Madan

யூ டியூபர் டாக்ஸிக் மதன் விவகாரத்தில் என்ன நடக்கிறது… புகைபோட்ட சைபர் கிரைம்!

ஊர் முழுக்க பரபரப்பாகப் பேசிக் கொண்டிருப்பது பப்ஜி மதன் என்கிற மதன் குமார். அவர் யார் என்பதில் ஆரம்பித்து போலீஸ் அவரை எந்தளவிற்கு நெருங்கியுள்ளது என்பதை வரை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்!

யார் இந்த மதன்?

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பப்ஜி மதன் சென்னையில் செட்டில் ஆகிவிட்ட சிவில் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரி. இவருக்கு வயது 29. பப்ஜி உட்பட சில கேம்களை தனது யூ-டியூப் சேனலில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து வந்தார். இந்தியாவில் பப்ஜி BAN செய்தபோதிலும் VPN என்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பப்ஜி கேமை விளையாடி வந்தார். இவருக்கென்று தனி ரசிகர்கள் உள்ளார்கள். VPN எனும் Virtual Private Network செயலியை பயன்படுத்தி தனது IP Address தெரியாத அளவிற்கு நூதனமாக விளையாடி வந்தார். தனது அடையாளத்தையும் பெரிதாக இவர் எங்கேயும் காட்டியதில்லை. கிருத்திகா என்ற பெண்ணுடன் திருமணமாகி 8 மாதத்தில் ஒரு குழந்தையும் இருக்கிறது. சேலத்தில் கைதான இவர் மனைவி, சென்னையில் தற்போது விசாரணையில் இருக்கிறார்.

இவ்வளவு ஃபாலோயர்ஸ் வந்தது எப்படி… ஆடியன்ஸ் யார்?

இவரது ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்களில் முக்கால்வாசி பேர் 2K கிட்ஸ்தான். 18 வயது மற்றும் அதற்கு குறைந்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்தான் பப்ஜி மதனின் ஃபேன்ஸ். தொடர்ந்து 12 மணி நேரம் லைவ்வில் தனது கேமை ஸ்ட்ரீம் செய்யும் இவரது சேனலுக்கு 700K-க்கு மேல் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கிறார்கள். தான் கெட்ட வார்த்தை பேசும் வீடியோக்களுக்கு ஆதரவு கிடைப்பது தெரிந்த மதன், தனியாக `Toxic Madan 18+’ என்று ஒரு சேனலை தொடங்கி முழுக்க கெட்ட வார்த்தை பேசி கேம் வீடியோக்களைப் பதிவிடத் தொடங்கினார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டதுதான் ஆச்சரியமான ஒன்று. யூ-டியூபில் கெட்ட வார்த்தையில் பேசி வீடியோ பதிவிடுவது நார்மலைஸ் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் பொதுவாக கெட்ட வார்த்தை பேசி வந்த மதன், போகப் போக தனி நபர் தாக்குதலுக்காக கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்த ஆரம்பித்தார்.

வீடியோக்களுக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும்?

இவர் கெட்ட வார்த்தைகள் பேசும் சில வீடியோக்களுக்கு `சூப்பர் தலைவா, வேற லெவல் தலைவா, பயங்கர Attitude தலைவா’ என்பது போன்ற ஆதரவான பல கமென்ட்களைப் பார்க்க முடிந்தது. அதே சமயம் அதைக் கண்டித்தும் சிலர் கமென்ட் செய்திருந்தனர். இவர் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து அது சார்ந்த சில கமென்ட்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது.

கெட்ட வார்த்தை பேசுவது மட்டும்தான் பிரச்னையா?

அதுவும் ஒரு மேஜர் பிரச்னை. இவர் தரக்குறைவாக பேசிய பலர் 18 வயதுக்கும் கீழ் இருக்கும் சிறுமிகள் மற்றும் சிறுவர்கள். தவிர, தனது மனைவியின் உதவியுடன் பல பண மோசடிகளையும் இவர் செய்திருக்கிறார். இன்னொரு பக்கம் மதனின் மனைவி அவருடைய அடையாளத்தை வெளியே சொல்லாமல் மதனை பெருமையாகப் பேசி சப்ஸ்கிரைபர்களின் நம்பிக்கையை பெற்று பண மோசடி செய்திருக்கிறார். லைவ் ஸ்ட்ரீமிங் போதே இவரது கூகுள் பே நம்பரை கொடுத்து டொனேட் செய்யும்படி கேட்டு இப்படி சில மோசடிகளையும் இவர் செய்திருக்கிறார்.

இவர் தனி ஆளா அல்லது நெட்வொர்க்கா?

சமீபத்தில்தான் இவர் மனைவியின் உதவியுடன் இந்த வேலைகளைச் செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. இன்னும் சொல்லப்போனால் இவரது மனைவிதான் மாஸ்டர் மைண்ட் என்கிறது போலீஸ் வட்டாரம். இவரது யூ-டியூப் சேனல் மற்றும் சோஷியல் மீடியா ஹேண்டில் உட்பட அனைத்திற்கும் அட்மின் இவரது மனைவிதான். தவிர, ஒரு யூடியூப் சேனலின் விருது வழங்கும் விழாவில் மதனுக்கு விருது வழங்கப்பட்டது. அதைப் பெறுவதற்கு இவர் வரவில்லை. அவரது நண்பர்கள் என சிலர் வந்தனர்.

