கேரள சுற்றுலா நகரமான வர்க்கலாவில் தனது 18 வயதில் லெமன் ஜூஸ், ஐஸ்க்ரீம் விற்றுக்கொண்டிருந்த ஆனி ஷிவா, இப்போது அதே நகரில் சப் இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஆனி-யின் இன்ஸ்பைரிங் ஜர்னி…
கஞ்சிராம்குளம் கே.என்.எம் அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது ஆனி ஷிவா, குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி காதலனைக் கரம்பிடித்திருக்கிறார். திருமணம் முடிந்து ஓராண்டில் குழந்தை பிறந்தபிறகு சூழலே மாறியிருக்கிறது. எதிர்ப்புகளை மீறி கரம்பிடித்த காதல் கணவர் கைவிடவே, கைக்குழந்தையோடு வீதியில் நின்றிருக்கிறார். குடும்பத்தினரிடமே திரும்பலாம் என்று முடிவெடுத்த அவரை, குடும்பமும் ஆதரிக்கவில்லை. இந்த சம்பவம் நடந்த போது 18 வயதுதான் ஆனி ஷிவாவுக்கு. கலங்கி நின்ற அவர், குழந்தைக்காக வாழ முடிவெடுத்திருக்கிறார்.
கடற்கரை சுற்றுலா நகரான வர்க்கலாவில் இருக்கும் ஒரு ஆசிரமத்துக்கு சொந்தமான கடையில் லெமன் ஜூஸ், ஐஸ்கிரீம் விற்கும் கடையில் பணியில் சேர்ந்திருக்கிறார். இதுபற்றி பேசிய ஆனி, “வர்க்கலா ஷிவகிரி ஆஸ்ரமக் கடைகளில் லெமன் ஜூஸ், ஐஸ்கிரீம் விற்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறேன். கைவினைப் பொருட்கள் விற்பனை என நான் பல பிஸினஸ்களை முயன்றும் என்னால் அப்போது ஜொலிக்க முடியவில்லை. அதன்பிறகு நல்ல உள்ளம் கொண்ட ஒருவரின் உதவியோடு படித்து, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றேன்.
ஆறு மாத கைக்குழந்தையோடு ஆதரவில்லாமல் நின்றபோது குடும்பத்தோடு மீண்டும் சேர்ந்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், நடக்கவில்லை. அதன்பிறகு எனது மகனுக்காக வாழ வேண்டும் என வைராக்கியத்தோடு முடிவெடுத்தேன். அதன்பிறகு பாட்டியின் வீட்டில் மகன் ஷிவசூர்யாவோடு வாழ்ந்துகொண்டே பல்வேறு வேலைகளைச் செய்துவந்தேன். எப்போதுமே போலீஸ் ஆபிசராக வேண்டும் என்பதுதான் எனது கனவாக இருந்தது. ஆனால், காலச்சூழலில் திசைமாறி நின்றேன். ஆனால், இப்போது நல்ல உள்ளங்கள் பலருடைய ஆதரவால், என்னுடைய கனவான காக்கி யூனிஃபார்மை மாட்டியிருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. பெருமையாக உணரும் தருணம். லெமன் ஜூஸ், ஐஸ்கிரீம் விற்ற வர்க்கலாவிலேயே சப்-இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்றிருப்பது கூடுதல் மனநிறைவைத் தருகிறது. என்ன ஆனாலும் முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். மகிழ்ச்சியாக நான் பகிர்ந்த ஃபேஸ்புக் ஸ்டோரி, இன்று பலருக்கு முன்மாதிரியாக இருப்பதாக போன்கால்கள் வருகின்றன. வந்துகொண்டே இருக்கின்றன’’ என்று நெகிழ்ந்திருக்கிறார்.
18 வயதில் கைக்குழந்தையோடு ஆதரவற்று நின்ற நிலையில் இருந்து மீண்டெழுந்து இன்று வர்க்கலா போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்றிருக்கும் ஆனி ஷிவாவுக்கு வாழ்த்துகள் என கேரள போலீஸ் ட்விட்டர் ஹேண்டிலில் போஸ்ட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறது. இது வைரலாகவே, ஆனி ஷிவாவுக்குத் திரைத்துறை பிரபலங்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. வாழ்த்துகள் ஆனி..!