மாதிரிப்படம்

திண்டுக்கல் கீரை விவசாயிகளை வதைக்கும் ஆப்பிரிக்க ராட்சத நத்தை!

கொரோனா வைரஸ் பரவல், லாக்டௌன் பாதிப்பு, சீன எல்லைப் படைகளின் அச்சுறுத்தல் , புயல் ஆகியன தொடர்ந்து வெட்டுக்கிளி படையெடுப்பும் கடந்த ஆண்டு பரவலாக பேசுபொருளாகியது. பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவில் படையெடுத்து பயிர்களை நாசப்படுத்தியது. 35,000 பேருக்குத் தேவையான உணவை ஒரேநாளில் இவை உண்ணும் எனக் கூறப்பட்டது. இதனால், இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் மிகுந்த அச்சத்துடன் இருந்தனர். இந்த நிலையில், தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டியில் உள்ள கீரை தோட்டங்களுக்கு ஆப்பிரிக்க ராட்சத நத்தைகள் படையெடுத்திருக்கின்றன. இதனால், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டியில் பூக்களுக்கு அடுத்தபடியாக முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை உள்ளிட்ட பல கீரை வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் கீரை வகைகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால், கீரையை விளைவிப்பதில் பல்வேறு வகையான சிக்கல்கள் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதிக மழையால் அழுகிப் போவது, இல்லையெனில் தண்ணீரே இல்லாமல் காய்ந்து போவது மற்றும் பூச்சிகள் தாக்குதல் ஆகியவை திண்டுக்கல் மாவட்டத்தில் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வந்துள்ளது. தற்போது இதன் வரிசையில் ஆப்பிரிக்க ராட்சச நத்தைகள் கூட்டம் கீரை விளைவித்திருந்த பகுதிகளில் படையெடுத்து அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆப்பிரிக்க ராட்சச நத்தைகள் கூட்டம் கீரைகளின் தண்டுப் பகுதியில் இருந்து இலை நுனி வரை முழுவதுமாக தின்று தீர்த்து விடுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நத்தைகள் வருவதை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமலும் விவசாயிகள் திணறி வருகின்றனர். இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பேசும்போது, `அரசு நத்தை தாக்குதலில் இருந்து கீரைகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனர். ஆப்பிரிக்க ராட்சச நத்தைகள் நத்தை இனங்களில் மிகப்பெரிய இனமாகும். இவை வேகமாக இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. அதாவது குறிப்பிட்ட சில வருடங்களிலேயே பல லட்சம் நத்தைகளாக பெருகிவிடக்கூடியவை இவை. அதேபோல பூனைக்குட்டியின் அளவுக்கு இவை வளரக்கூடியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நத்தை இனம் மனித இனத்துக்கு ஆபத்தானதாகவும் கூறப்படுகிறது. கீரை வகைகள் மட்டும் இல்லாமல் நெல், வாழை போன்ற பயிர்களையும் இந்த நத்தைகள் தாக்கக்கூடியது.

Also Read : ரூ.55,692 கோடி; அதானி குழும பங்குகள் வீழ்ச்சியால் யாருக்கு இழப்பு… என்ன நடந்தது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top