எப்படி மாட்டினார்? ஏன் போலீஸ் தேடுகிறது?

நான்கு பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்கு பதிவாகியிருக்கிறது. வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர்தான் குறிப்பிட்ட ஒரு வீடியோவை சுட்டிக்காட்டி நான்கு யூ-டியூப் சேனல்களை முடக்க சொல்லி வழக்கு தொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதிவாகியிருந்தது. இதையடுத்து மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினார்கள். இது தெரிந்தவுடன் தலைமறைவாகிவிட்டார் மதன்.

போலீஸ் மதனை எந்தளவிற்கு நெருங்கியுள்ளது?

இது தொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது, “அவரைப் பிடிக்கிறது பெரிய விஷயம் இல்ல. அவருக்கு கல்யாணம் ஆகி 8 மாசத்துல ஒரு குழந்தை இருக்கு. அவரோட மனைவிதான் இது மொத்த விஷயங்களுக்கும் மாஸ்டர் மைண்ட். மதனோட மனைவி இப்ப கஸ்டடிலதான் இருக்காங்க. ஆரம்பத்துல சின்ன பசங்க மேட்டர் என்பதால விசாரணையை சீக்ரெட்டா நடத்திட்டு வந்தோம். வழக்குகள் நிறைய பதிவாகுறதாலேயும், மினிஸ்டர் சைடு இருந்து பிரஷர் வந்தனாலேயும் இப்ப தீவிரம் காட்டி நடவடிக்கைகள் எடுத்துட்டு வர்றோம். இவருக்கு சொந்தமான கார்கள், வங்கி கணக்கு, சில சொத்துகள் போன்றவற்றை எல்லாம் முடக்கிட்டோம். அதனால கண்டிப்பா மதன் சரண்டர் ஆகதான் வேணும். இந்த மாதிரி விசாரணையை நாங்க புகை போடுறதுனு சொல்வோம்” என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

Also Read – `கணவன் – மனைவிபோல் வாழ்ந்தோம்; ஏமாற்றிவிட்டார்!’ பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

மதனுக்கு இன்ஃப்ளுயன்ஸ் எதுவும் இருக்கிறதா?

இவரோட யூ-டியூப் சேனலால் இவருக்கு கிடைக்கும் வருமானம் கோடியைத் தொட்டது. ஆடம்பர வாழ்க்கைக்கு சொந்தக்காரர் என்பதால் பெரிய இடத்து பழக்கங்களும் இவருக்கு இருந்து வந்தது. தவிர, ஒரு வீடியோவின் ஸ்ட்ரீமிங்கில் பேசிய இவர், “இந்தியாவுல இருக்க டாப் வழக்கறிஞர்களை எனக்குத் தெரியும். ஸோ, இதெல்லாம் எனக்கு மேட்டரே இல்லை. அதையும் மீறி நான் ஜெயிலுக்கு போனாலும் வெளில வந்த அப்பறம் என்னோட ஆட்டம் ரொம்ப Aggressive-ஆ இருக்கும்” என்று கூறியிருந்தார்.

சப்ஸ்கிரைபர்களின் ரெஸ்பான்ஸ் என்ன?

இந்த மாதிரியான ஒரு சர்ச்சையில் இவர் சிக்கிக்கொண்டது பலருக்கும் தெரியவில்லை. `அவர் என்ன ப்ரோ பெருசா தப்பு பண்னார். நிறைய பேர் இப்ப கெட்ட வார்த்தை பேசிதான் யூ-டியூப்ல வீடியோ போட்டாங்க. இவரை மட்டும் ஏன் அரெஸ்ட் பண்றாங்க’ என்பது போலத்தான் 2K கிட்கள் பேசி வருகிறார்கள்.

கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தி யூ-டியூபில் வீடியோக்கள் பதிவிடலாம். இதுதான் யூ-டியூப் விதிமுறை. முன்பை விட தற்போது கெட்ட வார்த்தை பேசுவது Normalise ஆகிவிட்டது. ஆனால், தனிநபர் தாக்குதல், சிறுவர் சிறுமிகளை இழிவுபடுத்தி பேசுதல், பெண்களை கொச்சையாக பேசுதல் என்பதெல்லாம் சட்டப்படி தவறான விஷயம். இது மட்டுமின்றி ஒரு பெரிய தொகையை ஏமாற்றியிருக்கிறார் என்பதும் சட்டவிரோதமான செயல்தான்.

லாக்டவுனால் எக்ஸாமில் ஆரம்பித்து கிளாஸ் வரை அனைத்து ஆன்லைனில்தான் நடக்கிறது. நவீன யுகத்தில் மொபைலை ஈஸியாக தவிர்க்கவும் முடியாது. இருப்பினும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மொபைலை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுத்து கண்காணித்தால் அவர்களின் எதிர்காலத்துக்கும் நல்லது. அதுவும் மதனைப் போன்று டாக்ஸிக்கான ஒரு நபரிடம் இருந்து தங்களது பிள்ளைகளைத் தள்ளி வைத்திருப்பது பெற்றோர்களின் கடமை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top