1993-ல் போலீஸார் சித்திரவதையில் கொல்லப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு வழக்கை மையமாகக் கொண்டு நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் படம் உருவாகியிருக்கிறது. கடலூர் மாவட்டத்தை உலுக்கிய ராஜாக்கண்ணு கொலை வழக்கில் என்ன நடந்தது?
முதனை கிராமமும் பழங்குடியினரும்
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியத்தில் இருக்கும் கம்மாபுரத்தை அடுத்து இருக்கிறது முதனை என்ற சிறிய கிராமம். இந்தப் பகுதியில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் எனப்படும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வசித்து வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வந்த அந்த குடும்பத்தினர், நெல் அறுவடை நேரங்களில் அருகிலிருக்கும் கிராமங்களுக்குக் குடும்பத்தோடு சென்று கூலி வேலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 1993-ல் கோபாலபுரம் என்ற கிராமத்துக்குக் கூலி வேலைக்காகச் சென்றிருக்கிறார்கள். அங்கே ஒரு வீட்டில் தங்கியிருந்து விவசாயக் கூலி வேலைகளைச் செய்து கூலியாக நெல்லைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
அப்போது ஒரு வீட்டில் 40 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனதாகப் புகார் எழுந்திருக்கிறது. இதுகுறித்து கம்மாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த விசாரணைக்காக கம்மாபுரம் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட குரும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். தனது கணவரை விடுவிக்கக் கோரி காவல்நிலையம் சென்ற அவரது மனைவியும் போலீஸார் கடுமையாகத் திட்டி அனுப்பியிருக்கிறார்கள். இந்தநிலையில், ராஜாக்கண்ணு காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடியதாக அவரது மனைவியிடம் போலீஸார் மறுநாள் சொல்கிறார்கள். அவர் வீட்டுக்கு வந்தால் காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் மிரட்டப்பட்டிருக்கிறார்.
புகார் – போராட்டம்
ஆனால், போலீஸார் கடுமையாகத் தாக்கிய நிலையில் தனது கணவர் தப்பிச் செல்ல வாய்ப்பில்லை. அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவியோடு ஆர்டிஓ, டிஎஸ்பி தொடங்கி கடலூர் ஆட்சியரிடமும் ராஜாக்கண்ணுவின் மனைவி புகார் கொடுக்கிறார். புகாரின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ராஜாக்கண்ணுவை போலீஸார் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி தொடர் போராட்டங்களை நடத்தினர். அதன்பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், நீதிமன்றத்தை நாட முடிவு செய்கிறார்கள். அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த கே.சந்துரு (உயர் நீதிமன்ற நீதிபதியாக ஓய்வுபெற்றவர். இவரின் கதாபாத்திரத்தில்தான் சூர்யா நடித்திருக்கிறார்) உதவியை ராஜாக்கண்ணுவின் மனைவி நாடுகிறார்.
நீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சாட்சியம் அளித்தனர். 1996-ல் உயர் நீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 3 சென்ட் நிலம், ரூ.2.65 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், ஜெயங்கொண்டான் அருகே மீன்சுருட்டியில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத நபரின் சடலத்தின் அடையாளங்களும் ராஜாக்கண்ணுவின் அங்க அடையாளங்களும் ஒத்துப் போவதைக் கண்டுபிடித்தனர். பின்னர் இது கொலைவழக்காக மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்தது. முதலில் கடலூர் நீதிமன்றத்திலும் பின்னர் விருதாச்சலம் விரைவு நீதிமன்றத்திலும் நடந்த இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. ராஜாக்கண்ணு அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் 5 பேருக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனையும் அரசு மருத்துவர் ராமச்சந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி விருதாச்சலம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய ஓய்வுபெற்ற டிஎஸ்பி, கம்மாபுரம் காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், ராஜாக்கண்ணுவுக்கு சிகிச்சை அளித்ததாக பொய் சாட்சியம் கூறிய மருத்துவர் ராமச்சந்திரன் என்பவர் உள்பட 12 பேரைக் கைது செய்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் ராஜாக்கண்ணு குடும்பத்தினருக்குக் கடைசி வரை உறுதுணையாக இருந்தவர் கம்மாபுரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த கோவிந்தன். வழக்கில் வெற்றிபெற்ற பிறகே திருமணம் என தனது திருமணத்தைத் தள்ளிப்போட்ட அவர், 2006-ல் தீர்ப்பு வந்த பிறகு, தனது 39-வது வயதில் திருமணம் செய்துகொண்டார். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளராக இருந்த கே.பாலகிருஷ்ணனும் இந்த வழக்கில் முக்கியப் பங்காற்றினார். பல்வேறு தரப்பினரின் மிரட்டல்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் மீறி வழக்கில் வெற்றிகரமாக வாதாடி நீதியை நிலைநாட்ட வழக்கறிஞர் கே.சந்துருவின் வாதங்கள் முக்கியமானவை. ராஜாக்கண்ணுவின் 75 வயதான மனைவி பார்வதி, தற்போது முதனை கிராமத்தில் வசித்து வருகிறார்.
ஜெய்பீம்
இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனைவு கலந்து ஜெய்பீம் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல். சூர்யா, பிரகாஷ்ராஜ், மணிகண்டன், ரஜீஷா விஜயன், லீஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.