ஜோஜூ ஜார்ஜ்

கேரளாவின் விஜய் சேதுபதி… மலையாள சினிமாவில் ஜெயித்த ஜோஜு ஜார்ஜ் கதை!

ஒரு மனுஷனுக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்தே ‘சினிமா… சினிமா… சினிமா’னு சினிமாவைத் தவிர வேற எதுவும் தெரியாதுனு சொன்னா நம்ப முடியுதா? அப்படி ஒருத்தர் மலையாள சினிமால இருக்காரு. ஜோஜு ஜார்ஜ். ஒருகட்டத்துல “இவனுக்கு சினிமா பயித்தியம் புடிச்சிடுச்சு”னு அவரோட ஃப்ரெண்ட் சைக்காலஜிஸ்ட்கிட்ட கூட்டிட்டு போய்ருக்காரு. சைக்காலஜிஸ்ட் ஜோஜுகிட்ட பேசிட்டு வெளிய வந்து, “ சினிமால மிகப்பெரிய நடிகரா ஜோஜு வருவாரு. இல்லைனா, அதே சினிமால தோத்துப்போன ஒரு மனுஷனா இருப்பாரு”ன்றதுதான். அந்த மனுஷன் ஹீரோவா நடிக்க கிட்டத்தட்ட 20,23 வருஷம் ஆச்சு. ஆனால், ஜெயிச்சுட்டாரு. மலையாள சினிமா இன்னைக்கு ஜோஜூவை தோள்ள தூக்கி வைச்சு கொண்டாடுது. இன்னும் அந்த சினிமா பயித்தியம் குறையலை. யார் இந்த ஜோஜு ஜார்ஜ்? எப்படி இந்த மனுஷன் ஜெயிச்சாரு? இதைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

கேரளால திரிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்தான், ஜோஜூ ஜார்ஜ். சின்ன வயசுல இருந்தே ரொம்ப சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தவரு. திருவிழா, கொண்டாட்டம், நண்பர்கள் – மக்கள் கூட்டம், வயிறு நிறைய வெரைட்டியான சாப்பாடுனு வாழ்க்கையை அனுபவிச்சவரு. அதேமாதிரி தியேட்டருக்குப் போய் சினிமா பாக்குறதும், எப்படியாவது சினிமால நடிகன் ஆகணும்ன்றதும்தான் அவருக்கு கனவு. 1990-களில் கலாபவன் மணியின் மிமிக்ரி குழு கேரளால செம ஃபேமஸ். அதுல இருந்து நிறைய பேர் சினிமாவுக்கு போயிருக்காங்க. இதைப் பார்த்ததும் ஜோஜூ ஜார்ஜும் மிமிக்ரி வழியில்போக முயற்சி எடுக்குறாரு. மம்முட்டி, பிஜூ மேனன் – இப்படி மலையாள சினிமாவின் முன்னணி நாயகர்களோட குரலை பேச ஆரம்பிச்சாரு. ஆனால், கலாபவன் மணி குழுல இவருக்கு இடம் கிடைக்கலை. இருந்தாலும் விடுறதா இல்லை. எல்லா இடங்களுக்கு ஏறி, இறங்க ஆரம்பிச்சாரு. அப்புறம் ஒரு 10 வருஷம் பெயர் தெரியாத ஜூனியர் ஆர்டிஸ்டா பல படங்கள்ல நடிச்சாரு. மம்முட்டி நிறைய படங்களுக்கு இவரை ரெகமண்ட் பண்ணியிருக்காரு.

மம்முட்டிக்கும் ஜோஜு ஜார்ஜுக்கும் இடையில் உள்ள பாண்டிங் ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கானது. அவங்க ஃபஸ்ட் டைம் சந்தித்த அந்த சம்பவமே ரொம்ப சுவாரஸ்யமானது. ஒரு தடவை ஜோஜு தன்னோட ஃப்ரண்ட் ஒருத்தரை ஏர்போர்ட்ல டிராப் பண்ண போய்ருக்காரு. அப்போ, மம்முட்டியும் பிஜூ மேனனும் ஏர்போர்ட்ல இருந்து வெளிய வந்துருக்காங்க. சரியான கூட்ட நெரிசலையெல்லாம் தாண்டி போய் ஜோஜூ, மம்முட்டி முன்னால நின்னு, மம்முட்டி நடிச்ச ‘ஒரு வடக்கன் வீரகதா’ படத்துல வந்த ஃபேமஸ் வசனமான, “ஆவில்லா மக்களே, சந்துவினை தோல்பிக்கான் நிங்களுக்கு ஆவில்லா”னு அவர் வாய்ஸ்ல பேசி காமிச்சிருக்காரு. ஆனால், மம்முட்டி அதை கடந்து போய்ருக்காரு. கூட இருக்குற நண்பர்கள் எல்லாம் கிண்டல் அடிச்சிருக்காங்க. அவருக்கு அவர் வாய்ஸ்தான் நீ பேசுறனு தெரியலை போலனு. ஆனால், ஜோஜூ விடல, தன்னோட ஆம்னி கார்ல, மம்முட்டி காரை விரட்டி போய்ருக்காரு. ஒரு ரயில்வே கேட்ல மம்முட்டி நின்னதும், ஓடிப்போய் கார் கண்ணாடியைத் தட்டி அதே டயலாக்கை திரும்பவும் சொல்லியிருக்காரு, மம்முட்டி சிரிச்சிட்டு கை கொடுத்து அனுப்பியிருக்காரு.

