ஷங்கர் படத்தில் இத்தனை மன்னர்களா!? – ஷங்கரின் வரலாற்று காதல்!

பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலும் படமாகப்போகிறது; அதை ஷங்கர் இயக்குகிறார் என்கிற தகவல் பரவியதில் இருந்தே இப்படி ஒரு வீடியோ பண்ணணும்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்போ வேணும்னா ஷங்கர் சூர்யாவை வெச்சோ இல்லை கேஜிஎஃப் யஷ்ஷை வெச்சோ வேள்பாரியை எடுக்கலாம். ஆனா, இப்படி ஒரு வரலாற்று படம் பண்ணுங்கிறதுக்காக ஷங்கர் அவரோட கரியர் ஆரம்பத்தில் இருந்தே அதற்கான வேலைகளைப் பார்த்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அதைத்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.

Director Shankar
Director Shankar

ஷங்கர் ஒரு வரலாற்று படம் பண்ணனுகிறது ஷங்கரோட ஆசை மட்டுமில்ல; அது எழுத்தாளர் சுஜாதாவோட ஆசையும் கூட. எந்திரன் படம் பண்ணும்போது சுஜாதாகிட்ட ஷங்கர், ‘சார் இப்போ நாம ஒரு சைன்ஸ் ஃபிக்‌ஷன் படம் பண்றோம். அடுத்தப்படம் அப்படியே இதுக்கு மாறா பீரியட் படம் பண்ணலாமா சார்’னு கேட்டதற்கு, ‘பண்ணுங்க ஷங்கர்; நீங்க பண்ணுனா நல்லா இருக்கும்’னு சொல்லியிருக்கார். இப்படி ஷங்கரின் பல வருட கனவான வரலாற்று படத்துக்கு தன் முதல் படத்தில் இருந்தே விதை போட ஆரம்பித்திருக்கிறார்.

பெரும்பாலும் ஷங்கரின் பட பாடல்கள் பல கதையில் இருந்து முற்றிலும் விலகி வேறு ஒரு அனுபவத்தைக் கொடுக்ககூடியதாகத்தான் இருக்கும். ஏனென்றால், ஷங்கர் நினைத்து வைத்திருக்கும் பல பிரமாண்ட விஷயங்களை பாடல்களில்தான் காட்ட முடியும். அதுதான் பெரிய ரீச்சும் கொடுக்கும்; கதைக்கு இடையூறு செய்யாமலும் லாஜிக் பார்க்காமலும் இருக்கும் என்பதால் ஷங்கரின் பல கிரியேட்டிவிட்டியை பாடல்களில்தான் காட்டியிருப்பார். அப்படித்தான் இந்த வரலாற்று படத்தின் மீதான காதலையும் பாடல்களில் காட்டியிருப்பார்,

ஷங்கரின் முதல் படமான ஜென்டில் மேன் படத்தில் ஒட்டகத்தை கட்டிக்கோ பாடலில் பல்லவி மட்டும் கதையோடு கலந்து இருக்கும். அதன் பின்னர் வரும் காட்சிகள் எல்லாம் மதுபாலாவின் கனவில் வருவது போலவும் அதில் அர்ஜூனும் அவரும் ராஜா, ராணி போல் ஆடுவார்கள். முதல் படம் என்பதால் இதை கொஞ்சம் எளிமையாகவே காட்சிப்படுத்தியிருப்பார். அதன் பிறகு இரண்டாவது படமான காதலனில் வரலாற்று படமாக இல்லாமல் முக்காலா பாடலை கெளபாய் தீமில் எடுத்திருப்பார். அடுத்து இந்தியன் படத்தில் அவர் ஆசைப்பட்ட மாதிரி ப்ரீயட் போர்ஷனை சேனாபதி கேரக்டரின் ப்ளாஷ்பேக்காக வைத்து அதில் சுதந்திரப் போராட்டத்தை காட்சிப்படுத்தியிருப்பார். அதேப்போல் இந்தியன் படத்தில் வரும் மாயா மச்சீந்திரா பாடலை ராஜா காலத்து பாடலாக எடுத்திருப்பார். அதில் இளவரசியாக இருக்கும் கதாநாயகியைப் பார்க்க அரண்மனைக்குள் செல்லும் கதாநாயகன் என்கிற பாணியில் அதை படமாக்கியிருப்பார். இப்படி இந்தியன் படத்தில் பீரியட் மற்றும் வரலாறு என இரண்டையும் கையாண்டிருப்பார்.

