தமிழ் சினிமாவுல இயக்குநர் சிகரம், இயக்குநர் இமயம், இயக்குநர் இந்தியப் பெருங்கடல், இயக்குநர் வங்காள விரிகுடானு எத்தனையோ இயக்குநர்களை நடிகர்களாகப் பார்த்திருக்கிறோம். உச்சத்திலும் உச்சமா, உலக திரைப்பட வரலாற்றிலேயே முதன் முறையாக 10 இயக்குநர்கள் கதையின் கதாபாத்திரங்களாக வாழ்ந்த மாயாண்டி குடும்பத்தாரை பார்த்ததே நம்ம பயகதேன். இதேபோல, அரிதாரத்த பூசின நடிகர்கள் சிலர் இயக்குநரா அவதாரம் எடுத்த சம்பவங்களும் இருக்கு. அதுல சிறப்பான சில சமாசாரங்களும் இருக்கு. என்னன்னு பார்த்துருவோமா…
மன்மத லீலையை வென்றவன் யார் இங்கே. சொன்னது நான் இல்ல.எம்.கே.டி!
தமிழ் சினிமாவோட முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். அந்த காலத்துல இவர் நடிச்ச படம் எல்லாம் மழை பெய்யுற பிரின்ட்டா இருந்தாலும், வசூல் மழை பொழிஞ்சுருக்கு. ஹரிதாஸ்னு ஒரு படம். சென்னை பிராட்வே தியேட்டர்ல தொடர்ந்து மூணு வருஷம் ஓடியிருக்கு. சிந்தாமணி'ன்ற படம் அடிச்ச ஹிட் காரணத்துல, மதுரைல ஒரு தியேட்டர் பெயரையே சிந்தாமணினு மாத்திட்டாய்ங்க. இப்படி, ஆப்பனன்டே ஆளே இல்லாம சோலோவ சுத்திட்டு இருந்தவரை ஒரு கொலை கேஸ்ல உள்ளே தூக்கிப் போட, அதுக்குப் பிறகு நிலைமை தலைகீழாகிப் போச்சு. ரிலீஸாகி வந்து நடிச்ச படமெல்லாம் மல்லாக்க படுக்க,
நானே டைரக்ஷன்ல இறங்குறேன்’னு இவர் இயக்கின படம்தான் `புதுவாழ்வு’. போர்டுலாம் புதுசு புதுசா மாத்துற. ஆனா, டீத்தூள மாத்த மாட்றியேன்ற மாதிரி மக்கள் நினைச்சாங்களோ என்னவோ, 18 பாடல்கள் கொண்ட இப்படத்தை பப்படம் ஆக்கிட்டாங்க.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், இதுவரை மூணு படங்களை இயக்கியிருக்கார். அதுல முதல் படம்தான் நாடோடி மன்னன். ரீடேக், ரீஷூட்னு ரீலை எல்லாம் கேன் கேனா காலி பண்ணதுல செலவு எக்கசக்கமா எகிறிடுச்சு. இப்படி இயக்குநர் எம்.ஜி.ஆர், ஷூட்டிங்ல சொதப்பினதைப் பார்த்து இது நாடோடி மன்னன் இல்ல கோமாளி மன்னன்-ன்னு ஒரு நாளிதழ் கலாய்ச்சு கட்டுரையே எழுதிடுச்சு. அப்படி இப்படி நண்பர்கள் கிட்டே உதவி கேட்டு, எப்படி எப்படியோ ஷூட் பண்ணி முடிச்சு படம் ரிலீஸுக்கு ரெடியாகிடுச்சு. `படம் வென்றால் மன்னன். இல்லையேல் நாடோடி’னு மக்கள் கிட்டே மாஸா ஒரு டயலாக் சொல்றார் எம்.ஜி.ஆர். அவ்வளவுதான், படம் தாறுமாறா ஹிட் அடிக்குது. விமர்சகர்கள் கொண்டாடுறாங்க, காசும் அள்ளுது. புரட்சி தலைவர்னு புது பட்டம் உருவாகுது. சும்மா ஹைட்ல பறக்குது.
