யூ டியூப் பிரபலங்கள்

யூ டியூபர்கள் மீது குற்றச்சாட்டு – யாரெல்லாம் லிஸ்ட்ல இருக்காங்க தெரியுமா?

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை மிகவும் ஆபாசமான வார்த்தைகளுடன் விளையாடி யூ டியூபில் நேரலை செய்தது உட்பட பல காரணங்களுக்காக பப்ஜி மதனும் இவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். பப்ஜி மதன் மீது சுமார் 150-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. பெண்களை ஆபாசமாக பேசிதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் இவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மேலும் சில யூ டியூப் பிரபலங்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அவர்களது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிஸ்ட்ல யார்லாம் இருக்காங்க தெரியுமா? எதுக்காக இவங்க மேல புகார் குடுத்துருகாங்க தெரியுமா? அதைப் பத்திதான் தெரிஞ்சுக்கப்போறோம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முஹைதீன் இப்ராகிம். இவர் ராமநாதபுர மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா மற்றும் திருச்சி சாதனா உள்ளிட்ட யூ டியூப் பிரபலங்கள் மீது கலாசாரத்தை சீரழிப்பதாகக் கூறி இணையதளம் வழியாக புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், “சமீப காலமாக வலைத்தளங்களில் ஆபாச பேச்சு வீடியோ பதிவுகள் அதிக அளவில் வலம் வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி யூ டியூப் , ஃபேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்பாவி மாணவர்களை வழிகெடுத்து அவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஜி.பி.முத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா மற்றும் சிக்கா என்ற சிக்கந்தர் மேலும் பலர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்த வீடியோக்களை லட்சக்கணக்கானோர் காண்கின்றனர். இவர்களின் உடல் பாவனைகளும் பேச்சுக்களும் தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும். குறிப்பாக இதை காணும் சிறுவர், சிறுமிகளின் மனதை பாதிப்பு அடைய செய்யும் வகையில் ஆபாச பதிவுகள் உள்ளன. இளைய சமுதாயத்தை பாதிக்கும் இத்தகைய இணையதளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும். மாணவர்கள் மத்தியில் விஷத்தை பரப்பும் கொடிய உள்ளம் கொண்ட ஆபாச பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இது போன்ற பதிவுகள் மேலும் தொடராமல் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் அவர்களின் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிக் டாக் மூலம் பிரபலமானவர்கள் இவர்கள். இவர்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர் ஜி.பி.முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா. இருவரும் இணைந்து பல டிக்டாக் வீடியோக்களை பதிவேற்றி உள்ளனர். டிக் டாக் தற்போது தடை செய்யப்பட்டிருப்பதால் யூ டியூப் சேனல் வழியாக இவர்கள் தங்களது ரசிகர்களுக்காக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். தாங்கள் பதிவேற்றும் வீடியோக்களுக்கு நெகட்டிவான கமெண்டுகள் வரும் சமயத்தில் அந்த கமெண்டுகளை பதிவிடுபவர்களை ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி மிகவும் தரக்குறைவாக பேசி வீடியோக்களை இவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இவர்கள் ஆபாச வார்த்தைகளை பேசும் பகுதி மட்டும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாவதும் வழக்கம். இந்த நிலையில்தான் அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் அவர்கள் மீதான புகாரை விசாரணை செய்து வருகின்றனர்.

Also Read : கொங்கு ஈஸ்வரன் எம்.எல்.ஏ-வின் சட்டப்பேரவைப் பேச்சு – சர்ச்சையும் பின்னணியும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top