முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி – 25 ஆண்டு வழக்கின் பின்னணி!

1991-96 அ.தி.மு.க ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த புலவர் இந்திரகுமாரி-க்கு எதிரான ஊழல் வழக்கில், அவரது கணவர் உள்பட 3 பேர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

புலவர் இந்திர குமாரி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான 1991 – 96 அ.தி.மு.க ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் புலவர் இந்திரகுமாரி. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றதாக 1997-ல் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு வழக்கு 25 ஆண்டுகளாக நடந்து வந்தது. பின்னர், இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கிவரும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

ஊழல்
ஊழல் (Representational Image)

வழக்கின் பின்னணி

இந்திரகுமாரி சமூக நலத்துறை அமைச்சராக இருந்தபோது அவரது கணவரும் வழக்கறிஞருமான பாபு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளி நடத்துவதாகக் கூறி அரசிடமிருந்து ரூ.15.45 லட்சம் பெற்றிருக்கிறார். அந்தப் பணத்தை முறைகேடாகச் செலவழித்ததாகக் கூறி 1997-ல் சமூக நலத்துறை செயலாளராக இருந்த லட்சுமி பிராணேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, சமூக நலத்துறை முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை முன்னாள் இயக்குநர் சண்முகம் ஐ.ஏ.எஸ், இந்திர குமாரியின் கணவர் பாபு, இந்திர குமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது குற்றம்சாட்டியது.

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி

1991-96 காலகட்டத்தில் பாபுவை நிர்வாக அறங்காவலராகக் கொண்டு மெர்சி மதர் இந்தியா என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதேபோல், பரணி சுவாதி என்ற கல்வி அறக்கட்டளையும் தொடங்கப்பட்டு, காதுகேளாதோர், ஊனமுற்றோருக்கான பள்ளிகளைத் தொடங்கப்போவதாக அரசிடம் இருந்து பணம் பெறப்பட்டது. இதற்காக அரசிடமிருந்து ரூ.15.45 பெறப்பட்ட நிலையில், அப்படியான பள்ளிகளே இல்லை என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தண்டனை

இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலீசியா, இன்று தீர்ப்பளித்தார். வழக்கில் தொடர்புடையை கிருபாகரன் ஐ.ஏ.எஸ் இறந்துவிட்ட நிலையில், வெங்கடகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, ஐ.ஏ.எஸ் அதிகாரி சண்முகம் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு ஆகியோருக்குத் தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், சண்முகம் ஐ.ஏ.எஸ்-க்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அவர் தற்போது தி.மு.க இலக்கிய அணியில் இருந்து வருகிறார்.

Also Read – விஜய் Vs எஸ்.ஏ.சந்திரசேகர் – விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதா… பின்னணி என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top