Also Read – விஜய் ஃபேன்ஸ்க்கு ஃபஸ்ட் சிங்கிள் எப்பவுமே ஸ்பெஷல்தான்… ஏன் தெரியுமா?

அடுத்ததாக வந்த ஜீன்ஸ் படத்தில் அன்பே அன்பே கொல்லாதே பாடலையும் ராஜா காலத்து டச்சிலேயே எடுத்ததோடு பூவுக்குள் பாடலில் சீனப்பெருஞ்சுவரை காட்டும் போதும் பிரமீடை காட்டும் போது ஐஸ்வர்யா ராயை சீன ராணியைப் போலவும் எகிப்து ராணியைப் போலவும் காட்டியிருப்பார். இப்படி அந்தப் பாடலிலும் ராஜா கால டச் இருக்கும். அடுத்து முதல்வன் படத்தில் வந்த முதல்வனே பாடலில் பக்காவாக ஒரு செட் போட்டு அர்ஜூனையும் மனிஷா கொய்ராலாவையும் ராஜா ராணியாக மாற்றி ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, கொச்சின் ஷனிபா, விஜயகுமாரை பாம்புகளாக்கி பாடலிலேயே ஒரு குட்டி பரமபதம் ஆடியிருப்பார். அடுத்தடுத்த படங்களான பாய்ஸ் மற்றும் அந்நியன் படத்தில் இப்படி எதையுமே செய்யாமல் விட்ட ஷங்கர், ரஜினியை வைத்து இயக்கிய சிவாஜியில் அதை டபுள் மடங்காக செய்துவிட்டார்.

சிவாஜி படத்தின் வாஜி வாஜி பாடலில் சூப்பர் ஸ்டாரை ஒரு வித்தியாசமான ராஜா தோற்றத்தில் காட்டி பிரமிக்க வைத்ததோடு, அரண்மனை செட்டையும் அழகாக போடவைத்து மிரட்டியிருப்பார். அடுத்து வந்த எந்திரன் படத்திலும் அரிமா அரிமா பாடலில் ரோபோக்களின் அரண்மணைப் போல் காட்டி அதில் ரோபோக்களில் கையில் ஈட்டியைக் கொடுத்து வீரர்களாக மாற்றியிருப்பார். அடுத்து நண்பன் படத்தில் அஸ்கு லஸ்கு பாடலில் ஃபாரின் சாங், மாடர்ன் சாங், ராஜா சாங், குத்து சாங் என ஒரு பாடலில் நான்கு தீம்களை வைத்து அதில் ராஜா சாங் என்று விஜயை அரசராக்கியிருப்பார். அடுத்து ஐ படத்தில் வந்த என்னோடு நீ இருந்தால் பாடலில் பக்காவான ராஜா காலத்து டச் இல்லை என்றாலும் எமி ஜாக்சனை ராணியைப் போலவும் அவரை கடத்தி வந்திருக்கும் மிருக மனிதர் என்பதைப் போல அந்த சாயலிலேயே எடுத்திருப்பார். 

ஷங்கர் இயக்கிய பல படங்களில் அரசர் கால டச் இருந்ததைப் போல அவர் தயாரித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படமும் ஒரு வரலாற்று படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஷங்கருக்கு வரலாற்று படத்தின் மீதும் அந்த களத்தின் மீதும் பல வருட காதல் இருப்பதால் வேள்பாரி மாதிரி ஒரு கதையை அவர் கையில் எடுக்கும் போது நிச்சயமாக பிரமாண்டத்திற்கும் வசூலுக்கும் பஞ்சம் இருக்காது என்பது இப்போதே நமக்கு நன்றாக தெரிகிறது.

ஷங்கர் எந்தப் பாடலில் வரலாற்று பாணியை பக்காவான காட்டியிருக்கிறார் என்பதை மறக்காம கமெண்ட் பண்ணுங்க.

2 thoughts on “ஷங்கர் படத்தில் இத்தனை மன்னர்களா!? – ஷங்கரின் வரலாற்று காதல்!”

  1. தயவு செய்து வேள்பாரி கதைய நல்லா படிச்சிட்டு படத்த எடுங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top