ஜம்மு-காஷ்மீர் மிக அதிகமான பனிப்பொழிவு கொண்ட எல்லை அது. ஒரு மலையாள ஷூட்டிங்குக்காக நடிகர் ஜெயராம் டீமே போய் காஷ்மீர்ல இறங்குது. அப்போ நடு ராத்திரியில ஒரு காட்சி எடுக்க மொத்தப் படக்குழுவும் மலையில ஏறுது. அங்க இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நின்னுகிட்டு இருக்காங்க. அதுல தமிழ் தெரிஞ்ச 3 வீரர்களைப் பார்க்குறார், ஜெயராம். அவங்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்கனு தெரிஞ்சதும் இன்னும் நெருக்கமாகிடுறார், ஜெயராம். அப்போ அந்த வீரர்களோட கதைகளைக் கேட்க ஆரம்பிக்கிறார். மொபைல் டவர்கள் கூட கிடைக்காத இந்த இடத்துல தனியா எப்படி நைட் முழுக்க இருக்கிறீங்கனு ஜெயராம் கேட்குறார். அதுக்கு அவங்க சொன்ன பதில்தான் அல்டிமேட் , “சார், எங்க மொபைல்ல, முறைமாமன், தெனாலி, பஞ்சதந்திரம்னு படங்கள் வச்சிருக்கோம்”னு எடுத்துக்காட்ட அதைப் பார்த்த ஜெயராம் நெகிழ்ச்சியின் உச்சத்துக்கே போயிட்டார். அவங்க அடுத்து இன்னொன்னும் அவங்க சொன்னாங்க. அதைக் கேட்டு ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே போனார், ஜெயராம். அது என்னனு வீடியோவோட கடைசில சொல்றேன். கொஞ்ச நாளைக்கு முன்னால பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவுல ஜெயராம் பண்ணின மிமிக்ரி வைரலா பரவிச்சு. அதைப் பார்க்குறப்போ என்னய்யா இவ்ளோ திறமைகளை ஒளிச்சு வச்சிருக்காரானு பலருக்கும் தோணிச்சு. ஆனா, வரலாறை திருப்பி பார்த்தா ஜெயராம் பண்ணினது அத்தனையுமே சாதனைகள்தான்… யார் இந்த ஜெயராம், அப்படி இவர் பண்ணின சம்பவங்கள் என்னனுதான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.
கும்பகோணம் பக்கத்துல இருக்குற அம்மன்குடிதான் ஜெயராமோட பூர்வீகம். பக்கா தமிழ்க்காரர்… இப்பவும் அவங்க சொந்தக்காரங்க அங்கதான் இருக்காங்க. வருஷம் ஒருமுறை சொந்த கிராமத்துக்கு போய்ட்டு சாரங்கபாணி கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் வழிபாடு செய்றதை வழக்கமா வச்சிருக்கார். ஊர்ல இருந்த சினிமா கொட்டகையில சினிமாக்களைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகியிருக்கார். நாளாக நாளாக சினிமா ஆசை வேர்விட ஆரம்பிக்கிது. அதனால சினிமா கனவை நனவாக்க பலமுயற்சிகளை மேற்கொள்கிறார். ஜெயராம் 1980-களில் கேரளாவில் அப்போது பிரபலமா இருந்த கலாபவன் இன்ஸ்ட்யூட்ல மிமிக்ரி கலைஞராகத் தொடங்கினார். அடுத்ததா National Institute of Ulsavam Sciences & Technology -ல செண்டமேளம் பற்றி படிச்சு அதுல பட்டமும் வாங்குறார். இடையில காலேஜ் முடிச்ச் ஔடனே சேல்ஸ் ரெப்ரசண்டேட்டிவ்வா வேலைக்கும் போறார். இடையே இந்த மிமிக்ரி பயணமும் தொடருது. கொஞ்சம் கொஞ்சமா ஜெயராம் பண்ணின மிமிக்ரி மக்கள் மத்தியில பிரபலமாக ஆரம்பிச்சது. அதை தொடர்ந்து தமிழ்லயும், மலையாளத்துலயும் வாய்ப்புகள் வருது.
