தான் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண், சைகை மொழியில் உதவி கேட்கவே, அவரைப் பத்திரமாக மீட்டிருக்கிறார்கள். டிக்டாக்கில் அவர் கற்றுக்கொண்ட சைகை மொழி, ஆபத்தில் இருந்து அவரைக் காப்பாற்றியிருக்கிறது. என்ன நடந்தது?
இளம்பெண் கடத்தல்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் இருக்கும் லாரெல் கவுண்டி பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண், கடந்த 2-ம் தேதி மாயாமாகியிருக்கிறார். இதுகுறித்து அவரது பெற்றோர் புகார் அளிக்கவே, லாரெல் கவுண்டி போலீஸார் விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள். இந்தநிலையில், கார் ஒன்றில் இளம்பெண் ஒருவர் ஆபத்தில் இருப்பதாக சைகை காட்டியதாக வாகன ஓட்டி ஒருவர் அவசர உதவி எண்ணாக 911-ஐத் தொடர்புகொண்டு தெரிவித்திருக்கிறார்.
குறிப்பிட்ட டொயோட்டா நிறுவன காரில் ஆண் ஒருவர் டிரைவர் சீட்டில் இருக்க, அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் தான் ஆபத்தில் இருப்பதாக கண்ணாடி வழியே சைகை காட்டியதாகவும் அந்த வாகன ஓட்டி போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, அந்த வாகன ஓட்டியைக் குறிப்பிட்ட வாகனத்தைப் பின் தொடர்ந்து செல்லுமாறும் அவர்கள் பயணிக்கும் பாதை குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுமாறும் போலீஸார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட வாகனத்தை இடைமறித்து இளம் பெண்ணை போலீஸார் மீட்டிருக்கிறார்கள். அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னரே, அந்த இளம்பெண் ஒரு வாரத்துக்கு முன்னர் மாயமானதும், அதுகுறித்து அவரது பெற்றோர் புகார் அளித்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரைக் கடத்திய 61 வயதான ஜேம்ஸ் ஹெர்பர்ட் பிரிக் என்பவர் கைது செய்யப்பட்டார். இளம் பெண்ணைக் கடத்திய ஜேம்ஸ், அவரோடு வடக்கு கரோலினா தொடங்கி டென்னஸி, கெண்டகி வழியாக ஓஹியோ மாகாணத்துக்கு வந்திருக்கிறார். அங்கிருக்கும் உறவினர் வீடுகளுக்கும் அவர் இளம்பெண்ணோடு சென்றிருக்கிறார்.
ஆபத்து சைகை
காரின் கண்ணாடி வழியாக அந்தப் பெண் ஆபத்தில் இருப்பதாக உதவி கோரி சைகை செய்ததே அவரைக் காப்பாற்ற உதவி செய்திருக்கிறது. கனடாவைச் சேர்ந்த பெண்கள் பாதுகாப்பு அமைப்பால், இந்த சைகை முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பெண்கள், சத்தம்போட்டு உதவி கேட்க முடியாதபட்சத்தில் இப்படி சைகை மூலம் உதவி கோரலாம் என்று அந்த அமைப்பு அறிவித்திருந்தது.
இதன்படி, ஆபத்தில் இருக்கும் பெண்கள் வீடியோ கேமாரவை நோக்கி தங்களது பெருவிரலை உள்ளங்கையில் மடக்கி, பின்னர் மற்ற விரல்களையும் குவித்து சைகை காட்டலாம் என்று அந்த அமைப்பு செய்முறை விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்த சைகையை டிக் டாக் மூலம் தெரிந்துகொண்ட அந்த இளம்பெண் அதைப் பயன்படுத்தி உதவி கோரியிருக்கிறார்.
Also Read – Dexter: New Blood – மாஸ் ரீ-என்ட்ரி கொடுத்த டெக்ஸ்டர்… ஓர் அனுபவம்!