எம்.ஜி.ஆர் பரிசா கொடுத்த கர்லா கட்டையை சுத்தும்போது இந்த சிந்தனை வந்துச்சான்னு தெரியல, புரட்சி தலைவர் நாடோடி மன்னன் எடுத்தமாதிரி புரட்சி தமிழன் சத்யராஜ், வில்லாதி வில்லன்னு ஒரு படம் இயக்கி நடிச்சார். சாதி வெறி பிடிச்ச ஒரு வயசான வக்கீல், புரட்சி பேசுற ஒரு இளைஞன், ஹிட்லர் கெட்டப்ல இன்னொரு கேரக்டர்னு மூணு வித்தியாசமான கதாபாத்திரங்கள்ல மாய்ஞ்சு மாய்ஞ்சு சத்யராஜ் நடிச்சுருந்தும், நக்மா ரசிகர்களால படம் ஏகபோக வெற்றி அடைஞ்சது.
நடிப்புலதான் ஜித்து ஜில்லாடின்னு பார்த்தா, டைரக்ஷன்லேயும் நான் மிட்டா கில்லாடின்னு காமிச்சுருப்பார் உலக நாயகன். முதல் படம் ஹேராம்’. வழக்கம்போல புரியலைன்னு தலையை சொறிஞ்சுட்டு கிளம்பிடுச்சு தமிழ் சமூகம். சரியா சொல்லி வெச்ச மாதிரி பத்து வருஷம் கழிச்சு அலாரம் வெச்சு எழுந்து, கல்ட் படமாக்கி கொண்டாட ஆரம்பிச்சுடுச்சு. நான்தான் சகலகலா வல்லவன்னு அவர் பாடுனது சரிதான்னு சொல்ற மாதிரி, படத்தோட ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டையும் செதுக்கியிருப்பார் இயக்குநர் கமலஹாசன். ஆனா, வணிக ரீதியா பெரிய வெற்றியை அடையாம போனதால அடுத்து வெறியாகிவிருமாண்டி’-னு சிறப்பான தரமான ஒரு சம்பவத்தை செஞ்சுருப்பார். ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம்னு கமல் இயக்கின முதல் மூணு படமும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல.
Also Read – பிரின்ஸ்.. வாரிசு.. வாத்தி.. யம்ம்ம்மோ, தயவு செஞ்சு எங்களை விட்ருங்கணா!
அடுத்ததா ஆட்டோகிராப் `சேரன். அவசரப்படாதீங்க. அவர் இயக்குநரா இருந்து நடிகரா மாறினவர்தான். ஆனா, அவரோட திரைக்கதையை ஒரு நடிகர் படமா இயக்கினார். அது வேற யாருமில்ல நம்ம சூப்பர் ஹீரோ, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்தான். படம் பெயர் `தலைமகன்’. படம் டைரக்ட் பண்றதென்ன கம்ப சூத்திரமா, எங்களுக்கும் எல்லா சூதும் தெரியும்னு நயன்தாரா, வடிவேலு, குஷ்பு, கே.எஸ்.ரவிக்குமார்னு படத்துல எத்தனையோ சீட்டுகளை அள்ளிப்போட்டு ஆடியும் கடைசி வரை ரம்மி சேரவே இல்ல. கூடவே ரிலீஸான வரலாறு, வல்லவன், வட்டாரம்னு `வ’ வரிசை படங்கள் கூட ஸ்பேரிங் போட்டு வாயிலேயே அடி வாங்கினதுதான் மிச்சம்.
