மின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மின் நுகர்வோர் சேவை மையத்தை தொடங்கி வைத்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள் மின்னழுத்த ஏற்ற / இறக்கம், உடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றிகள், மின்தடை குறித்த தகவல், குறைந்த மின்னழுத்தம், உயர் மின்னழுத்தம் போன்ற மின்துறை சார்ந்த தகவல்கள் மற்றும் புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் இந்த சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் சுமார் 3.10 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் `மின்னகம்’ என்ற பெயரில் இந்த சேவை மையத்தை திறந்து வைத்து அதற்கென பிரத்யேகமாக 94987 94987 என்றமொபைல் எண்ணையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த சேவை மையமானது 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தில் மூன்று ஷிஃப்ட்களில் சுமார் 195 பேர் பணியில் உள்ளனர். பொதுமக்கள் மின்னகத்தில் தெரிவிக்கும் புகார்களை கணினி மூலம் பதிவு செய்து புகார் தொடர்புடைய அலுவலகங்களுக்கு அதாவது மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் புகார் தெரிவிக்கும்போது அந்த புகார்கள் அவர்களின் மொபைலுக்கு மெசேஜாகவும் அனுப்பப்படும். புகார்கள் சரிசெய்யப்பட்டவுடன் அது தொடர்பான தகவலும் அவர்களுக்கு அனுப்பப்படும்.
ஃபேஸ்புக் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் வழியாக பதிவேற்றப்படும் புகார்களும் கண்காணிக்கப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுப்பதற்கும் சோஷியல் மீடியா செல் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் வழியாகவும் மக்கள் மின்துறை சார்ந்த தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மின்னகம் சேவையை அறிமுகப்படுத்தியபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் புகார் பெறப்படும் முறையைக் குறித்தும் அப்போது அறிந்துகொண்டார். இந்த மின்னகத்தின் மூலம் மின் தொடர்பான அனைத்து வகையான பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என நம்பப்படுகிறது.
Also Read : என்னதான் ஆச்சு கார்த்திக் சுப்புராஜூக்கு… எங்கே போச்சு அந்த மேஜிக்?