Rahul Dravid

ஸ்காட்லாந்துக்காக 11 போட்டிகளில் விளையாடிய ராகுல் டிராவிட்… சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், இன்றைய இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்துவருபவர்.

இலங்கைக்கு எதிராக 1996-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகள் மூலமாக அறிமுகமான ராகுல் டிராவிட், இந்திய அணியின் பேட்டிங்குக்கு புதிய நம்பிக்கை ஒளி பாய்ச்சினார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட்டின் பேட்டிங், இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்றுகொடுத்தது. 2003-ம் ஆண்டுக்குள் இந்திய அணியின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக உயர்ந்தார் டிராவிட். 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி, அந்தத் தொடருக்குப் பிறகு நாடு திரும்பியது.

Rahul Dravid

அப்போது, சச்சின், சேவாக், டிராவிட், கங்குலி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்தது. ஆனால், இவர்களில் யாரும் அந்த ஓய்வை விரும்பவில்லை. அந்தநேரம், புதிதாக கிரிக்கெட் அணியை கட்டமைத்திருந்த ஸ்காட்லாந்து அணி இந்தியாவின் உதவியை நாடியது. கடந்த 2003 ஸ்காட்லாந்து அணியின் தலைமை செயல் அதிகாரி ஜிவைன் ஜோன்ஸ், அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட்டின் உதவியை நாடினார். `இந்திய அணி வீரர் ஒருவர் ஸ்காட்லாந்து வீரர்களோடு இணைந்து விளையாடினால், நுணுக்கங்களைக் கற்றுத் தருவதோடு டிரெஸ்ஸிங் ரூமிலும் ஆரோக்கியமான சூழல் நிலவ உதவிபுரியும்’ என்று கோரிக்கை வைத்தார்.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர், தங்கள் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே ஸ்காட்லாந்தின் விருப்பமாக இருந்தது. ஆனால், ஜான் ரைட் வேறு விதமாக இதை அணுகினார். அவர் ராகுல் டிராவிட்டை ஸ்காட்லாந்துக்காக விளையாட அனுப்புவதாகச் சொன்னார். `டிராவிட்டால் உங்கள் வீரர்களுக்கு மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் உதவி செய்ய முடியும்’ என்று சொன்னார் ஜான் ரைட். இந்த சாவலை ஏற்றுக்கொண்ட ராகுல் டிராவிட், புதிதாகத் திருமணமான மனைவி விஜிதாவுடன் இங்கிலாந்து பயணமானார்.

Jhon Wright, Sachin Tendulkar, Rahul Dravid

அங்கு இங்கிலீஷ் கவுன்டி லீக்கில் ஸ்காட்லாந்து தேசிய அணிக்காக 11 போட்டிகளில் விளையாடினார் டிராவிட். அவருக்காகப் போடப்பட்ட சுமார் 45,000 பவுண்ட் (தோராயமாக ரூ.46 லட்சம்) ஒப்பந்தத்துக்கான பணம் பெரும்பாலும் ஸ்காட்லாந்தில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களால் கொடுக்கப்பட்டது. ஸ்காட்லாந்து அணியின் வளர்ச்சிக்காகத் தாமாக முன்வந்து அவர்கள் நன்கொடை வழங்கினர். கவுண்டி லீக்கில் விளையாடிய 11 போட்டிகளில் 3 செஞ்சுரிகள், 2 அரைசதங்கள் உள்பட 600 ரன்களைக் குவித்தார் டிராவிட். பேட்டிங் சராசரி 66.66. இன்று வரை ஸ்காட்லாந்துக்காக அதிக பேட்டிங் சராசரி (குறைந்தது 5 போட்டிகள்) வைத்திருக்கும் வீரர் ஆச்சர்யமாக நம்ம டிராவிட்தான். அந்த சாதனையை இதுவரை எந்தவொரு ஸ்காட்லாந்து வீரரும் முறியடிக்கவில்லை. அந்தத் தொடரில் டிராவிட் அசத்தலாக ஆடியும், மற்ற வீரர்கள் பெரிதாக ஒத்துழைக்காத நிலையில் ஸ்காட்லாந்தால் 11-ல் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. அந்தத் தொடரில் ஸ்காட்லாந்துக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை டிராவிட் பெற்றார்.

Rahul Dravid

டிராவிட்டின் பங்களிப்பை உலக கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி ஸ்காட்லாந்து வீரர்கள் வரைப் பலரும் பாராட்டினர். 2007-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்திய அணியின் கேப்டனாக ஸ்காட்லாந்துக்கு ராகுல் டிராவிட் பயணமானபோது, நான்காண்டுகளுக்கு முன்பு அவரை வரவேற்ற அதே பாசத்துடன் அந்நாட்டு ரசிகர்கள் வரவேற்றனர். இதுகுறித்து அப்போது பேசிய டிராவிட், “ஸ்காட்லாந்து வீரர்கள், கிரிக்கெட்வாரிய அதிகாரிகள் பலருடனான நட்பை மிகவும் மதிக்கிறேன். அதை இன்றளவும் நான் தொடருகிறேன். எனக்கும், எனது மனைவிக்கும் அந்த மூன்று மாதங்கள் மிகப்பெரிய அன்பைக் கொடுத்தார்கள் ஸ்காட்லாந்து மக்கள். அது என்றும் மறக்க முடியாத அனுபவம்’’ என்று நெகிழ்ந்திருந்தார்.

Also Read – ஒரே நேரத்தில் 2 தொடர்கள்.. 2 வெவ்வேறு அணிகள்… இந்திய அணியின் அப்ரோச் சொல்லும் சேதி?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top