1988 ஆம் ஆண்டு பத்மராஜனின் ‘அபரன்’ சினிமா மூலமா நடிகராவும் களமிறங்குறார், ஜெயராம். அப்போலாம் ஆக்சன் ஹீரோக்கள் கொடிகட்டிப் பறந்த காலக்கட்டம். அப்போ ஹீரோயிசத்தோட சேர்ந்து மிமிக்ரி, நகைச்சுவையும் கலந்து வெர்சடைல் நடிப்பைக் கொடுத்து மக்கள் மனசுல இடம் பிடிச்சார், ஜெயராம். இவரை பத்மராஜன்ங்குற திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும் மலையாள உலகிற்கு முதல்ல அறிமுகம் செய்து வைக்கிறார். முதல் படத்துலயே விஸ்வநாதன் உத்தமன்னு ரெண்டு கதாபாத்திரத்துல நடிக்கிறார். அப்போவே மலையாள மக்கள் மத்தியில ஜெயராம் பத்தி பேச்சும் அடிபட ஆரம்பிக்கிது. அடுத்த 4 வருஷம் முடியுறதுக்குள்ள சரசரன்னு 50 படங்களைத் தாண்டி நடிச்சி முடிச்சார், ஜெயராம். அந்த அளவுக்கு பிசியான நடிகரா வலம் வந்தார். இந்த 50 படங்கள்ல பெருவண்ணபுரத்தே விஷேசங்கள், சுபா யாத்ரானு ரெண்டு படங்கள் நடிச்சார். அது ஜோடியா நடிச்ச நடிகை பார்வதியவே திருமணமும் செய்துகிட்டார்.
முன்னணி நடிகனாக்கிய சினிமா!
அப்போ மம்முட்டி, மோகன்லால் மல்லுவுட்ல உச்சத்துல இருந்த நேரம். 1993-ம் வருஷம் இயக்குநர் ராஜசேனன் ஜெயராமை வச்சு இயக்கின ‘மேல்பரம்பில் ஆன்வீடு’ படம் ரிலீஸாகுது. வெளியான முதல் நாளே மக்கள் கொண்டாட ஆரம்பிச்சாங்க. முதல் வாரத்தோட அவ்ளோதான்.. 2-ம் வாரத்தோட அவ்ளோதான்னு நினைக்க ஆரம்பிச்சது மல்லுவுட் இண்டஸ்ட்ரி. ஆனா, நினைச்சதை விட அதிக நாள் ஓடி ஜெயராமை முன்னணி நடிகர்கள்ல ஒருத்தரா மாத்துது, ‘மேல்பரம்பில் ஆன வீடு’. வணீக ரீதியா நல்ல வசூல் கொடுத்து பாக்ஸ் ஆபீஸ் மன்னர்கள் வரிசையில இடமும் பிடிக்கிறார். ஜெயராம்-ஷோபனா கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க்கவுட் ஆகியிருந்ததும் அதுக்கு ஒரு முக்கியமான காரணம். அதனாலயே அடுத்து ‘த்வானி’ படம் மூலமா மறுபடியும் அந்த ஜோடி ஒண்ணு சேர அதுவும் ஹிட்.. இப்படி மலையாளத்துல அடுத்தடுத்து ஹிட் கொடுத்துட்டே போனார் ஜெயராம். அடுத்தடுத்து நான்ஸ்டாப் ஹிட் மோடுதான். அதுல சிஐடி உன்னிகிருஷ்ணன் பி.ஏ., பி.எட்., புதுக்கோட்டையிலே புதுமணவாளன், அனியன் பாவா சேத்தன் பாவா, தூவல் கொட்டாரம், கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து, கோடையில் பெத்லகேம்னு வரிசையா ஹிட் சரவெடிகளை வெடிச்சுக்கிட்டே வந்தார். இவங்களுக்கு மலையாளத்துல ரொம்ப பிடிச்ச நடிகைனா அது மஞ்சு வாரியர்தான்னு பல பேட்டிகள்ல சொல்லியிருக்கார்.
ஜெயராம் ஸ்பெஷல்!