சினிமா… சினிமா…னு அலைஞ்சு திருஞ்சு, முதல் தடவை அவருக்கு சினிமால முகம் காணிக்க வாய்ப்பு கிடைச்சது, ‘மழவில் கூடாரம்’ அப்டின்ற படம்தான். அன்னைக்குதான் அவர் காலேஜ்ல பரிட்சையும் நடந்துச்சு. ஆனால், சினிமாதான் முக்கியம்னு முக்கியமே இல்லாத ஒருசில செகண்ட் மட்டுமே வர்ற அந்த கேரக்டர்லபோய் நடிச்சிட்டு வந்தாரு. ஏற்கெனவே, சொன்னமாதிரி அடுத்த பல வருஷங்களுக்கு மின்னி மறையுற கேரக்டர்கள்தான் இவருக்கு கிடைச்சுது. அப்போ, சினிமாலாம் இனி சரிபட்டு வராது எதாவது படிச்சு வேலைக்குபோனு சொல்லி வீட்டுல உள்ளவங்க கட்டாயப்படுத்த, ஹோட்டல் மேனேஜ்மெண்ட்ல ஜோஜு சேர்ந்தாரு. கோவாவுக்கு 2 மாசம் ட்ரெயினிங் போனும் அப்போ படிச்ச சர்டிஃபிகேட் கிடைக்கும். பை நிறைய துணி, தேவைக்கு பணம் எடுத்துட்டு கோவா போறதுக்காக ரயில்வே ஸ்டேஷன் வந்தாரு. ஆனால், அவர் முன்னாடி மெட்ராஸ் ட்ரெயின் வந்து நின்றுருக்கு. கொஞ்சமும் யோசிக்கலை, மெட்ராஸ் போய் சினிமா சான்ஸ் தேடலாம்னு கிளம்பிட்டாரு. டிக்கெட்கூட எடுக்கலை. ஆனால், எதுவும் நடக்கலை. திரும்பவும் கேரளாவுக்கு வந்துட்டாரு.  

மலையாளத்துலயே ஒழுங்கா ஒரு டயலாக் பேச வறாது. இது தமிழ் வேறயானு இப்போ ஜோஜு அவரைப் பத்தி சொல்லுவாரு. சென்னைக்கு வந்து அவர் பார்த்த ஷூட்டிங் ஸ்பாட், மின்னலே. ஜி.வி.எம்-கிட்டதான் சான்ஸ் கேக்க போருக்காரு. அதுக்கப்புறம் அவர் ஃபஸ்ட் டயலாக் பேசுன படம், தாதாசாகேப். அந்தப் படத்துக்கு அப்புறம் மம்முட்டி நிறைய படத்துக்கு அவரை ரெக்கமண்ட் பண்ணியிருக்காரு. நல்லா நடிக்கிறாரு அப்டின்ற விஷயத்துனாலலாம் இல்லை. ஏதோ ஒரு ஸ்பார்க் அவர்மேல மம்முட்டிக்கு அவ்ளோதான். அந்தப் படத்துக்கு அவர் வாங்குன சம்பளம் ரூ.5000. அதையும் ஒரு அஸிஸ்டண்ட் டைரக்டர் கடனா வாங்கிட்டு போய்ட்டாராம். இன்னும் கொடுக்கலயாம். அந்தப் படத்துல அவரோட நடிப்பு ரொம்ப மோசமா இருந்துச்சுனும் பேசப்பட்டுச்சு. நிறை டைரக்டர்ஸ் அவரை செட்ல அவமானப்படுத்தியும் அனுப்பி விடுருக்காங்க. அழுதுட்டே வீட்டுக்கு வந்த நாள்களும் அவருக்கு உண்டு. இதையெல்லாம் கடந்தும் தன்னோட முயற்சியை விடவே இல்லை.

