வீட்டுக் கடன்

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு ரிசர்வ் வங்கி சொல்லும் ஆலோசனைகள்!

ஒவ்வொருவருக்கும் வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக இருக்கும். அப்படியான கனவு வீட்டைக் கட்டவோ, வாங்கவோ வங்கிகளில் கடன் பெறும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன… ரிசர்வ் வங்கி எளிமையாக வழிகாட்டுகிறது.

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு ரிசர்வ் வங்கி சொல்லும் ஆலோசனைகள்!

என்ன காரணத்துக்காக எல்லாம் முதல்முறையாக வீட்டுக் கடன் வாங்கலாம்?

வீடு வாங்குவதற்காகவோ, கட்டுவதற்காகவோ, ஏற்கெனவே இருக்கும் உங்கள் வீட்டைப் புதுப்பித்தல், பழுது நீக்குதல் போன்ற காரணங்களுக்காக நீங்கள் முதல்முறையாக வீட்டுக் கடன் கேட்டு வங்கிகளை அணுக முடியும். பெரும்பாலான வங்கிகள் இரண்டாவது முறையாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கென தனியான கொள்கைகளையே வகுத்து வைத்திருக்கின்றன. அதனால், உங்கள் தேவை என்ன, எதற்காக லோன் வாங்குகிறோம் என்பதை வங்கி தரப்பிடம் தெளிவாக விளக்கிவிடுங்கள்.வீட்டுக் கடன்

உங்கள் ஹோம் லோன் தகுதியை வங்கிகள் எப்படி நிர்ணயிக்கின்றன?

கடனைத் திரும்ப செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டே உங்களுக்கான ஹோம் லோன் தொகையை வங்கிகள் நிர்ணயிக்கின்றன. குறிப்பாக அத்திவாசியத் தேவைகளுக்குப் போக மீதமிருக்கும் உங்களின் மாதாந்திர வருமானம், வாழ்க்கைத் துணையின் வருமானம், சொத்துகள், நிரந்தர வருமானமா போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வங்கிகள் வீட்டுக் கடன் தொகையை முடிவு செய்யும். மாதந்தோறும் எளிமையாக தவணைகளை நீங்கள் செலுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே இது செயல்படுத்தப்படுகிறது. மாதம்தோறும் உங்களின் வருமானத்தில் உபரியாக இருக்கும் தொகையில், 55-60% வங்கிக் கடனுக்கு செலுத்த முடியும் என்று கணக்கிடப்படுகிறது. பெரும்பாலான வங்கிகள் வீட்டுக் கடனை செலுத்துவதில் வயது வரம்பையும் நிர்ணயித்திருக்கின்றன.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

வீடு வாங்குவது அல்லது மனை குறித்த சட்டரீதியான அனைத்து ஆவணங்கள் தவிர்த்து அடையாள அட்டை, முகவரி சான்று, பே-ஸ்லிப் மற்றும் ஃபார்ம் 16 (வணிகம் செய்வோர் அல்லது தனிநபருக்கு), ஆறு மாத கால பேங்க் ஸ்டேட்மெண்ட் போன்றவற்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் புகைப்படம் ஒட்டிய விண்ணப்பப் படிவம் ஒன்றையும் நிரப்ப வேண்டும். வங்கி தரப்பில் உடனடியாக வீட்டுக் கடனுக்கு ஓகே சொல்லிவிடாதீர்கள். வட்டி விகிதம், கடன் ஒப்பந்தம், தள்ளுபடி எதுவும் கிடைக்குமா உள்ளிட்ட தகவல்களை வங்கி பிரதிநிதியிடம் தீர விசாரித்த பின்னர் கடன் ஒப்பந்தத்தை முடிவு செய்யுங்கள்.வீட்டுக் கடன்

வட்டி விகிதம் என்ன?

Floating அல்லது Fixed என இரண்டு விதமான வட்டி விகிதங்களில் வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குகின்றன. இதில், உங்கள் வட்டி விகிதம் பிக்ஸ்டு அல்லது நிலையானது என்றால், நீங்கள் திரும்ப செலுத்த வேண்டிய இ.எம்.ஐ கடன் காலம் முழுவதும் மாறாமல் இருக்கும். மாறாக, ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் என்றால், சந்தையில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுவதைப் பொறுத்து மாறுபடும். உதாரணத்துக்கு, சந்தையில் விதிக்கப்படும் வட்டி விகிதம் அதிகமானால், நீங்கள் திரும்பச் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ-யும் அதிகமாகும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

கடன் தவணை காலம் கடன் தொகையை எந்த வகையில் பாதிக்கும்?

கடனைத் திரும்பச் செலுத்த நீண்ட காலம் எடுத்துக்கொண்டால் உங்கள் இ.எம்.ஐ. தொகை குறையும். அதேநேரம், குறுகிய காலத்தை நீங்கள் தேர்வு செய்தால், இ.எம்.ஐ தொகை அதிகரிக்கும்; அதேநேரம், விரைவாக உங்கள் கடன் அடையும். நீண்டகாலம் எடுத்துக் கொண்டால் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டித் தொகையும் அதிகமாகும்.

Pre – EMI Interest என்றால் என்ன?

வீடு கட்டும்போது பல்வேறு பகுதிகளாகக் கடன் தொகையை வங்கி வழங்கும். ஒவ்வொரு முறையும் வங்கி கொடுக்கும் கடன் தொகைக்கான வட்டியை மட்டும் நீங்கள் செலுத்தும் வட்டி Pre – EMI interest. வங்கி ரிலீஸ் செய்யும் கடன் தொகைக்கு ஏற்ப அதற்கு அடுத்த மாதத்தின் முதல் தேதியில் வட்டியை நீங்கள் செலுத்த வேண்டி வரும்.வீட்டுக் கடன்

வங்கி பாதுகாப்புக்கு என்ன கொடுக்க வேண்டும்?

பொதுவாக வீட்டுக் கடனுக்காக உங்கள் சொத்தை அடமானமாக வங்கிக்கு எழுதிக் கொடுக்க வேண்டி வரும். சில நேரங்களில் தேவைப்படின், கூடுதல் சொத்து ஆவணங்களை வங்கி தரப்பில் கேட்கவும் வாய்ப்பிருக்கிறது. சில வங்கிகள் டவுன் பேமெண்ட் எனப்படும் குறிப்பிட்ட தொகையை முன்னரே செலுத்தும்படியும் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்ளும்.

சிறந்ததைத் தேர்வு செய்வது எப்படி?

வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், பல வங்கிகள் அளிக்கும் சேவைகள், அவற்றின் வட்டி விகிதம், சலுகைகள் உள்ளிட்டவைகளை நன்கு விசாரித்துத் தெரிந்துகொள்ளவும். அதன்பிறகு, அவற்றை ஒப்பீடு செய்து, தேவைப்பட்டால் துறைசார் வல்லுநர்களிடம் ஆலோசனையைப் பெற்ற பிறகு சிறந்ததைத் தேர்வு செய்யுங்கள்.

வீட்டுக் கடன் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதள இணைப்பைச் சொடுக்கித் தெரிந்துகொள்ளலாம்.

https://m.rbi.org.in/scripts/FAQView.aspx?Id=77

Also Read – கொரோனா முன்னெச்சரிக்கைக்காக அஜித் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top