நீட் தேர்வு குறித்து தமிழக அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் அளித்த 165 பக்க அறிக்கையைத் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அந்த ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்.
ஏ.கே.ராஜன் குழு
நீட் தேர்வை ரத்து செய்து பழைய முறையில் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆட்சிக்கு வந்தபின்னர், நீட் தேர்வால் சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசிடம் சமர்ப்பிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவைத் தமிழக அரசு கடந்த ஜூன் 10-ம் தேதி அமைத்தது. இந்தக் குழு தமிழகம் முழுவதும் 86,342 பேரிடம் கருத்துகளைப் பெற்று, அதன் அடிப்படையில் ஆய்வறிக்கையைத் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கடந்த ஜூலை 17-ம் தேதி சமர்ப்பித்தது. அந்த ஆய்வறிக்கையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி ஒரு சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கலாம் என்று பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தாக்கல் செய்திருந்த 165 பக்க ஆய்வறிக்கையைத் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.
நீட் ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்
- நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கற்றல் என்ற நிலை மாறி, பயிற்சி எடுத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது திறன் குறைந்தவர்களும் உள்ளே வருவதற்கான வழியைத் திறந்துவிட்டிருக்கிறது.
- சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு ஆதரவாக நீட் இருக்கிறது.
- தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் சி.பி.எஸ்.இ மாணவர்களின் எண்ணிக்கை 2015-ல் 0% இருந்தநிலையில், 26.83%- ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்த எண்ணிக்கை 0.07% -ல் இருந்து 12.01% ஆக அதிகரித்திருக்கிறது.
- மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 65%-ல் இருந்து 43.01% ஆகக் குறைந்திருக்கிறது.
- தமிழ் வழியில் படித்து எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் 14.4% -ல் இருந்து 1.7% ஆகக் குறைந்துவிட்டது. அதேநேரம், ஆங்கில வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 56.02%-ல் இருந்து 69.53% ஆக உயர்ந்துள்ளது.
- பயிற்சி வகுப்புகள் மூலம் நீட் தேர்வை ஒரு முறைக்கு மேல் எழுதுபவர்கள் அதிக அளவில் வெற்றிபெறுகிறார்கள். ஒருமுறைக்கு மேல் நீட் தேர்வு எழுதுபவர்கள் 2016-17-ம் ஆண்டில் 12.47% ஆக இருந்த நிலையில், 2020-21 கல்வியாண்டில் 71.42% என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
- நீட் அறிமுகத்துக்குப் பின்னர் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரும் ஊரகப் பகுதி மாணவர்கள் எண்ணிக்கை 30% குறைந்துள்ளது. நகரப் பகுதி மாணவர்கள் 30% அதிகரித்திருக்கிறார்கள்.
- நீட் வந்த பிறகு 40% முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள்.
- பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 10.45% ஆகக் குறைந்துள்ளது.
- நீட் தேர்வில் சுமாரான மதிப்பெண் பெற்ற மாணவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள். குறிப்பாக, மொத்த மதிப்பெண்ணில் 20% அளவுக்குக் குறைந்த மார்க் எடுத்தவர்களும் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள்.
- தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் பயிற்சியில் மட்டும் ரூ.5,750 கோடி அளவுக்குப் பணம் புழங்குகிறது.
- மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்குத் தயாராக இருக்கிறார்களா… அவர்களின் திறன் போன்றவற்றை நீட் தேர்வு கொண்டு கணிக்க இயலாது.
- கற்றலுக்கு எதிரானதான பயிற்சி வகுப்புகளை நீட் ஊக்குவிக்கிறது.
- நீட் தேர்வின் வெற்றி குறித்து எந்தவொரு ஆய்வும் இதுவரை நடத்தப்படவில்லை.
- அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான பாடத்திட்டம் என்ற அடிப்படையில் நீட் தேர்வின் பாடத்திட்டம் தோல்வியடைகிறது.
Also Read – நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு… தமிழக அரசின் மசோதா என்ன சொல்கிறது?