கிரிப்டோ கரன்சி

கிரிப்டோ கரன்சி, பிட்காயின்… கான்செப்ட் என்ன – ஓர் எளிய அறிமுகம்!

“கிரிப்டோ கரன்சி, பிட்காயின்களில் சில ஆயிரங்களை முதலீடு செய்து லட்சங்களில் லாபம் சம்பாதிக்கலாம்” என்பது மாதிரியான பெருக்கி ஊதப்பட்ட கட்டுக்கதைகளும், சில ஏமாற்றுக்காரர்கள் அப்பாவிகளைக் குறிவைத்து களமிறங்கியிருப்பதும் சமீப காலமாக பெரிதாக அடிபடுகிறது. அவை உண்மையா? உண்மையில் கிரிப்டோகரன்சிகள் பற்றி அடிப்படையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இங்கு பார்ப்போம்.

கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? 


Cryptocurrency, Crypto, Bitcoin, Blockchain, Money

கிரிப்டோ கரன்சி பற்றிய விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்பு நாம் புரிந்துகொள்ள வேண்டிய இன்னுமொரு விஷயம் “பணம்”.

மனிதர்களுடைய பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு பொருள் இன்னொரு பொருளுக்கான மதிப்பாகத்தான் பார்க்கப்பட்டு வருகிறது. முல்லை நிலப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மலைத்தேனுக்குப் பதிலாக மருத நிலப் பகுதியில் விளைந்த அரிசிக்கோ தானியங்களுக்கோ மாற்றாக வியாபாரம் செய்யப்பட்டது. பொருளுக்கு மாற்றாக இன்னொரு பொருள் என்ற காலகட்டத்தில் ஒவ்வொரு பொருளுக்குமான மதிப்பாகப் பணம் இப்போது பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறது.

தங்கமாக, வெள்ளியாக இருந்த இந்த Exchange Value நிறுவனமயமாக மாற்றம் பெறும்போது அங்கே பணம் வருகிறது. அந்த மதிப்பை நிர்ணயிக்கும் ஒரு அமைப்பு மேல் வைக்கப்படும் நம்பிக்கைதான் பணத்துக்கான நிலைத்தன்மையை வழங்குகிறது. வங்கிகள், அரசுகள் தான் இந்த நம்பிக்கையை வழங்குகிறார்கள்.

ரூபாய் நோட்டுகளில் I promise to pay the bearer….. ப்ளா… ப்ளா… அப்படின்னு எழுதி ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்து பாத்திருக்கீங்கள்ல… மிகச் சுருக்கமாக பணம் என்பதற்கான விளக்கத்தை இப்படிப் பார்க்கலாம். முக்கியமான வரையறை Money = Value with trust.

200 Indian Rupees banknote Gandhi Sanchi Stupa - Exchange yours today

இந்த கணிப்பொறியியல், தொழில்நுட்பம்,  டிஜிட்டல் அனைத்தும் எல்லா துறைகளிலும் ஒரு பெரிய மாறுதலை கடந்த 10, 15 வருடங்களில் நிகழ்த்தி இருக்கு. அப்படி இந்தப் பணம் என்கிற விஷயத்தில் நடந்திருக்கும் முக்கிய மாற்றம் தான் Crypto Currency.

Money = Value with trust மேலே பார்த்த இந்த வரையறையில், ஏன் Value with trust ஓர் அரசாலோ வங்கியாலோ நிர்ணயிக்கப்பட வேண்டும்? டிஜிட்டல் முறைகளில் இந்த நம்பிக்கையை மிக அதிகமான பாதுகாப்பு முறைகளால் மக்களாலேயே நிர்வகிக்கப்பட்டால் அது எப்படி இருக்கும்?

அதாவது அரசுகளால் கட்டுப்படுத்தப்படும்  மையப்படுத்தப்பட்ட, அதாங்க Centralized முறையாக இல்லாமல் பரவலாக்கப்பட்ட அதிகார முறையால் நிர்வகிக்கப்படுவதுதான் Crypto Currency. அந்த கிரிப்டோ கரன்சிகளில் பரவலாக அனைவராலும் அறியப்படுவதும் பயன்படுத்தப்பட்டதுமான ஒரு கரன்சி முறைதான் Bitcoin.