முதல் முதல்ல அவரோட படம் ஃப்ளெக்ஸ்ல வந்தது ‘கிளி போயி’ன்றதுலதான். பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ. அதைப் பார்க்க கார் எடுத்துட்டு போய்ருக்காரு. அவரோட நடிப்பை எல்லாரையும் கவனிக்க வைச்சது, பெஸ்ட் ஆக்டர் அப்டின்ற படத்துலதான். எனக்கும் நடிக்க வரும்னு ஜோஜு ஜார்ஜ் எல்லாருக்கும் இந்த படத்தின் வழியாகதான் சொன்னாரு. அப்புறம் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது ராஜாதி ராஜா படம்தான். கல்யாணம் ஆயாச்சு. பொருளாதார நிலைமை ரொம்ப மோசம். மனைவி வேற வேலைக்கு போங்கனு சொல்ற கட்டாயம். சரி, சினிமாவை விட்டுட்டு கனடாவுக்கு வேலைக்கு போலாம்னு முடிவு பண்ணும்போதுதான், ராஜாதி ராஜா வாய்ப்பு கிடைச்சுது. இந்தப் படம் இல்லைனா லைஃப்ல என்ன ஆகியிருப்பேன்னு தெரியாதுனு சொல்லுவாரு. இருந்தாலும் பெரிய ரோல்லாம் அவருக்கு அடுத்தடுத்து கிடைக்கல.

ஜோஜு வாழ்க்கைல 2018தான்  ரொம்பவே முக்கியமான ஒரு வருஷம். ஜோசப் அப்டின்ற படம் ரிலீஸ் ஆன வருஷம். ஒரு ஹீரோவா மக்கள் அவரைக் கொண்டாடுன வருஷம். சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 24 வருஷம் கழிச்சுதான் ஹீரோவாவே நடிக்கிறாரு. அந்தப் படத்துக்கு அவருக்கு தேசிய விருது, மாநில விருதுனு ஏகப்பட்ட விருதுகள் கிடைச்சுது. எல்லாத்தையும்விட அவருக்கு சந்தோஷம் என்னனா, அந்தப் படத்தைப் பார்த்துட்டு மம்முட்டி அனுப்புன மெசேஜ். “கொள்ளாம். படம், ஆக்டிங் ரெண்டுமே நல்லாருக்கு” அப்டின்றதுதான் மம்முட்டி மெசேஜ். ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி. ஜோசப் அப்டின்றதுதான் ஜோஜுவோட உண்மையான பெயர். ஜோசப் படத்துக்கு சைன் பண்ணும்போது ஜோசப்னு சைன் பண்ணியிருக்காரு. அதைப் பார்த்துட்டு, ‘உங்க உண்மையான பெயரை சைன் பண்ணுங்க’னு சொல்லியிருக்காங்க். இதுதாங்க என் பெயர்னு சொன்னதும் சின்ன கலகலப்பே நடந்துருக்கு. தன்னோட உண்மையான பெயர்ல ஒரு படத்தோட டைட்டில், அதுவும் தன்னோட லைஃப்ல திருப்புமுனையா இருந்த படம் – இதைத்தவிர வேற என்ன வேணும் ஜோஜுக்கு?

ஜோசப்புக்கு அப்புறம் பொறிஞ்சு மரியம் ஜோஸ், சோளா, சுருளி, ஹலால் லவ் ஸ்டோரி, ஜூன், நயாட்டு, மதுரம், படா அப்டினு வரிசையா ஹிட் ஃபிலிம் கொடுத்துட்டு இருக்காரு. நடிச்சா ஹீரோதான்றதுலாம் அவர் வாழ்க்கைல இல்லை. நல்ல கேரக்டர் கிடைச்சா கண்டிப்பா அதுல தன்னோட பெஸ்டை கொடுத்துருவாரு. நடிகரா மட்டும் இல்லை, தயாரிப்பாளராகவும் சார்லி, உதாரணம் சுஜாதா, சோளா, பொரிஞ்சு மரியம் ஜோஸ், ஜோசம், மதுரம்னு பெஸ்ட் படங்களை கொடுத்துருக்காரு.  ஜோஜு ஜார்ஜ் வெற்றியை ஒரே லைன்ல சொல்லணும்னா, இப்படி சொல்லலாம்… அன்னைக்கு பேனர்ல யார் கண்ணுக்கும் தெரியாமல் பாஸ்போர்ட் அளவுல இருந்த ஜோஜு ஃபோட்டோ, இன்னைக்கு பேனர் ஃபுல்லையும் ஆக்கிரமிச்சு இருக்கு. அதுதான் வெற்றி. பேய்த்தனமா சினிமாவை இன்னும் மனுஷன் காதலிக்கிறாரு. அதுனால, இன்னும் நிறைய நல்ல கேரக்டர்களை, நல்ல படங்களை மக்களுக்கு கொடுப்பாரு. அவர் லைஃப் ஸ்டோரி நம்ம விஜய்சேதுபதி லைஃப்க்கு ஈக்குவலா இருக்குறதாலதான் அவரை கேரளாவின் விஜய் சேதுபதினு சொல்லுவாங்க.

Also Read: பஞ்ச் முதல் ஃபைட் சீன் வரை… மகேஷ் பாபு யாருக்குலாம் டஃப் கொடுக்குறாரு?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top