வல்லவன்-னு ஆரம்பிச்ச பிறகு, எப்படி அதைப் பத்தி பேசாம இருக்க முடியும்? வரலாறு, ஈ, வட்டாரம், நம்ம சுப்ரீம் ஸ்டாரோட தலைமகன்னு இத்தனை படங்களுக்கு இடையில ரிலீஸாகியிருந்தும், வல்லவன்’ படத்துக்கு படு பயங்கரமான ஓபனிங். அதுக்கு காரணம் ரெண்டே ரெண்டு போஸ்டர். ஒண்ணுல, ரீமாசென் கூட நிக்குற சிம்பு அவர் உதட்டை அவரே கடிச்சுட்டு இருப்பார். இன்னொண்ணு, நயன்தாரா கூட நிக்குற சிம்பு, நயன்தாரா உதட்டை கடிச்சுட்டு இருப்பார். அம்புட்டுதேன்! ரக்கர்ட் கேர்ள் ரீமா சென், சாக்லேட் கேர்ள் நயன்தாரான்னு இரண்டு பேரோடையும் வல்லவன் பண்ற ரொமான்ஸ். திருச்சிற்றம்பழத்துக்கு முன்னாடியே கேர்ள் பெஸ்டியின் மகத்துவத்தை பேசியிருந்த சந்தியா கேரக்டர், சந்தானம் கேரக்டர்னு எல்லாமே மக்கள் மனசுல நீங்காத இடம் பிடிச்சது. யுவன் சங்கர் ராஜா இசையில பாடல்கள் பத்தி சொல்லவே வேணாம். ஒவ்வொன்னும் சாங் இல்ல. போதையிலேயே வெச்சிருக்குற பாங்கு. மன்மதனுக்கு பிறகு வல்லவன்தான் சிம்பு கெரியர்ல சூப்பர் ஹிட்டான ஒரு படம். இதுக்கு பிறகு அவர் நடிச்ச 20 சொச்சம் படத்துல பதினைஞ்சு சொச்சம் படத்திலாவது நான் `மன்மதன், வல்லவன், கெட்டவன்’-னு டயலாக் பேசாம அவர் இருந்ததே இல்லைன்னா பார்த்துக்கோங்களேன்.
டைரக்டர்களான நடிகர்கள் வரிசைல அடுத்து தனுஷ பத்தி பேசலைன்னா சாமி குத்தம் ஆகிடும்ல. ஆமா, அவர் டைரக்ட் பண்ணின படம் பவர் பாண்டி (எ) ப.பாண்டி. தன்னோட அப்பா கஸ்தூரி ராஜாவின் முதல் பட ஹீரோவான ராஜ்கிரனையே தன் முதல் படத்துக்கும் ஹீரோவாக்கினார் தனுஷ். ரேவதி, பிரசன்னா, மடோனா செபாஸ்டியன்னு அழகா நடிகர்களை தேர்ந்தெடுத்து, அற்புதமா நடிப்பை வாங்கி, அருமையான ஒரு படமா கொடுத்திருந்தார்.இப்போ என்ன சார், என் ராசாவின் மனசிலேவுக்கு ராஜா சார் மியூசிக். என் மனசுலேயும் ராஜாசார்தான் இருக்கார். கவலைப்படாதீங்க’னு சூப்பரான மெலடிஸைக் கொடுத்திருப்பார் ஷான் ரோல்டன். நல்லி எலும்பை எடுத்து நறுக்குனு கடிக்குற ராஜ்கிரணோட சின்ன வயசு வெர்ஷனா தன்னடக்க தனுஷே தன்னம்பிக்கையோட நடிச்சு கொடுத்ததுல சூப்பர் ரிசல்ட். அடுத்த படத்துக்கு வெயிட்டிங் சார்…
இதேமாதிரி, இன்னும் பல நடிகர்கள் இயக்குநரா மாறி படம் இயக்கியிருக்காங்க. நம்ம கேப்டனே, `டேக்கன்-ன்ற ஹாலிவுட் படத்துல இருந்து ஸ்டோரியை டேக்கன் பண்ணி வறுத்தக் கறி, ஸாரி… விருதகிரின்னு பண்ணார். லாரன்ஸ் முனியை விடமாட்டேன்றார். அர்ஜூன், நாட்டுப்பற்றை திகட்ட திகட்ட ஊத்துனார். இதே மாதிரி, உங்களுக்கு தெரிந்த இயக்குநர்களாக மாறின நடிகர்களையும் அவங்க இயக்கின படங்களின் பெயர்களையும் கமென்ட்ல சொல்லுங்க…