அரசாங்கம் மாதிரியான ஒரு அமைப்பே திடீரென ஒரு நாள் இந்த மதிப்புள்ள பணம் செல்லாதுனு அறிவிச்சிட்டுப் போயிடறாங்களே…  பிட்காயின்கள் மேல அந்த நம்பிக்கை எப்படி வரும்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை அடுத்தடுத்துப் பார்ப்போம்.

கிரிப்டோ கரன்சிகளின் தொழில்நுட்பம் என்ன?

இந்த கிரிப்டோ கரன்சிகளின் தொழில்நுட்பத்தை புரிந்துகொள்ள வங்கிகள் பற்றிய ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மாதத்துவக்கத்தில் உங்களுடைய சம்பளம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது, அன்றே குடும்ப செலவுக்காக நீங்கள் ஒரு தொகையை எடுக்கிறீர்கள், அடுத்த 5 நாள்களில் உங்கள் வீட்டுக்கடனுக்கான EMI கழிக்கப்படுகிறது, அடுத்த 5 நாள்களில் இன்னொரு EMI, மீண்டு ஒருமுறை செலவுக்கு பணம் எடுக்கிறீர்கள். இந்த ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளும் உங்கள் வங்கியில் உள்ள ஒரு கணக்குப் பதிவேட்டில் இடம்பெறும், அதன் ஒரு நகலை உங்களால் பார்க்க முடியும். அந்த வங்கியில் கணக்கு உள்ள பல்லாயிரக்கணக்கான கணக்குகளின் பதிவேட்டை மொத்தமாக அந்த வங்கி நிர்வகிக்கும், அந்த வங்கியின் அத்தனை கிளகளிலும் உள்ள கணக்குகளின் அத்தனை கணக்குப் பதிவுகளும் ஒரு மிகப்பெரிய சர்வர், சூப்பர் கம்ப்யூட்டர்களின் துணையோடு நிர்வகிக்கப்படும், ஒவ்வொரு வங்கியும் இப்படி தனித்தனியாக நிர்வகிக்கும், ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கிகள் இந்த ஒட்டுமொத்த பிராசஸையும் நிர்வகிக்கும்.

ஒவ்வொரு தனி மனிதரும் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் இந்த பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இப்படி பதிவு செய்யப்படாமல் போனால், யார் வேண்டுமானாலும் தனித்தனியாக பணத்தை அச்சடித்து செலவு செய்துகொள்ள முடியும். இந்த முறைகேடுகளை களையத்தான் இத்தகைய பதிவேடு பயன்படுத்தப்படுகிறது.

What is peer to peer network with example - IT Release

OTT தலைமுறையில் வாழ்ந்துகொண்டிருக்கும் 2K கிட்ஸ்களுக்கு பெரிதாக பழக்கமில்லாத ஒரு தொழில்நுட்பம் Torrents. 2K கிட்ஸ்களின் முன்னோர்களுக்கான OTT platform தான் இந்த டாரென்ட்ஸ், இதன் பின்னணித் தொழில்நுட்பம் Peer to peer நெட்வொர்க். நெட்பிளிக்ஸில் நீங்கள் ஒரு படத்தைப் பார்க்கும் போது அவர்களுடைய ஸ்ட்ரீமிங் சர்வரில் அந்தப் படம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும், அதனை எத்தனை பேர் வேண்டுமானாலும் ஸ்ட்ரீமிங் செய்து படம் பார்க்க முடியும், அதை தாங்கும் அளவுக்கான கட்டமைப்பை நெட்பிளிக்ஸ் வைத்திருக்கிறது. ஆனால், இந்த டாரெண்ட் தொழில்நுட்பத்தில் அப்படி ஒரு வலுவான சர்வர் இருக்காது, இந்த P2P நெட்வொர்க்கில் இருக்கும் ஒவ்வொரு தனிநபரின் கம்ப்யூட்டரிலும் அந்த படத்தின் ஃபைல் இருக்கும், ஒவ்வொருவரின் கம்ப்யூட்டரிலிருந்தும் ஒவ்வொரு பகுதியாக உங்களுடைய கம்ப்யூட்டருக்கு டவுன்லோட் ஆகும். உங்களுடைய கம்ப்யூட்டரிலிருந்து இன்னொருவருக்கு அவரிடம் இல்லாத பகுதி டவுன்லோட் ஆகும். அப்போதெல்லாம், டாரண்ட் தளங்களில் ஒரு படத்துக்குக் கீழ் Pls seed, seeders pls என கமெண்ட்டில் பலர் கதறுவார்கள்.  இதுதான் மிகச்சுருக்கமாக Peer to Peer நெட்வொர்க்.

