தேர்தல் நேர பிரசாரம், விளம்பரங்கள் போன்றவை இந்த டிஜிட்டல் யுகத்தில் முகம் மாறியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் டிரெண்டுக்கு ஏற்றவாறு தங்களை அப்டேட் செய்துகொண்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வாக்காளர்களைக் கவர்ந்து வருகின்றன.
தேர்தல் என்றாலே சுவர் விளம்பரம், சூறாவளிப் பிரசாரம் மற்றும் சின்னங்களைப் பிரபலப்படுத்தும் பணிகள்தான் அரசியல் கட்சிகளின், வேட்பாளர்களின் முக்கியமான இலக்கு. தொழில்நுட்பம் வளர்ச்சி, இன்டர்நெட்டில் மக்கள் செலவிடும் நேரம் அதிகரிப்பு, ஸ்மார்ட்போன் பயன்பாடு என கால மாற்றத்துக்கேற்ப அரசியல் கட்சிகளும் தங்களின் விளம்பர வியூகங்களையும் மாற்றிக்கொண்டிருக்கின்றன.
2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெல்வதற்கு டிஜிட்டல் தளங்களே மிகப்பெரிய பங்காற்றின. அந்தத் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து நின்ற ஹிலாரி கிளிண்டன் மாகாணங்களில் மக்களின் வாக்குகளை ட்ரம்பை விட அதிகம் பெற்றிருந்தாலும், தேர்தல் பிரதிநிதிகள் வாக்கு அடிப்படையில் ட்ரம்ப் அதிபரானார். ஹிலாரி வென்றிருந்தால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். அப்படி வரலாற்றையே திருத்தி எழுதும் வல்லமை பெற்றவை டிஜிட்டல் தளங்கள் என்பது அந்தத் தேர்தலில் தெரியவந்தது. இதையடுத்து, ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பெரும் டெக் நிறுவனங்கள் அரசியல் விளம்பரங்கள் விஷயத்தில் உஷாராகின. அரசியல் விளம்பரங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் விதிக்கப்பட்டன.
அரசியல் கட்சிகள் என்றாலே ஐ.டி. விங் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். ஆளும் அ.தி.மு.க, தி.மு.க என இரண்டு கட்சிகளுமே பிரசாரக் களத்தில் மோதிக் கொள்வதைப் போலவே டிஜிட்டல் களத்திலும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன. தங்களது சாதனைகளைப் பட்டியலிடும் இரண்டு கட்சிகளுமே, எதிர்க்கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கவும் தவறவில்லை. வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் தி.மு.க ஆட்சியில் நடந்த பிரச்னைகளான மின்வெட்டு, நில அபகரிப்பு புகார் உள்ளிட்டவைகளை அ.தி.மு.க யூடியூப், டிவி, செய்தித் தாள்கள் என பல்வேறு தளங்களிலும் விளம்பரங்களைக் கொடுத்து வருகிறது. அதேபோல், தி.மு.க-வும்
உரிமை மீட்க வா உடன்பிறப்பே’ `அ.தி.மு.க-வுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’போன்ற தலைப்புகளின் கீழ் மத அரசியலுக்கு எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டம், சேலம் எட்டு வழிச் சாலைப் பிரச்னை போன்றவற்றை முன்வைத்து விளம்பரங்களைச் செய்துவருகிறது.
சமூக வலைதளங்கள் மட்டும்மல்லாது செய்தி சேனல்கள், தியேட்டர்கள், யூ டியூப், இணையதளங்கள் தொடங்கி எங்கு திரும்பினாலும் வெற்றிநடை போடும் தமிழகம்’ அல்லது
உரிமை மீட்க வா உடன்பிறப்பே’ வாசகங்களைக் கேட்காமல் தமிழக வாக்காளர்களால் ஒருநாளைக் கழிக்க முடியாது என்ற நிலையே இன்று இருக்கிறது.
சரி எந்தக் கட்சி டிஜிட்டல் விளம்பரங்களை அதிக அளவில் செய்து வருகிறது? கூகுள் தளங்களைப் பொறுத்தவரை கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி முதல் இன்று வரை இந்தியாவில் அரசியல் விளம்பரங்களுக்காக ரூ.45,58,14,250 செலவிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறது. அவர்களின் யூடியூப், கூகுள் பிற தளங்களில் கொடுக்கும் விளம்பரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்தத் தகவல். இதில், தமிழகத்தில் தேர்தல் விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.117,315,000 என்கிறது கூகுள். இந்தப் பட்டியலில் பா.ஜ.க, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்திய அளவில் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன.
தி.மு.க-வின் மற்றொரு கணக்கு இந்தப் பட்டியலில் 34 விளம்பரங்கள், செலவிடப்பட்ட தொகை ரூ.37,20,500 உடன் 15வது இடத்தில் இருக்கிறது. அதேபோல், தமிழகத்தில் தி.மு.க-வுக்கும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கும் தேர்தல் வேலைபார்க்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் 187 விளம்பரங்கள், அதற்கு செலவான தொகை ரூ.36,32,000 என்று கூகுள் சொல்கிறது. இதுதவிர கிரேயான்ஸ் அட்வர்டைஸிங் பிரைவேட் லிமிட்டட் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமிக்கு விளம்பரங்களும், ஜெயா என்ற நிறுவனத்தின் பெயரில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் டிஜிட்டல் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது கூகுள் தரவு. இது கூகுள் மூலம் மட்டுமே செய்யப்படும் விளம்பரங்களுக்கான செலவு. இதுதவிர, நாளிதழ்கள், டிவி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட மற்றவைகளில் விளம்பரங்களுக்கான செலவுகள் தனி.
[infogram id=”77f9203a-2dca-4d67-98bd-14c8ca7f6f26″ prefix=”6la” format=”interactive” title=”political ads”]