இயக்குநர் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து விமர்சனரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘24’. டைம் டிராவல் கான்செப்டைக் கொண்டு உருவான இந்தப் படத்தில் சூர்யா மூன்று ரோல்களில் ஐந்து கெட்டப்புகளில் நடித்து கலக்கியிருப்பார். அதிலும் அவர் நடித்து மிரட்டிய ‘ஆத்ரேயா’ ரோல் சூர்யாவின் கரியர் பெஸ்ட் ரோல்களில் ஒன்று. இப்படியெல்லாம் பெருமைகளைப் பெற்ற ‘24’ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லை தெரியுமா!
‘யாவரும் நலம்’ வெற்றியைத் தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு இயக்குநர் விக்ரம் கே.குமார் நடிகர் விக்ரமுக்கு ‘24’ கதையின் அவுட்லைனைச் சொல்கிறார். இந்த அவுட்லைன் விக்ரமுக்கு மிகவும் பிடித்துப்போக மளமளவென வேலைகள் தொடங்கப்படுகிறது. ஹீரோயின் இலியானா என்றும் ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம் என்றும் இசை ஹாரிஸ் ஜெயராஜ் என்றும் மிகப்பெரிய யூனிட் ஒப்பந்தம் செய்யப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பும் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் தொடங்கப்பட்டது. ஆனால், நாளடைவில் திரைக்கதை முழுமையானதும் இரண்டு விக்ரம்களுக்கும் இடையே முட்டிக்கொண்டது. நடிகர் விக்ரம் சொன்ன கரெக்சன்களை இயக்குநர் விக்ரம் ஏற்க மறுக்க அத்துடன் படம் டிராப்பும் ஆனது.
அதன்பிறகு 2013-ஆம் ஆண்டு விஜய்யை சந்தித்து ‘24’ கதையை சொல்கிறார் இயக்குநர் விக்ரம்.கே.குமார். அசத்தலான இதன் திரைக்கதையைக் கேட்டு மிரண்டுபோன விஜய் உடனே நடிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். தயாரிப்பாளராக ஏ.எம்.ரத்னத்தையும் விஜய் தேர்ந்தெடுத்துக் கொடுக்க, ப்ரீ புரொடக்சன் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார் விக்ரம்.கே.குமார். இந்நிலையில் விஜய்க்கு திடீரென இந்தக் கதை ரொம்பவும் பரீட்சார்த்த நிலையில் இருக்கிறதோ எனவும் தன்னுடைய இமேஜுக்கு இது செட்டாகுமோ எனவும் சந்தேகம் ஏற்பட, அதைத்தொடர்ந்து அந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்வதென முடிவெடுத்தார்.
இதைத்தொடர்ந்து தமிழ்த் திரையுலகையே வெறுத்துப்போன இயக்குநர் விக்ரம்.கே.குமார், தெலுங்குக்குச் சென்று அங்கே ‘இஷ்க்’, ‘மனம்’ போன்ற சூப்பர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்தார். இந்நிலையில் ‘மனம்’ படம் வெளியானபோது அந்தப் பட ஹீரோயினான சமந்தா அப்போது மும்பையில் சூர்யாவுடன் ‘அஞ்சான்’ படப்பிடிப்பில் இருந்தார். அவருக்காக ‘மனம்’ படக்குழு ஸ்பெஷல் ஷோ ஒன்றை ஏற்பாடு செய்ய, அந்த ஷோவில் படம் பார்க்கும்படி சூர்யாவுக்கு அழைப்புவிடுத்தார் சமந்தார். அவரது அழைப்பை ஏற்று ‘மனம்’ படத்தை பார்த்த சூர்யா, விக்ரம்.கே.குமார் எழுத்திலும் இயக்கத்திலும் லயித்துப்போனார். உடனே அவரைத் தொடர்புகொண்டு தனக்கு ஏதாவது கதை இருந்தால் சொல்லும்படிக் கோரிக்கைவிடுத்தார். அப்போது அவர் மீண்டும் இந்த ‘24’ கதையை சூர்யாவுக்கு சொன்னார். இந்தமுறை எந்த தடங்களும் இன்றி விக்ரம்.கே.குமாரால் நினைத்தபடி அந்தப் படத்தை எடுக்க முடிந்தது. அவர் எதிர்பார்த்ததுபோலவே டைம் டிராவல் கான்செப்ட் கொண்ட இந்தியப் படங்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தையும் பெற்றது ‘24’.
Also Read – வாழ்நாள் முழுக்க வலி; உயிரோடு இருப்பதே குற்ற உணர்ச்சியாக இருக்கப் போகிறது… யாஷிகா வேதனை!