போட்டி தொடங்குவதற்கு முன்னரே ஹெல்மெட்டுடன் பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன் தீபக் ஹூடா இன்ஸ்டாவில் பதிவிட்ட போட்டோ சர்ச்சையாகியிருக்கிறது. பின்னணி என்ன?
தீபக் ஹூடா
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றன. லீக் சுற்றில் ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி துபாய் மைதானத்தில் கடந்த 21-ம் தேதி நடந்தது. இந்தப் போட்டியில் பிளேயிங் லெவன் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, மதியம் 2 மணியளவில் பஞ்சாப் வீரர் தீபக் ஹூடா ஹெல்மெட்டுடன் இருக்கும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். `Here we go @punjabkingsipl’ என்ற கேப்ஷனுடன் அவர் பகிர்ந்திருந்த போட்டோ சர்ச்சையாகியிருக்கிறது. இதுகுறித்து பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புக் குழு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.
பின்னணி என்ன?
பிளேயிங் லெவனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பாக, அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்கள் பற்றிய தகவல்களை வெளியே தெரிவிப்பது பெட்டிங்குக்கு வழிவகுக்கும் என்பதால் தடை செய்யப்பட்ட செயலாகும். இந்த அடிப்படையிலேயே தீபக் ஹூடாவின் ஹெல்மெட் போட்டோ சர்ச்சையாகியிருக்கிறது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புக் குழு அதிகாரி ஒருவர், `அவரது பதிவில் பிளேயிங் லெவன் பற்றிய தகவல்கள் இல்லை. இருப்பினும், பிசிசிஐ-யின் வழிகாட்டுதல்களை அவர் மீறியிருக்கிறாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். வீரர்கள் எதையெல்லாம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதற்கு பிசிசிஐ தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
பிசிசிஐ ஊழல் தடுப்புக் குழுவின் முன்னாள் தலைவர் அஜித் சிங் கூறுகையில், “கடந்த ஐபிஎல் தொடரின்போது வீரர்கள் சமூக வலைதளங்களில் பகிரும் தகவல்கள், ரசிகர்களுடன் கலந்துரையாடல் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். கொரோனா பெருந்தொற்று சூழலால் தொடர் நடைபெறும் மைதானங்களின் எண்ணிக்கையும் குறைவு. அதிகம் பயணிக்க வேண்டிய சூழலுல் இல்லை என்பதால், பெட்டிங் தொடர்பாக வீரர்களை சமூக வலைதளங்கள் வாயிலாக அணுக அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால், சமூக வலைதளங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்தோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.