ஜாதகம் பொருந்தவில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்த முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வழக்கின் பின்னணி என்ன?
மும்பை புறநகர்ப் பகுதியான Dindoshi-யைச் சேர்ந்த ஒருவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி சந்தீப் கே.ஷிண்டே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்திருந்த நிலையில், ஜாதகப் பொருத்தம் இல்லாததால் திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும், இதை எதிர்த்து அந்தப் பெண் கொடுத்த புகாரின்பேரில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, `திருமணம் செய்துகொள்வதாகப் பெண்ணிடம் உறுதியளித்துவிட்டு, இப்போது ஜாதகம் பொருந்தவில்லை என திருமணம் செய்துகொள்ள அந்த நபர் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். இதனால், பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலேயே நியாயம் இருப்பதாக நினைக்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.
என்ன நடந்தது?
Dindoshi பகுதியைச் சேர்ந்த மனுதாரர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் 2012-ம் ஆண்டு முதல் நெருங்கிப் பழகியிருக்கிறார். ஆனால், திருமணம் செய்துகொள்ள மறுத்த நிலையில், அந்தப் பெண் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், `திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்த பின்னர், என்னிடம் நெருங்கிப் பழகத் தொடங்கினார். இருவரும் பல இடங்களில் ஒன்றாகச் சுற்றியிருக்கிறோம். இதனால், நான் கர்ப்பமடைந்தேன். கர்ப்பத்தைக் கலைத்துவிடுமாறு என்னிடம் சொன்ன அவர், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொன்னார். இதுகுறித்து என்னுடைய குடும்பத்தினரிடம் சொன்னபோது, என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்கள். என்னைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொன்ன அவரும் அதிலிருந்து பின்வாங்கிவிட்டார்’’ என்று தெரிவித்திருந்தார்.
போலீஸில் புகார் அளித்த பின்னர், திருமணத்துக்கு அந்த நபரின் குடும்பத்தினர் 2013 டிசம்பரில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து, அந்தப் பெண் 2013 ஜனவரியில் போலீஸ் புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார். இரண்டு வாரங்கள் கழித்து, பொருளாதாரரீதியாக பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த தன்னால், மனரீதியாகத் திருமணத்துக்குத் தயாராக இல்லை என்று கூறி திருமணம் செய்துகொள்ள மீண்டும் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
இதனால், பாலியல் வன்கொடுமை, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது பெண் புகார் கொடுத்திருக்கிறார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி Dindoshi செசன்ஸ் கோர்ட்டில் இவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார்.
நீதிமன்ற உத்தரவு
இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஷிண்டே, `அந்தப் பெண் சார்பில் 2012 டிசம்பரில் கொடுக்கப்பட்ட புகார், திருமணம் செய்துகொள்வதாக அந்த நபர் உறுதியளித்ததை அடுத்து வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அவர் விரும்பவில்லை என்பது அவர் நடந்துகொண்ட விதம் மூலம் தெரியவருகிறது. தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சியங்கள் போன்றவை மனுதாரர், அந்தப் பெண்ணை தெரிந்தே ஏமாற்றியிருக்கிறார் என்பதை நிறுவுகின்றன. இது இந்திய தண்டனைச் சட்டம் 367-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். ஜாதகம் பொருந்தவில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்த முடியாது. இந்தக் காரணங்களால் மனுதாரரின் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. அதைத் தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டிருக்கிறார்.