வாயைவிட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி தி.மு.க-வில் வலுக்கும் எதிர்ப்பு!

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கும் உள்ள நெருக்கம் ஊர் அறிந்தது. உதயநிதிக்கு அந்தக் குடும்பத்தில் என்ன இடமோ? அதற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அன்பில் மகேஷூக்கான இடம். 

அன்பில் மகேஷ் பொய்யாமொழி சறுக்கல்

கடந்த பல ஆண்டுகளாகவே மு.க.ஸ்டாலினின் பிளானிங் அன்ட் எக்ஸிகியூஷன் டீமில் அசைக்க முடியாத முக்கியமான நபர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவருக்கு குறுகிய காலத்தில் கிடைத்த இந்த முக்கியத்துவம், இயல்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள், இன்றைய  அமைச்சர்களிடம் மிகப்பெரிய காழ்ப்புணர்வை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும், அதை வெளிப்படையாக வெளிக்காட்டும் சந்தர்ப்பம் அவர்களுக்கு அமையவே இல்லை. மேலும், கட்சியிலும், ஆட்சியிலும் அன்பில் மகேஷை அசைக்க முடியவில்லை. இப்படி சென்று கொண்டிருந்த அன்பில் மகேஷ், அவரது வார்த்தைகளாலேயே அவருக்கே கொஞ்சம் சறுக்கலை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். 

முதல்வர் குடும்பத்தினருடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அன்பில் மகேஷ், உதயநிதி அமைச்சராக வேண்டும்; விரைவில் ஆவார் என்ற தொனியில் பேசினார்.  

அவர் பேசியது ஒன்றும் புதிய விஷயமல்ல. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து, உதயநிதிக்கு மேயர் பதவியா? அமைச்சர் பதவியா? துணை முதலமைச்சர் பதவியா? என்ற யூகம் பொதுவெளியிலும், பத்திரிகையாளர்க மத்தியிலும், மு.க.குடும்பத்திற்குள்ளும் விவாதமாகவும், சர்ச்சையாகவும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான். மற்ற இடங்களில் எப்படியோ… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்குள்ளேயே அதில் ஆளுக்கொரு கருத்து இருக்கிறது. ஆனால், முதலமைச்சரைப் பொறுத்தவரை, அவர் எப்படி மேயராக இருந்து அடுத்தடுத்த பதவிக்கு வந்தாரோ… அதுபோலவே தன் மகனும் வரவேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறார். ஆனால், குடும்பத்தினர் அதற்கெல்லாம், அவகாசம் இல்லை என்ற கரத்தில் உறுதியாக இருக்கின்றனர். இப்படி அந்தக் குடும்பத்திற்குள்ளேயே இந்த விஷயத்தில் பல குழப்பம் இருப்பதால்தான், இந்த விஷயத்தில் தி.மு.க முன்னணித் தலைவர்கள், அமைச்சர்கள் இதில் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர். 

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஆனால், அதை உடைத்த அன்பில் மகேஷ் தன்னிச்சையாக பத்திரிகையாளர்களிடம் உதயநிதி அமைச்சராக வேண்டும் என வெளிப்படையாகப் பேசினார். அப்படி அவர் பேசியது, பொதுமக்கள் மற்றும் ஊடகங்களால் அதிகாரப்பூர்வமான ஒரு அறிவிப்பாகவே கருத வழி ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும், முதலமைச்சர் குடும்பத்தினரின் இறுதி முடிவாகவும் அன்பிலின் வார்த்தைகள் பார்க்கப்பட்டன. இதைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்ட மற்ற சில அமைச்சர்கள், கட்சி முன்னணியினர் முதலமைச்சர் குடும்பத்தினரிடம், இந்த விவகாரத்தைப் பெரிதாகப் பற்ற வைத்தனர். எந்த முடிவாக இருந்தாலும் தலைவர் நீங்கள் சொல்லாமல், எப்படி அவராக இதுபோன்ற பெரிய விவகாரங்களைப் பொது வெளியில் பேசலாம்… என்று கொளுத்திப் போட்டனர். இதேபோன்ற சர்ச்சை மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்குள்ளும் வெடித்தது. அது முதலமைச்சருக்கு தர்மசங்கடமாகிப்போனது. 

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அறிவுரை

அதையடுத்து, முதலமைச்சர் தரப்பில் இருந்தே அன்பிலுக்கு அன்பாக சில கண்டிப்புக்கள் காட்டப்பட்டுள்ளன. மேடைகளில், பத்திரிகையாளர் சந்திப்பில் மிக கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். உற்சாகப் பேசும் ஆர்வத்தில், எதையும் உளறிவிடக்கூடாது.  அது முடியவில்லை என்றால், அதுபோன்ற கூட்டங்களையும், பத்திரிகையாளர் சந்திப்புக்களையும் தவிர்த்துவிடுங்கள் என்று மறைமுகமாக கூறப்பட்டுள்ளது. 


வீடியோ வடிவில் பார்க்க


அதையடுத்து, கட்சியில் சில இடங்களில் அன்பிலுக்கான முக்கியத்துவம் கொஞ்சம் மட்டுப்படத் தொடங்கி உள்ளது. அதை அறிந்து கொண்ட அமைச்சர்கள், இதுதான் சரியான நேரம் என தங்களின் காழ்ப்புணர்வை, அன்பிலுக்கு எதிரான எதிர்ப்பை சமீபமாக வெளிப்படையாகவே காட்டத் தொடங்கி உள்ளனர். 

MLA Anbil Mahesh

குறிப்பாக, கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த அன்பில் மகேஷ் காரில் இருந்து இறங்கியபோது, அவருக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த உற்சாகத்தில், விழாவிற்குள் நுழைந்த அன்பில் மூத்த அமைச்சர்களுக்கு சம்பிரதாயமாக வணக்கம் வைத்துக்கொண்டே சென்றார். ஆனால், அதற்கு எந்த அமைச்சரும் பதில் வணக்கம் கூட வைக்கவில்லை. மொத்தமாக கட்சியில் தீர்மானம் போடப்பட்டதைப்போல் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். தவறி வணக்கம் வைத்த ஒரு சிலரும் வேண்டா வெறுப்பாக அதைச் செய்தனர். வைக்காமல், முகத்தைத் திருப்பிக் கொண்டனர். சூழலைப் புரிந்துகொண்ட அன்பில் மகேஷூம், தற்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். அரசியல்ல இதெல்லாம் சாதரணம் என்பது தலைமுறை தலைமுறையாக அரசியலில் இருந்த குடும்பத்தில் இருந்து வந்த அன்பிலுக்குத் தெரியாதா என்ன?   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top