கலாபவன் இன்ஸ்ட்யூட்ல மிமிக்ரி கலைஞரா தன்னோட வாழ்க்கையை துவக்கினதால நடிப்புக்கு அது பெரிசாவே கைகொடுத்தது. இவரோட மிமிக்ரிக்கு, மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி தொடங்கி பல உச்ச நடிகர்களும் ஃபேனா இருந்தாங்க. அதனாலயோ என்னவோ இவரை யாரும் போட்டியா நினைக்கலை. ஆரம்பக் காலக்கட்டத்துலயே மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபினு பல நடிகர்கள்கூட இணைஞ்சும் படம் பண்ணினார். ஜெயராம் மிமிக்ரி தாண்டி, செண்டைமேளம் வாசிப்பாளர், பாடகர், விவசாயி, நல்ல நடிகர், திரைக்கதை, எழுத்துனு பல பரிமாணங்களை வச்சிருக்கார். இதுபோக இவருக்கு யானைனாலே பிரியம். வருஷம் வருஷம் ஓணத்துக்கு தயாராகுறப்போ, யானைகளை பராமரிக்கிறதுல கொஞ்சம் ஆர்வமா போய் வேலை பார்த்திருக்கார். அப்படியே ஒரு யானையை வீட்டுக்கு கூப்பிட்டு வந்து வளர்க்கவும் ஆரம்பிச்சிட்டார் ஜெயராம். அந்த அளவுக்கு யானை பிரியர்.
நோ ‘ஈகோ’!
ஜெயராம்க்கு ஹீரோ, வில்லன், குணச்சித்திரம்னு எதுவும் முக்கியம் கிடையாது. ‘கதை நல்லா இருக்கணும். அதுல தன்னோட கேரெக்டர் நல்லா இருக்கணும்’ங்குறதுதான் அவரோட பாலிசி. ஹீரோவா பண்ண ஆரம்பிச்ச பின்னால கூட, காமெடி, குணச்சித்திரம், வில்லன்னு பல ரோல்கள் பண்ணியிருக்கார். இதுல பல படங்களுக்கு அவர் பில்லராவும் இருந்திருக்கார்.
சென்னை செட்டில்!
கேரளாவுல மிகப் பெரிய ஸ்டார். ஆனா குடும்பம் சென்னையில செட்டிலாகுது. அதுக்குப் பின்னால ஒரு கதையும் இருக்கு. தொடர்ச்சியா மலையாளத்துல வாய்ப்புகள் குவிஞ்ச நேரத்துல தமிழ்லயும் வாய்ப்புகள் குவிஞ்சது. அதனால திருமணம் ஆகி தன் மனைவியை சென்னையில வாடகைக்கு ரூம் எடுத்து தங்க வைக்கிறார். தினமும் ஷூட்டிங்க்கு போய்ட்டு லேட்டா வர்றதால, வாடகை ரூம் வேணாம், ஒரு வீடு எடுத்து தங்க வச்சார். ஆனா, தொடர்ந்து தமிழ்ல படவாய்ப்புகள் வந்ததால, ஒரு வீட்டை சொந்தமாவே வாங்கி அவங்களை குடிவச்சார். அப்புறம் குழந்தைங்க பொறந்தாங்க. அவங்களை ஸ்கூல்ல சென்னையில படிக்க வைக்க வேண்டியிருந்ததால, அப்படியே குடும்பம் சென்னையிலயே செட்டில் ஆகிடுச்சி. அதுக்கப்புறமா ஜெயராம் மட்டும் ஷூட்டிங்க்காக வெளியே போய் நடிச்சுகிட்டு வந்தார்.
தமிழ் படங்களில் தனித்துவம்!
