டெல்லி பல்கலைக்கழகம்

தமிழ் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி படைப்புகளை நீக்கிய டெல்லி பல்கலைக்கழகம்… பின்னணி என்ன?

டெல்லி பல்கலைக்கழகத்தின் இளங்கலை ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவில் இருந்து புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியின் சிறுகதை, தமிழகத்தைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்கள் சுகிர்தராணி, பாமா ஆகியோரின் மொழிபெயர்ப்புப் படைப்புகளை நீக்கிய செயல் கடும் விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறது. என்ன நடந்தது?

டெல்லி பல்கலைக்கழகம்

டெல்லி பல்கலைக்கழகம்
டெல்லி பல்கலைக்கழகம்

டெல்லி பல்கலைக்கழகத்தின் இளங்கலை ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவின் ஐந்தாவது செமஸ்டர் பாடத்திட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரும் பழங்குடியினரின் உரிமைக்காகப் போராடி வருபவருமான மகாஸ்வேதா தேவியின் `திரௌபதி’ என்ற சிறுகதை இடம்பெற்றிருந்தது. பழங்குடியினப் பெண் ஒருவரின் போராட்டம் பற்றி பேசும் புகழ்பெற்ற அந்த சிறுகதை, கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து டெல்லி பல்கலைக்கழகப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்களான சுகிர்தராணி, பாமா ஆகியோரின் படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டு இந்தப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது.

மகாஸ்வேதா தேவி
மகாஸ்வேதா தேவி

இந்தநிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தின் மேற்பார்வைக் குழு (Oversight Committee) திரௌபதி சிறுகதை, சுகிர்தராணி, பாமா ஆகியோரின் படைப்புகளையும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியிருக்கிறது. சுகிர்தராணியின் `கைம்மாறு’,என் உடல்’, பாமாவின் `சங்கதி’ ஆகிய படைப்புகள் நீக்கப்பட்டிருக்கின்றன. மேற்பார்வைக் குழுவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்வி நிர்வாகக் குழுவின் 15 உறுப்பினர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

பாமா
பாமா

அந்தக் கடிதத்தில், `இது பாடத்திட்டத்தை அழிவுக்குள்ளாக்கும் செயல். தலித் எழுத்தாளர்கள், பழங்குடியினர் பற்றிய பாடப்பகுதிகளை நீக்கிவிட்டு ஆதிக்க சாதியைச் சேர்ந்த ராமாபாயின் படைப்புகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பாடத்திட்டங்களை நீக்குவதற்கு கல்விரீதியாக எந்தவிதமான காரணங்களையும் மேற்பார்வைக் குழு விளக்கவில்லை. அதேபோல், மகாஸ்வேதா தேவியின் எந்தவொரு சிறுகதையையும் எதிர்காலத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்கக் கூடாது என எதிர்ப்புக் கருத்தையும் மேற்பார்வைக் குழு முன்வைத்திருக்கிறது. மகாஸ்வேதா தேவி உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர், சாகித்ய அகாடமி, ஜன்பத் விருது, மத்திய அரசிடமிருந்து பத்ம விபூஷண் விருது பெற்றவர். தலித், பழங்குடியின உறுப்பினர் ஒருவர் கூட இல்லாத மேற்பார்வைக் குழுவின் இந்த நடவடிக்கை ஒருதலைபட்சமானது’ என்று எதிர்ப்புப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

சுகிர்தராணி
சுகிர்தராணி

“டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமா அவர்களின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணி அவர்களின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலேயே மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைப்பட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.

பெண்கள் உரிமை – ஒடுக்கப்பட்டோர் விடுதலை – மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் – மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் ஒன்றிய அரசையும் வலியுறுத்துகிறேன்’’ என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மதுரை எம்.பியும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன், “டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. பொது சமூகத்தில் அழுத்தமான சலனங்களைத் தங்களது படைப்புகள் மூலம் ஏற்படுத்திய இவர்களின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருக்கிறார்.

மேற்பார்வைக் குழு என்ன சொல்கிறது?

இதுகுறித்து பேசியிருக்கும் டெல்லி பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவின் தலைவர் எம்.கே.பண்டிட், `எந்தவொரு செயலுக்குமே எதிர்ப்பு எழுவது இயல்பானதுதான். அதுதான் நடைமுறை. என்ன மாதிரியான எதிர்ப்பு என்பதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், குறிப்பிட்ட சிறுகதை பல வருடங்களாகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. மறுபரிசீலனை என்று வருகையில், அதை ஏற்றுக்கொள்ளலாம். ஒரே ஒரு எழுத்தாளரின் பாடம் மட்டுமல்ல; எத்தனையோ எழுத்தாளர்களின் படைப்புகளையும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதிருக்கிறது’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். சாதியரீதியிலான சர்ச்சை பற்றிய கேள்விகளுக்கு,எழுத்தாளர்களின் சாதி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சாதியத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இந்தியர்கள் அனைவரும் பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்கிற ரீதியில் நான் பார்க்கவில்லை’’ என்று பதிலளித்திருக்கிறார்.

Also Read – பெண் குழந்தைகள் கற்பதை இஸ்லாமியர் விரும்ப மாட்டார்களா… மதுரை கேந்திரிய வித்யாலயா சர்ச்சைக் கேள்வி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top