நாடாளுமன்ற அருங்காட்சியகத்தில் காந்தி, அம்பேத்கர், படேல், நேரு, பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ் என நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்களின் படங்களும் சிலைகளும் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நிறுவப்பட்டிருக்கின்றன. விடுதலைப் போராட்ட வீரர்கள், மக்களுக்கு உழைத்த மாபெரும் தலைவர்கள், அறிஞர்கள் என பலருக்கும் அங்கு உருவப்படங்களும் சிலைகளும் உண்டு. அந்த நினைவுச் சின்னங்களில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. அந்த பழங்குடிப் போராளி “பிர்ஸா முண்டா”.
பழங்குடி மக்களின் நலனுக்காக நில உடைமையாளர்களையும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும், ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கும் எதிராக நவீன இந்திய வரலாற்றில் முதன்முறையாக “நசுக்கப்பட்ட குரல்களின் பிரதிநிதியாய் ஓங்கி ஒலித்த குரல்” பிர்ஸா முண்டாவுடையது.
அப்போதைய வங்காள மாகாணமும் தற்போதைய பீகார், ஜார்கண்ட் பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்களின் நலனுக்காக போராடியவர். 1890-ம் ஆண்டு இந்தியாவில் நிலவிய பெரும் பஞ்சத்தின் போது, பழங்குடியின மக்களின் பயிரிடும் உரிமைக்காக செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை திரும்பச் செலுத்த அரசு வலியுறுத்தியது. பஞ்சம் தலைவிரித்தாடும் சூழலில் இப்படி வரி வசூல் செய்வது மனிதத்தன்மைக்கு எதிரானது என்று பழங்குடி மக்களைத் திரட்டிப் போராடினார் பிர்ஸா.
பழங்குடியின மக்களுக்காக அவர் அம்மக்களை ஒன்று திரட்டி கொரில்லாத் தாக்குதல் முறையில் அந்த அடர்காடுகளிலும் மலையிடுக்குகளிலும் அவர் நடத்திய போராட்டத்தின் அதிர்வுகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்தது.
குரலற்றவர்களாய் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளான ஓர் இனத்தில் இருந்து ஒருவன் குரல் எழுப்புகிறான். ஓர் இனம் போராட எழுந்து நிற்கிறது. அதற்கும் மேலாக அவர்களின் நோக்கமும் முழக்கமும் இதுவரை ஆட்சியாளர்கள் கேட்டிராதது.
“உழுபவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும்” என்ற பிர்ஸா முண்டாவின் குரல், அப்போது இந்திய சமூகத்துக்கே ஒரு புதிய முழக்கமாக இருந்தது. `நிலம் உழுபவனுக்கு எப்படி சொந்தமாக இருக்க வேண்டுமோ அப்படி இந்த நாடும் நம்மால் மட்டுமே ஆட்சி செய்யப்பட வேண்டும்’ என்ற முழக்கத்தையும் முன்னெடுத்தார்.
“இங்கிலாந்து அரசியின் ஆட்சி மாண்டு, நமது அரசாங்கம் உதித்தெழட்டும்” என்ற அவருடைய இன்னொரு முழக்கமும் ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. நில உடைமையாளர்களையும் அரசையும் அவருடைய இந்த முழக்கங்கள் ஒரே நேரத்தில் பீதியடையச் செய்தது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் நடந்த முதல் பழங்குடிகளின் போராட்டமான பிர்ஸா முண்டாவின் போராட்டத்தை ஒடுக்க ஆங்கிலேயே அரசு தன் அசுரபலத்தைப் பயன்படுத்தியது. ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கபட்ட பிர்ஸா முண்டா சிறையிலேயே மரணமடைந்தார்.
பிர்ஸா முண்டா வாழ்ந்த, அவர் போராடிய நிலப்பரப்பில் இருந்து முற்றிலும் வேறு ஒரு நிலப்பரப்பான கர்நாடகாவின் குடகுப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் இன்றும் அவருடைய பிறந்தநாளை தங்கள் உரிமைத்திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். பிர்ஸா முண்டாவின் பிறந்த தினத்தை பழங்குடியினர் நாளாக இந்திய அரசு கொண்டாடுகிறது.
பழங்குடி மக்களின் மரபான செவிவழிப்பாடல்களாகவும், நாட்டுப்புறக் கதைகளாகவும் பிர்ஸா முண்டாவின் வரலாறு காலந்தோறும் வரலாற்றில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. நாவல்களாகவும், திரைப்படங்களாகவும் பிர்ஸா முண்டா மீண்டும் மீண்டும் நினைவு கூறப்பட்டு வருகிறார். திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பிர்ஸா முண்டாவின் வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கி