Black Lives Matter ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரண வழக்கில் தீர்ப்பு..! பின்னணி என்ன?

ஜார்ஜ் ஃப்ளாய்ட்’ பெயரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்திருக்க முடியாது.என்னால சுவாசிக்க முடியல.. என்னைக் கொன்னுடாதீங்க’னு ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீஸ்கிட்ட சொன்னது உலகளவுல பலருடைய தூக்கத்தையும் கெடுத்தது. அமெரிக்காவுல மட்டுமில்லாம ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் வசிக்கிற பல நாடுகள்லயும் அம்மக்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாவதுக்கு எதிரா மிகப்பெரிய போராட்டமே நடந்துச்சு. இந்த வழக்குல காவலர் டெரிக் சாவின் குற்றவாளினு நீதிமன்றம் தீர்ப்பளிச்சுருக்கு. உலகம் முழுக்க இந்த தீர்ப்புக்கு வரவேற்பு இருக்கு. இந்த சூழல்ல, இந்த வழக்கோட முன்கதை என்ன… தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

அமெரிக்காவுல மின்னியாபொலிஸ் பகுதில உள்ள கப் ஃபுட்ஸ் கடைக்கு ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த ஆண்டு மே மாதம் சிகரெட் பாக்கெட் வாங்கப் போயிருக்காரு. கடையில அவர் குடுத்த 20 டாலர் நோட்டு கள்ளநோட்டுனு கடைக்காரங்க நினைச்சுருக்காங்க. இதனால, காவல்துறைக்கு தகவல் குடுத்துருக்காங்க. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரி ஜார்ஜ் ஃப்ளாய்டை தரையில் தள்ளி அவரின் கழுத்துப் பகுதியில முழங்காலை வச்சு அழுத்தி பிடிச்சாரு. `என்னால மூச்சு விட முடியல, விட்ருங்க’னு ஜார்ஜ் ஃப்ளாய்ட் பல முறை சொல்லியும் விடாம துன்புறுத்தியிருக்காங்க. அந்த வீடியோ சோஷியல் மீடியாவுல அதிகளவுல பகிரப்பட்டது.

காவலர்கள் அதிக நேரம் `chokeholds’ அதாவது கழுத்துப்பகுதியில் இறுக்கிப் பிடிச்சதால மூச்சு விட முடியாமல் ஜார்ஜ் ஃப்ளாய்ட் சம்பவ இடத்திலேயே இறந்துட்டாரு. வீடியோ உலகளவுல அதிகம் பகிரப்பட்டதால அமெரிக்க காவல்துறை அதிகாரியான டெரிக் சாவினுக்கு எதிரா பல நாடுகளிலும் போராட்டங்கள் வெடிச்சுது. காவலர்கள் கிட்ட இருந்த நிறவெறிதான் ஜார்ஜ் ஃப்ளாய்டோட மரணத்துக்குக் காரணம்னு மக்கள் கடுமையாப் போராடினாங்க.

டேர்னெல்லா ஃப்ரேசியர் என்ற 17 வயது சிறுமி தான் அந்த வீடியோவை எடுத்தது. இந்த சம்பவம் தொடர்பா டேர்னெல்லா பேசும்போது, “நான் ரொம்ப சின்ன பொண்ணு. எனக்கு 17 வயசுதான் ஆச்சு. என்னால போலீஸை எதிர்த்து நிக்க முடியாது. எனக்குப் பயமா இருந்துச்சு. நானும் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணாக இருப்பதால அந்த இடத்துல என்னால பேசமுடியாம தயக்கம் தடுத்துருச்சு. ஆனா, ஏதோ ஒரு தைரியத்துல வீடியோ எடுத்துட்டேன். அந்த வீடியோ உலகம் முழுவதும் அதிகமா பகிரப்பட்டிருக்கு. இல்லைனா, போலீஸ்காரங்க இந்த சம்பவத்தை அப்படியே மூடி மறைச்சுருப்பாங்க”னு சொல்லி இருக்காங்க.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்த வீடியோவை பார்த்து, “ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறந்தது ரொம்ப வேதனையா இருக்கு. வீடியோவை பார்த்ததுமே நான் அழுதுட்டேன். அவரோட கழுத்து மேல வைக்கப்பட்ட முழங்கால் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களை கீழே வைத்திருப்பதற்கான அடையாளமாக உள்ளது. உண்மையிலேயே இது மிகவும் சோகமான விஷயம். இனத்தைக் காரணம் காட்டி மில்லியன் கணக்கான மக்கள் வித்தியாசமா நடத்தப்படுறாங்க. இது ரொம்ப இயல்பா நடக்குது”னு உருக்கமா பேசியிருந்தாரு. அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் ட்ரம்பும் தனது இரங்கலை தெரிவிச்சாரு. ஆனால், இதுதொடர்பான போராட்டத்துல வன்முறையில் ஈடுபடும் மக்களைக் கண்டதும் சுடவும் உத்தரவிட்டிருந்தாரு. இதனால, ட்ரம்பின் மீது கடுமையா விமர்சனங்கள் எழுந்துச்சு.

போராட்டம் அமெரிக்கா முழுவதும் மிகவும் தீவிரமா பல நாள்கள் நடந்துச்சு. நோ ஜஸ்டிஸ்.. நோ பீஸ்!’னு மக்கள் தீவிரமா BlackLivesMatter’ போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினாங்க. இந்த போராட்டங்களின் இடையில வன்முறைகளும் அதிகளவில் நடந்துச்சு. போலீஸ்காரங்களுக்கும் மக்களுக்கும் இடையேயான மோதல்ல போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. தொடர் போராட்டங்கள் மற்றும் சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியில் வழக்கில் தொடர்புடைய டெரிக் சாவின் (Derek Chauvin) ​உள்ளிட்ட 4 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான விசாரணை மினசோட்டா பகுதியில் உள்ள ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் தொடங்கி நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரது தண்டனைக்கான விவரங்கள் பின்னால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதி வெல்லட்டும்..!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top