டெல்லி இந்தியா கேட் பகுதியில் 1972-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 50 ஆண்டுகளாக எரிந்துகொண்டிருந்த அணையா விளக்கான அமர் ஜவான் ஜோதி, போர் நினைவுச் சின்னத்தில் இருக்கும் ஜோதியோடு இணைக்கப்பட இருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவு கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அமர் ஜவான் ஜோதியின் வரலாறு என்ன… தெரிஞ்சுக்கலாமா?
அமர் ஜவான் ஜோதி
1971 டிசம்பர் 3-16 தேதிகளில் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் புரட்சி வெடித்து தீவிரமான நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவ வீரர்கள் எதிர்த்து நின்றனர். போரில் இந்தியா வெற்றிபெறவே பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்று வங்காளதேசம் என்ற புதிய நாடு உருவானது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி மரியாதை செய்ய வேண்டும் என்று நினைத்த அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதியை ஏற்படுத்த உத்தரவிட்டார்.
அதன்படி, 1971 இந்திய – பாகிஸ்தான் போரில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் நினைவையும் அவர்களது தியாகத்தையும் போற்றும் வகையில் இந்தியா கேட்டில் பளிங்குக் கற்களால் ஆன அமர் ஜவான் ஜோதி நினைவிடம் அமைக்கப்பட்டது. 1972-ம் ஆண்டு குடியரசு தினமான ஜனவரி 26-ல் ஜோதியை பிரதமர் இந்திரா காந்தி ஏற்றிவைத்து, வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
அணையா விளக்கு
அமர் ஜவான் என்ற சொல்லுக்கு அழிவே இல்லாத வீரன் என்று பொருள். அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில், மார்பிள்களால் கட்டமைக்கப்பட்ட கல்லறை ஒன்று இடம்பெற்றிருக்கும். அதன்மேல், L1A1 செல்ஃப் லோடிங் ரைபிளும் ராணுவ வீரர் ஒருவரது தலைக்கவசமும் அடையாளமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கும். கல்லறையின் நான்கு புறங்களிலும் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கும். அதில், ஒரு விளக்கு மட்டும் ஏற்றப்பட்ட நாள் முதல் அணையா விளக்காக இருக்கிறது. குடியரசு தினம், சுதந்திர தினங்களில் நான்கு விளக்குகளும் சுடர்விட்டு எரியும். 2006 வரை அணையா விளக்குக்கு எரிபொருளாக எல்.பி.ஜி பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு சிஎன்ஜி எரிபொருளுக்கு மாற்றப்பட்டது. இரவு, பகல் என ஆண்டின் 365 நாட்களும் ராணுவம், கப்பல் படை, விமானப்படை வீரர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டிருப்பார்கள்.
அமர் ஜவான் ஜோதி – நடைமுறைகள்
1972 – 2019: குடியரசு தின அணிவகுப்புக்கு முன்பு நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் இங்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது மரபாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. 1971 போரில் உயிர் நீத்த அடையாளம் தெரியாத வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் அதை அவர்கள் செய்து வந்தனர்.
2020: குடியரசு தினத்தன்று முப்படை தளபதிகள் சூழ வந்த பிரதமர் மோடி, மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
Also Read:
தேசிய போர் நினைவுச் சின்னம்
இந்தியா கேட் காம்ப்ளக்ஸிலேயே அமர் ஜவான் ஜோதியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்ட தேசிய போர் நினைவுச் சின்னத்தைக் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் மோடி திறந்துவைத்தார். அங்கும் ஒரு அணையா விளக்கு ஏற்றப்பட்ட நிலையில், ஒரே இடத்தில் அருகருகே இரண்டு அணையா விளக்குகளா என்ற கேள்வி அப்போதே எழுந்தது. ஆனால், இந்த விவகாரம் குறித்து அப்போது பதிலளித்த ராணுவ அதிகாரிகள், இந்திய வரலாற்றில் பிரிக்க முடியாத அங்கமாக அமர் ஜவான் ஜோதி தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் என்று விளக்கம் கொடுத்திருந்தனர்.
அமர் ஜவான் ஜோதியில் வீரர்கள் பெயர்கள் எதுவும் இடம்பெற்றிருக்காது. ஆனால், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் 1947-48 பாகிஸ்தானுடனான போர் தொடங்கி கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிர் நீத்த ராணுவ வீரர்கள் வரையிலான 25,942 வீரர்களது பெயர்கள் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். இரண்டு அணையா விளக்குகளைப் பராமரிப்பதில் ஏற்படும் சிக்கல்களைக் களையும் நோக்கிலேயே அமர் ஜவான் ஜோதி நெருப்பை போர் நினைவுச் சின்னத்தில் இருக்கும் அணையா விளக்குடன் முறைப்படி இணைக்க இருப்பதாகக் காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.
Also Read – MGR: நாடோடி மன்னன் படம் மூலம் எம்.ஜி.ஆர் சொன்ன மெசேஜ்..!