அடிக்குற வெயிலுக்கு இதமா ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டா எப்டி இருக்கும்னு யோசிச்சுட்டுப் போய் நேற்றுதான் ஒரு கோன் ஐஸ் சாப்பிட்டேன். அப்போதான் திடீர் யோசனை, இந்த கோன் ஐஸ் எப்படி கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு. தேடினா, கோன் ஐஸ் கண்டுபிடிச்ச கதையே சுவாரஸ்யமா இருக்கு.
தற்செயலா சில விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உலக ஹிட் ஆன வரலாறெல்லாம் எக்கச்சக்கமா இருக்கு… அந்த வரிசையில் ஹிட்டடிச்ச பல தற்செயல் கண்டுபிடிப்புகளை இந்த வீடியோ சீரிஸில் பாக்கப்போறோம். இந்த வீடியோல, கோன் ஐஸ்க்ரீம் தற்செயலா கண்டுபிடிக்கப்பட்ட கதையைப் பார்ப்போம்.
1846-ம் வருசம் வெளிவந்த ஒரு சமையல்கலை தொடர்பான புத்தகத்தில் கோன் ஐஸ் மாதிரியான ஒரு பொருளை சாப்பிட்ட வரலாறு பதிவாகி இருக்கு. ஆனா, பரவலா உலகம் முழுக்க ஐஸ்க்ரீம் பயன்பாட்டுக்கு வந்த கதையைப் பார்ப்போம். கதைனு சொல்றதுக்குப் பதிலா கதைகள்னு தான் சொல்லனும். ஏன்னா, ரெண்டு கதைகள் கோன் ஐஸ் க்ரீம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதா இருக்கு.
1904-ம் வருசம் அமெரிக்காவின் லூஸியானாவில் World’s Fair எனும் கண்காட்சி நடைபெற்றது. அக்கண்காட்சியில் Ernest Hamwi எனும் வியாபாரி Zalabia எனும் லெபனானைச் சேர்ந்த Waffle மாதிரியான ஓர் உணவுப்பொருள் விற்கும் கடையைத் திறந்திருக்கிறார். இரண்டு இரும்பு தகடுகளுக்கிடையில் இந்த ஸலாபியா தயாரிக்க உதவும் மாவை ஊற்றி சூடுபடுத்தி மொறுகலான தட்டையான ரொட்டி மாதிரியான உணவுப்பொருளாக பரிமாறப்படுவதுதான் ஸலாபியா.
அவருடைய கடைக்குப் பக்கத்தில் ஒரு ஐஸ் க்ரீம் கடையும் இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் கண்ணாடி கிண்ணம் அல்லது உலோகக் கிண்ணத்தில் தான் ஐஸ் க்ரீம்கள் விற்கப்பட்டிருக்கிறது. அந்த ஐஸ் க்ரீம் கடையில் அன்று வேகமாக ஐஸ் க்ரீம்கள் விற்பனையாகி இருக்கிறது. கழுவி வைக்கப்பட்ட கிண்ணங்கள் இல்லாமல் அவரால் ஐஸ் க்ரீம்களை விற்க முடியாமல் தவித்திருக்கிறார். பக்கத்துக்கடையில் ஈ ஓட்டிக்கொண்டிருந்த Hamwi-க்கு சடாரென ஒரு யோசனை வந்திருக்கிறது. தட்டையான ஸ்லாபிகளை கூம்பு வடிவில் மடித்து அதற்கிடையே ஐஸ் க்ரீம்களை வைத்து விற்கலாமே என யோசனை சொல்ல, ஐஸ்க்ரீம் கடைக்காரரும் ஓ.கே சொல்லி இருவருமாக சேர்ந்து கோன் ஐஸ்களை விற்றிருக்கிறார்கள். வாங்கி சாப்பிட்டவர்களுக்கும் கிண்ணத்தில் சாப்பிடுவதை விட இது சுலபமாக இருந்திருக்கிறது. ஐஸ்க்ரீமுடன் அந்த Waffle சுவையும் சேர்ந்து ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கவே கோன் ஐஸ்கள் உடனடியாக ஹிட்டடித்திருக்கிறது.
அதே கண்காட்சியில், டமாஸ்கஸிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து செட்டில் ஆன Abe Doumar என்பவரும் அதே ஸலாபியாவை விற்பனை செய்யும் கடையை வைத்திருக்கிறார். லெபனானில் இந்த ரொட்டி மாதிரியான உணவுப்பொருளுக்கு இடையில் இறைச்சியை வைத்து உண்ணப்படும் ஷவர்மா மாதிரியான உணவுப்பொருள் வெகுபிரபலம். இந்த உணவில் இறைச்சிக்குப் பதிலாக ஐஸ்க்ரீம்களை வைத்து முயற்சி செய்து பார்த்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் அவரைப்போலவே அந்தப் பகுதியில் ஸலாபியா விற்பனை செய்யும் மற்ற வியாபாரிகள் சிலரிடம் இந்த யோசனையைப் பகிர்ந்திருக்கிறார். அதில் முன்பு முதல் கதையில் குறிப்பிட்ட Hamwi-யும் ஒருவராக இருந்திருக்கலாம். தேவைப்பட்ட சமயத்தில் இந்த யோசனையுடன் சமயோசிதமாக சிந்தித்து அவர் ஸலாபியாவை கோனாக உருமாற்றி இருக்கலாம்.
இரண்டாவது கதையில் குறிப்பிட்ட Abe Doumar-ம் இன்னொரு புறம் இந்த கோன் ஐஸ்களை விற்பதில் பிரபலமாகி இருக்கிறார். இந்த ஸலாபியாவை உருவாக்கி அவற்றை கோன்களாக மாற்றும் ஒரு இயந்திரத்தையும் அவரே வடிவமைத்து உருவாக்கி பயன்படுத்தி இருக்கிறார். அவருடைய உற்றார் உறவினர்களையும் சிரியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரவழைத்து ஒரு கோன் ஐஸ் க்ரீம் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். இன்றும் Doumar’s Cones & Barbecues நிறுவனம் அமெரிக்காவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இப்படி வேறு வேறு உணவுப் பொருள்களை ஒன்றாகக் கலந்து புதிதாக ஒரு உணவுப்பொருளை உருவாக்கலாம்னா உங்களுடைய சாய்ஸ் என்னனு கமெண்ட் பண்ணுங்க.
Also Read – சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் காத்து அடைக்கிறாங்க? – Chips கண்டுபிடிச்ச கதை!