தமிழ்ல முதல்முதலா இயக்குநர் விக்ரமனோட கோகுலம் படத்துமூலமா அறிமுகம் ஆகுறாரு. முதல் படத்துல அர்ஜூன் நடிச்சிருந்தாலும், ஜெயராம் பண்ணினது புனிதமான காதலன் கதாபாத்திரம். அதைக் கச்சிதமா பண்ணி கவனிக்க வச்சார். அதுக்கப்புறமா புருஷ லட்சணம், கோலங்கள்னு படங்கள் பண்ணினவருக்கு, 95-ல முறைமாமன் படம் கிடைக்கிது. இந்தமுறை ஹியூமர் கதை, கவுண்டமணியோட சேர்ந்து பண்ணின காமெடி இன்னைக்கு வரைக்கும் பார்த்தாலும் சலிக்காத அளவுக்கு தன் நடிப்பை கொடுத்திருப்பார், ஜெயராம். அடுத்ததா பெரிய இடத்து மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் கெஸ்ட் அப்பியரன்ஸ்னு அதிகமான படங்கள் பண்ணினார். இப்போதான் அவரோட தமிழ் சினிமா கெரியர்ல அந்த முக்கியமான படம் கிடைக்குது. அந்த படத்தோட பெயர் தெனாலி. கடைசியா முறைமாமன்ல பண்ணின காமெடி ஜானர், இந்த முறை ஆப்போசிட்ல கமல்.. ரெண்டுபேரும் சேர்ந்து பண்ணின காமெடி அட்ராசிட்டி வேறலெவல் இருக்கும். அடுத்ததா மறுபடியும் பஞ்ச தந்திரம் படத்துல கமலோட ஒண்ணு சேர்றார். இந்த முறை மொத்த டீமே ஹியூமர் பண்ணுது, அதுக்கு இடையில ஊர்வசிக்கு பின்னால இவர் பண்ணின’ சீ வைடி போன கீழ’ங்குற மிமிக்ரி குபீர் சிரிப்பை வரவழைச்சது. இதுமாதிரி ஜெயராம் அங்கங்க தூவுன காமெடிகள் நல்லா ஒர்க்கவுட் ஆகியிருந்தது. அடுத்ததா, நளதமயந்தி, பரமசிவன், ஏகன்னு நடிச்சவர் சரோஜா, தாம்தூம் படங்கள்ல நெகடிவ் கேரெக்டர்ல நடிச்சு இன்னொரு டிரான்ஸ்பர்மேசன் காட்டுனார். அடுத்ததா மறுபடியும் ஸ்ட்ரிக்ட் ஆர்மி ஆபீசரா வந்து விஜய்கூட சேர்ந்து காமெடியில கலக்கினார். அடுத்ததா புத்தம்புதுகாலையில மறுபடியும் கலக்கினார். இப்போ பொன்னியின் செல்வன் படத்துல நம்பி கதாபாத்திரத்தை பண்ணியிருக்கார். டிரெயிலர்லயே அவருக்கான அந்த கேரெக்டருக்கு கச்சிதமா பொருந்தியிருக்கார், ஜெயராம். தமிழில் இதுவரை பண்ணின படங்கள்ல ஜெயராம்க்குனு ஒரு தனித்துவமான காட்சி எப்பவுமே பேசப்படுற வகையில இருக்கும்.
Also Read – ரேடியோ ஜாக்கி டு கேங்ஸ்டர்… ரமேஷ் திலக்கின் சினிமா பயணம்!
சிறந்த விவசாயி!
இதுவரைக்கும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சு முடிச்சு, தமிழ்நாடு, கேரளா மாநில விருதுகள், பிலிம்பேர் உட்பட இந்திய அரசின் பத்மஶ்ரீ விருது வரைக்கும் வாங்கி குவிச்சிருக்கார். 12 வருஷத்துக்கு முன்னால எர்ணாகுளம்கிட்ட இருக்கிற பெரும்பாவூர் பகுதியில ஆனந்த் ஃபார்ம்ஸ்ங்குற பால் பண்ணையை 5 மாடுகளோட தொடங்கினார். அதை முன்மாதிரி பண்ணையாக செயல்படுத்தியும் காட்டினார். இப்போ 8 ஏக்கர் நிலத்துல 60 -க்கும் மேல பசுக்களை தன்னோட பண்ணையில வச்சு வளர்த்து வர்றார். இவரோட விவசாய பணிகளை பார்த்த கேரள அரசு சிறந்த விவசாயி விருது கொடுத்தும் கவுரவிச்சிருக்கு.
காஷ்மீர்ல ராணுவ வீரர்கள் சொன்னதை கடைசியில சொல்றேன்னு சொல்லியிருந்தேன்ல அது என்னன்னா “சார், நீங்க இதுமாதிரி பெயர் சொல்ற கதாபாத்திரங்கள் அதிகமா பண்ணனும். தினமும் நேரம் போகாம இருந்தாலோ, டூட்டில தனியா நிற்கும்போதோ உங்க படம்தான் சார். ஹீரோவாத்தான்னு இல்லை, என்ன கேரெக்டர் கெடைச்சாலும் நல்லா இருந்தா அதை பன்ணிடுங்க. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படங்கள்ல உங்க படங்கள் அதிகமா எங்ககிட்ட இருக்கு. அதைப் பார்க்குறப்போ களைப்பே தெரியாது’னு சொல்லியிருக்காங்க
எனக்கு இவர் நடிப்புல பிடிச்சது தெனாலி டாக்டர் கைலாஷ் கேரக்டர்தான். உங்களுக்கு எது பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.