தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வை எழுத ஆதார் எண் கட்டாயமா என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது.
ஆதார் கட்டாயமில்லை!
இந்திய தனிப்பட்ட அடையாள அமைப்பால் வழங்கப்படும் ஆதார் குறித்த சர்ச்சைகள் இன்றளவும் ஓய்ந்தபாடில்லை. இதுகுறித்த வழக்கொன்றில் அரசின் போட்டித் தேர்வுகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்தசூழலில், டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுதுவதற்காக அதன் இணையதளத்தில் ஒருமுறை பதிவுக்காகச் சென்றபோது ஆதார் எண் கேட்கப்படுவதாகப் புகார் எழுந்திருக்கிறது.
இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2 தேர்வெழுதுபவர்கள் ஒருமுறை, நிரந்தரப் பதிவில் ஆதார் எண்ணைப் பதிவு செய்தால் மட்டுமே தேர்வு எழுத நுழைவுச் சீட்டு பெற முடியும் என தேர்வுத் துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பு அ
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஜானகி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அரசின் குற்றவியல் வழக்கறிஞர் பணியிடத்துக்கான அறிவிப்பைக் கடந்த ஆகஸ்ட் 25-ல் வெளியிட்டது. டி.என்.பி.சி இணையதளத்தில் ஒருமுறை பதிவு செய்துகொண்டவர்கள் அந்த எண்ணைக் கொண்டு அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க முடியும் என்பதுதான் நடைமுறை.
ஆனால், அரசு குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது ஆதார் எண் கேட்கப்படுகிறது. விண்ணப்பதாரரின் ஆதார் எண்ணைக் கொடுக்காமல் விண்ணப்பிக்க முடியாத நிலை இருக்கிறது. அரசின் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆதார் எண்ணைப் பதிவு செய்து 28 நாட்களாகியும் பதிவாகவில்லை. இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆதார் எண் கட்டாயமில்லை என்று உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
உயர் நீதிமன்றம் கேள்வி
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், `டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் ஒருமுறை பதிவின்போது ஆதார் எண்ணைப் பதிவு செய்து 10 நாட்களுக்கு மேலாகியும் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. அரசு குற்றவியல் வழக்கறிஞர் நியமனத் தேதி முடிவடைய ஒருவாரமே இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலேயே அரசு போட்டித் தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயமில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி உரிய விளக்கமளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.