Also Read : Kodak:கோடாக்கின் கேமரா சாம்ராஜ்யம் ஏன் சரிந்தது… உலகின் டாப் 5 பிராண்ட் திவாலான கதை!

வங்கிகள் தான் நெட்ப்ளிக்ஸ், அந்தப் பதிவேட்டை வங்கிகள் மட்டும் தான் நிர்வகிக்க முடியும். ஆனால், இந்த கிரிப்டோ கரன்சி டாரண்ட்களைப் போல Peer to Peer நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு பணப்பரிமாற்றமும் இந்த P2P நெட்வொர்க்கில் இருக்கும் எல்லா கணினிகளிலும் இந்த பதிவேட்டின் ஒரு நகல் இருக்கும். எல்லோராலும் இந்தப் பதிவேடுகளையும் அனுக முடியும். இந்த Openness தான் கிரிப்டோகரன்சிகளின் பலமாக பார்க்கப்படுகிறது. இதில் தனிநபர்களின் தகவல்கள் எல்லோருக்கும் தெரிந்துவிடாதா என்ற கேள்வி உங்களுக்கு வருகிறதா? இதற்கான தொழில்நுட்ப சாத்தியத்தை கிரிப்டோ கரன்சிகள் கொண்டிருக்கின்றன, ஒவ்வொரு பரிமாற்றத்தையும் எல்லோராலும் பார்க்க முடியும் என்றாலும், முழுமையாக இந்தப் பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியாது, இந்த தனிநபர் தகவல்கள் encrypt செய்யப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட இதை ஒரு Pseudo Anonymous என சொல்வார்கள். பிட்காயின்களை உருவாக்கியவர் என சொல்லப்படும் Satoshi Nakamoto -வின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. புனைப்பெயர் தான் தெரியும் என்பதைப் போல பதிவு செய்யப்பட்ட பரிமாற்றங்கள் மட்டும் தான் தெரியும், யார் என்பது தெரியாது.

Blockchain, Cryptocurrency, Network, Virtual, Currency

ஒரு வங்கியின் சர்வர் ஹேக் செய்யப்படலாம், எந்த ஒரு அமைப்புமே முழுமையான நம்பிக்கைக்குரியது என்று சொல்லவே முடியாது. வங்கியின் கட்டுப்பாடுகளில் உள்ள இந்தப் பதிவேடு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால், கிரிப்டோகரன்சிகளின் இந்த Blockchain பல லட்சக்கணக்கான கனிணிகளில் பதிவு செய்யப்படுவதாலும், பல்லாயிரக்கணக்கானாரோல் நிர்வகிக்கப்படுவதாலும் ஹேக் செய்யப்படவோ, மதிப்புகள் மாற்றப்படவோ வாய்ப்பில்லை. அந்த நம்பிக்கை தான் கிரிப்டோகரன்சிகளின் பலம்.

கிரிப்டோ கரன்சிகளின் நன்மை என்ன?

