இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸுடனான நடிகர் வடிவேலுவின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. வேறு படங்களில் வடிவேலு நடிக்க இனி எந்த பிரச்னையும் இல்லை என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது. என்ன நடந்தது?
இம்சை அரசன் 24-ம் புலிகேசி
இயக்குநர் சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் 2006-ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்தது. நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் முதல்முறையாக நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தநிலையில், எஸ் பிக்சர்ஸ் – சிம்புதேவன் – வடிவேலு கூட்டணியில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் `இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் 2017-ல் தொடங்கப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டன.
இந்தநிலையில், வடிவேலு – தயாரிப்பு தரப்பிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், 10 நாட்கள் ஷூட்டிங்கோடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஷூட்டிங்குக்காகப் பல கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட செட், வாடகை என கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுத்தியதாக நடிகர் வடிவேலு மீது இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். இதனால், நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது.
லைகாவின் சமாதானம்
ரெட் கார்டு போடப்பட்டதால் நான்காண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் வடிவேலு. இந்தநிலையில், எஸ் பிக்சர்ஸ் – வடிவேலு இடையே சமாதானம் ஏற்பட்டிருப்பதாகத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது. இரு தரப்பையும் பேசி சமாதானப்படுத்தியதில் சுபாஷ்கரனின் லைகா பிக்சர்ஸின் பங்கு மிகப்பெரியது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். ஷங்கரின் இந்தியன் – 2 படத்தைத் தயாரித்து வரும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் இருதரப்பையும் பேசி சமாதானப்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து, இயக்குநர் சுராஜின் `நாய் சேகர்’ ஷூட்டிங்குக்கு உற்சாகமாகத் தயாராகி வருகிறார் வைகைப்புயல். இந்தப் படத்தோடு வடிவேலு நடிக்கும் 5 படங்களைத் தயாரிக்க லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இது வடிவேலுவை உற்சாகப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். லைகா தயாரிப்பில் 5 படங்கள் தவிர, முன்னணி நடிகர்களோடு நடிக்கவும் அவர் தயாராக இருக்கிறார் என்கிறார்கள் வடிவேலுவுக்கு நெருக்கமானவர்கள்..
வெல்கம் பேக் தலைவா..!
Also Read – ரோலிங் ஸ்டோன் அட்டைப்படத்தில் `தெருக்குரல்’ அறிவு… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!