அந்த மேட்சின் ஆட்டநாயகனாக ஜொலித்தார்.
இந்தியா Vs ஆஸ்திரேலியா (அடிலெய்டு, 2012)
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான காமன்வெல்த் பேங்க் சீரிஸின் நான்காவது ஒருநாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் 2012 பிப்ரவரி 12-ம் தேதி நடந்தது. 270 ரன்கள் டார்கெட்டை இந்திய அணிக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. டாப் ஆர்டரில் 92 ரன்கள் குவித்த கவுதம் காம்பீர், நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்திருப்பார். 35-வது ஓவரின் முதல் பந்தில் காம்பீர் அவுட் ஆகவே, 16 ஓவர்களில் 92 ரன்கள் தேவை என்கிற நிலையில் தோனி களமிறங்குவார். ரெய்னாவோடு (38) ஐந்தாவது விக்கெட்டுக்கு 61 ரன்களும், ஜடஜேவோடு (12) ஆறாவது விக்கெட்டுக்கு 18 ரன்களும் பாட்னர்ஷிப் கொடுப்பார்.
கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்கிற நிலை ஏற்படும். கிளிண்ட் மெக்கே வீசிய முதல் பந்தை மிஸ் செய்த அஷ்வின், இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்துக் கொடுப்பார். 4 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்கிற சூழலில், மெக்கே வீசிய மூன்றாவது பந்தை 112 மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட சிக்ஸராக விளாசுவார் தோனி. அடிலெய்டு கிரவுண்டில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய சிக்ஸர்களில் இன்றளவும் இதுவும் ஒன்று. நோ-பால் ஃபுல்டாஸாக வீசப்பட்ட அடுத்த பந்தில், இரண்டு ரன்கள் மற்றும் அடுத்த பந்தில் 3 ரன்களை தோனி எடுக்கவே, இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறும். அவர் அந்தப் போட்டியில் 58 பந்துகளில் 44 ரன்கள் எடுப்பார்.
இந்தியா Vs பாகிஸ்தான் (லாகூர், 2006)
லாகூரில் 2006 பிப்ரவரி 13-ம் தேதி நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 288 ரன்கள் டார்கெட்டோடு களமிறங்கிய இந்தியா, மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழக்கும். அதேபோல், சேஸிங்கின் 34, 35-வது ஓவர்களிலும் இரண்டு விக்கெட்டுகளை இழக்கவே, களத்தில் யுவராஜ் சிங்கோடு 7-வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கும் தோனி கைகோர்ப்பார். இந்த ஜோடி,6-வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்யும். 87 பந்துகளில் 79 ரன்களை யுவராஜ் எடுத்திருப்பார். மறுமுனையில் நின்றிருந்த தோனியோ, 46 பந்துகளில் 13 பவுண்டரிகளோடு 72 ரன்கள் சேர்த்தார்.
ஜெய்ப்பூர் ருத்ரதாண்டவம்
தோனி தனது கரியரின் ஆரம்பகாலகட்டங்களில் அதிரடி பேட்டிங்கைக் காட்டிய போட்டி 2005 அக்டோபர் 31-ல் ஜெய்ப்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி என்றே சொல்லலாம். அந்தப் போட்டியில் இந்தியா, இலங்கை நிர்ணயித்த 299 ரன்கள் டார்கெட்டை சேஸ் செய்தது. இலங்கைக்கு எதிரான 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவது போட்டியான இதை, சிக்ஸரோடு முடித்துவைத்த தோனி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் குவித்திருப்பார். இன்றளவும் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
சேஸிங்கின் முதல் ஓவரிலேயே சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்கவே, ஒன்-டவுன் பேட்ஸ்மேனாகக் களத்துக்கு வருவார் தோனி. தொடக்க ஓவர்களில் சமிந்தா வாஸ், மிடில் ஓவர்களில் உபுல் சந்தனா, முத்தையா முரளிதரன் பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பி தொடர்ச்சியாக அதிரடி முகம் காட்டுவார். 85 பந்துகளில் சதமடித்த அவர், 145 பந்துகளில் 183 ரன்கள் குவித்திருப்பார். அந்தப் போட்டியில் மட்டும் மொத்தம் பத்து சிக்ஸர்களைப் பறக்க விட்டிருப்பார். 299 ரன்கள் டார்கெட்டை இந்தியா 46-வது ஓவரிலேயே எட்டும்.
வான்கடே சம்பவம்
தோனியின் இன்னிங்ஸ்களில் இது கொஞ்சம் ஸ்பெஷலானது என்றே சொல்லலாம். இதைச் சொல்லாமல், அவரின் ஃபினிஷிங் ரெக்கார்டுகளை எழுத முடியாது. ஏனென்றால், 1983-ம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பையை வெல்லாத இந்திய அணி 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடியது. இதனால், 2011 ஏப்ரல் 2-ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
முதலில் பேட் செய்த இலங்கை, 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுக்கும். 275 ரன்கள் டார்கெட்டை சேஸ் செய்யத் தொடங்கும் இந்தியா, 31 ரன்களுக்குள் சேவாக், சச்சின் என தொடக்க வீரர்கள் இருவர் விக்கெட்டையும் இழந்துவிடும். மூன்றாவது விக்கெட்டுக்கு கம்பீர் – கோலி ஜோடி 83 ரன்கள் சேர்க்கும். 22-வது ஓவரில் இந்தியா 114/3 என்கிற நிலையில் இருக்கும்போது, யுவராஜ் சிங்குக்கு முன்னதாக தோனி களத்துக்கு வருவார். உலகக் கோப்பை தொடரில், தனது முதல் அரை சதத்தை 52 பந்துகளில் பதிவு செய்த தோனி, அந்தப் போட்டியில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உதவியோடு 79 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருப்பார். கடைசி நான்கு ஓவர்களில் 27 ரன்கள் தேவை என்கிற சூழலில், தோனி – யுவராஜ் ஜோடி போட்டியை 49-வது ஓவரிலேயே முடித்துவிடுவார்கள். அதுவும், குலசேகரா வீசிய 49-வது ஓவரின் 2-வது பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்ட தோனியின் வின்னிங் ஷாட் கிரிக்கெட்டின் கிளாசிக் ஷாட்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்த வெற்றியின் மூலம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் இந்திய அணி, உலகக் கோப்பையைக் கையிலேந்தியது.
‘Finisher’ தோனி-யின் எந்த இன்னிங்ஸ் ரொம்ப ஸ்பெஷலானது?…. கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read –
3ln4pp
15ay19