கிரிப்டோ கரன்சிகளின் மிக முக்கிய நன்மையாகக் கருதப்படுவது, இது முழுக்க முழுக்க Digital Transaction என்பதும் பொதுவான கரன்சியாகப் பயன்படுத்தப்பட முடியும் என்பதும் தான்.

நாமும் UPI, Net banking, Digital transaction செய்துகொண்டுதானே இருக்கிறோம், இதற்கும் கிரிப்டோகரன்சிக்கும் என்ன வித்தியாசம் என்கிறீர்களா? நீங்கள் UPI மூலமாக இன்னொருவருக்கு 2000 ரூபாய் அனுப்பும் போது அதற்கு நிகரான 2000 ரூபாய் மதிப்புடைய தாள் வங்கியால் நிர்வகிக்கக்கப்படுகிறது. (ஆமா… இப்போ 2000 ரூபாய் நோட்டு வருதா? கடைசியா எப்போ பார்த்தீங்க..? கமெண்ட் பண்ணுங்க) ஆனால், பிட்காயின் எந்த வகையிலும் ஒரு பொருளாக நிர்வகிக்கப்படாது, அது உருவாக்கப்படுவதும், பயன்படுத்தப்படுவதும் முழுக்க முழுக்க டிஜிட்டல் வடிவில் தான்.  அது முழுக்க முழுக்க டிஜிட்டல் வடிவிலும் Decentralized currency என்பதாலும் திடீரென ஏழு மணிக்கு டிவி’யில் தோன்றி யாராலும் கிரிப்டோ கரன்சிகளைத் தடை செய்ய முடியாது.

Bitcoin, Digital, Money, Decentralized, Anonymous

உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் கிரிப்டோ கரன்சிகளை பொதுவான கரன்சியாக பயன்படுத்தலாம் என்பது அதன் இன்னொரு பெரிய பலம். பத்தாண்டுகளில் பல நாடுகளும், நிறுவனங்களும் கிரிப்டோ கரன்சிகளை பரிவர்த்தனைக்குப் பயன்படுத்த முடிவெடுத்திருக்கிறார்கள், பயன்படுத்தியும் வருகிறார்கள்.

கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு ஏன் இவ்வளவு ஏற்ற இறக்கமாக இருக்கிறது?


பொருளாதாரத்தின் பாலபாடங்களில் ஒன்றான Demand & Supply கிரிப்டோ கரன்சிகளுக்கும் பொருந்தும். என்னதான் டிஜிட்டலாக உருவாக்கப்படும் பணம் என்றாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு. கிரிப்டோ கரன்சிகளின் பிரபலமும் பெரும்பாலானோர் விழுந்தடித்துக்கொண்டு அதில் முதலீடு செய்வதும் நடப்பதால் இந்த Demand & supply விதியின் அடிப்படையில் பிட்காயின்களின் மதிப்பு தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

கிரிப்டோ கரன்சிகளை மாற்று கரன்சியாகக் கருதாமல் தங்கத்தில் முதலீடு செய்யப்படுவதைப் போல பலரும் பிட்காயின்களில் முதலீடு செய்வதால் இது நடக்கிறது.

Most and Least Volatile Cryptocurrencies, Rated for 2020 - Bitcoin Market  Journal

ஒரு உட்டோபியன் உலகம் உருவாகி அங்கு  முழுமையான பரிவர்த்தனைக்கு கிரிப்டோகரன்சிகள் வரும் போது அதன் மதிப்பு ஒரு நிலைத்தன்மை அடையலாம்.

கிரிப்டோகரன்சிகளை ஒரு முதலீட்டுக்கான பொருளாகக் கருதாமல், அதை பயன்பாட்டுக்கானதாகக் கருதும்போதுதான், அதன் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். கடந்த சில மாதங்களில் எலான் மஸ்க், டெஸ்லா என பிட்காயின்களைப் பயன்படுத்துவது பற்றியான உரையாடல்கள் கிரிப்டோகரன்சிகளின் எதிர்காலம் குறித்து விவாதிக்கிறது. இந்திய அரசும் கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குமுறைப்படுத்தும் முயற்சிகளில் இருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top