சி.சு.செல்லப்பா - வாடிவாசல்

சி.சு.செல்லப்பா: `வாடிவாசல்’ கதை பேசும் அரசியல்!

ஜல்லிக்கட்டு பற்றிய தமிழின் முதல் நாவலான `வாடிவாசல்’ நாவலாசிரியர் சி.சு.செல்லப்பா பிறந்தநாள் இன்று.

சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா எனும் இயற்பெயர் கொண்டவர் சி.சு.செல்லப்பா. தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி பிறந்தவர். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தந்தை அரசு அதிகாரியாக இருந்ததால், அவர் பணியின் காரணமாக தூத்துக்குடி, பாளையங்கோட்டை, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் வசிக்க நேரிட்டது. தாய் மாமா ஊரான வத்தலக்குண்டில் அவரது பெரும்பாலான சிறுவயது நாட்கள் கழிந்திருக்கின்றன. மதுரைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற சி.சு.செல்லப்பா, இளம் வயது முதலே காந்தி மீதும் அவரது கருத்துகள் மீது மிகுந்த பற்று கொண்டவர். இதனால், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 1941-ல் சிறைவாசமும் அனுபவித்தவர். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட அவருக்கு ஆறு மாத சிறைதண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சிறைவாசத்தின் கடைசிநாள் நினைவு குறித்து இவர் எழுதிய மூடி இருந்தது’ சிறுகதை பரவலான கவனம் பெற்றது. சரஸாவின் பொம்மை, மணல் வீடு, சத்யாகிரகி, அறுபது, ஒரு பழம், பந்தயம், நீர்க்குமிழி உள்ளிட்ட சிறுகதைத் தொகுதிகளையும், வாடிவாசல் நாவலையும் எழுதியிருக்கிறார். தனது இறுதிக் காலங்களில் முனைப்புடன் இவர் எழுதிய 1,700 பக்கங்கள் கொண்டசுதந்திர தாகம்’ நாவல் புகழ்பெற்றது. ஏற்றுக்கொண்ட கொள்கையில் சிறிதும் சமரசம் செய்துகொள்ளாத சி.சு.செ, அரசு சார்பில் வழங்கப்பட்ட விருதுகளைப் புறக்கணித்தே வந்தார்.

சி.சு.செல்லப்பா
சி.சு.செல்லப்பா

எழுத்தாளர் கா.நா.சு நடத்தி வந்த `சந்திரோதயம்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, தனது வாடிவாசல் என்ற முதல் நாவலை எழுதினார். 1947-ல் அவர் எழுதிய இந்த நாவல் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் நாவல் வடிவில் வெளியாகி பெறும் வரவேற்பைப் பெற்றது. சி.சு.செல்லப்பட்ட, தனது 35 வயதில் எழுதிய வாடிவாசல்தான் தமிழில் ஜல்லிக்கட்டு பற்றி வெளியான முதல் நாவல். இந்தியா சுதந்திரத்தை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது அந்தக் காலத்தின் சுதந்திர வேட்கையாகவே இந்த நாவலின் வீச்சு அமைந்திருக்கும். தமிழின் புகழ்பெற்ற நாவல்களுள் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் வாடிவாசல், தொடர்ந்து 17-க்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டிருக்கிறது. காலச்சுவடு பதிப்பாகத் தற்போது வெளியாகிவரும் வாடிவாசல் கதையை இயக்குநர் வெற்றிமாறன் திரைப்படமாக எடுத்து வருகிறார். இதில், நடிகர் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வாடிவாசல்

ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிடப்படும் இடம் வாடிவாசல் எனப்படும். அப்படி கதை நடப்பதும் செல்லாயி அம்மன் கோயில் வாடிவாசலில்தான். கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் அறிமுகமும் ஒரே வரியில்தான் இருக்கும். தனது தந்தையைக் கொன்ற காளையைப் பழிவாங்கத் துடிக்கும் பிச்சியின் கோபமும், காரி எனப்படும் அந்தக் காளையின் உரிமையாளரான ஜமீன்தாரின் அதிகார மனமும் மோதிக்கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை. பிச்சியின் மச்சான் மருதன், வாடிவாசலில் அவர்கள் சந்திக்கும் வயது முதிர்ந்த கிழவர் என கதாபாத்திரங்கள் தங்கள் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடல் வழியாக ஜல்லிக்கட்டு பற்றியும் மாடுகள் பற்றிய நுணுக்கங்களையும் சி.சு.செ, வாசிப்பவருக்குக் கடத்திக் கொண்டிருப்பார்.

வாடிவாசல்
வாடிவாசல்

பிச்சியின் தந்தை அம்புலியின் வீரத்தைப் பற்றி அறிந்திருக்கும் அந்தக் கிழவர் – பிச்சி, மருதன் இடையிலான உரையாடல்கள் கேலி, கிண்டலில் தொடங்கி புரிதலோடு நகரும். அனுபவசாலியான அவரின் அறிவுரைகளோடு, பில்லை, கொரால் காளைகளை பிச்சி அணைந்ததும் கதை சூடுபிடிக்கத் தொடங்கும். வாடிவாசலில் கூடியிருக்கும் மக்கள் பிச்சியின் வீரத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். அது, முதல்முறையாக காரிக் காளை மீதான ஜமீன்தாரின் நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும். காரிக் காளையும் பிச்சியும் நேருக்கு நேர் சந்திக்கும் தருணமும் அதன்பிறகான சம்பவங்களும் சமூகக் கட்டமைப்புகளோடு பொருந்திப் பார்க்க வேண்டியவை. காளையை அதிகாரவர்க்கத்துடனும் சுதந்திர வேட்கையோடு அதை அடக்க முயலும் பிச்சியை போராடும் மக்களாகவும் காட்சிப்படுத்தியிருப்பார் சி.சு.செ.
70 பக்கங்கள் மட்டுமே கொண்ட குறுநாவலான வாடிவாசல் அப்போதைய சமூகத்தின் கட்டமைப்புகளை ஜல்லிக்கட்டு விளையாட்டின் பின்னணியில் சொல்கிறது.

வாடிவாசல் நாவலை சி.சு.செல்லப்பா இப்படி முடித்திருப்பார். `மிருகத்துக்கு ரோசம் வந்தாலும் போச்சு; மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!’ – காலத்தால் அழியாத வரிகள்!

Also Read – தாயாரின் திடீர் பிரிவு; `தருமி’ கேரக்டர் சூழல் – நடிகர் நாகேஷ் வாழ்வின் முக்கிய 3 சம்பங்கள் #HBDNagesh

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top