பார்லே ஜினு சொன்னதும் நமக்கெல்லாம் அதோட கவர்ல இருக்குற பொண்ணுதான் ஞாபகம் வரும். அந்த பொண்ணு யார்? அவங்களுக்கு இப்போ என்ன வயசு? தையல் கடையா ஆரம்பிச்சு உலகத்துல அதிக அளவுல விற்பனையாகுற பிஸ்கட்டா மாறின பார்லே-ஜியோட வரலாறு என்ன?
குஜராத்ல பிறந்த டெய்லரானா மோகன்லால் தயாள் சௌகான், தன்னுடைய 18 வயதில் மும்பையில் ஒரு தையல் கடை ஆரம்பிக்கிறார். அவருடைய மகன்களும் தையல் கடையை நடத்துவதில் உதவுகிறார்கள். அதேநேரம் மகன்களுக்கு மிட்டாய் தயாரிக்கும் ஐடியா வருகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய 1929 ஆம் ஆண்டு அது. அந்த நேரத்தில் சுதேசி இயக்கம் மிகத் தீவிரமாக இருந்தது. ஆங்கிலேயர்களின் மிட்டாய்கள் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டிருந்தது. சுதேசி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டிருந்த மோகன்லால் இந்தியாவிலேயே மிட்டாய்கள் தயாரித்து விற்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான இயந்திரங்கள் ஜெர்மனியில் கிடைக்கும் என்று தெரிந்துகொண்ட மோகன்லால் உடனடியாக ஜெர்மனி சென்று மிட்டாய் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொண்டு 60 ஆயிரம் ரூபாய்க்கு அதற்கான இயந்திரங்களையும் வாங்கி வந்தார். மும்பையின் புறநகர் பகுதியான வில்லே பார்லே என்ற இடத்தில் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.
தொழிற்சாலை ஆரம்பித்த அவர்களுக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாததால் அந்த ஊரின் பெயரிலேயே ‘ஹவுஸ் ஆஃப் பார்லே’ என்று நிறுவனத்திற்கு பெயரிட்டனர். அந்த சிறிய தொழிற்சாலையில் மோகன்லாலின் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர்தான் எல்லா வேலையும் பார்த்தனர். 1929 ஆம் ஆண்டிலிருந்து மிட்டாய்கள் தயாரித்து சுதேசி இயக்கத்தை முன்னிறுத்தி விளம்பரங்கள் வெளியிட்டது. இவர்களுடைய மிட்டாய்கள் மக்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியது. அந்த நேரங்களில் பிஸ்கட் என்றால் விலையுயர்ந்த உணவுப் பொருள். ஆங்கிலேயர்களிடமும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களிடமும் மட்டுமே இருந்தது. இதை உடைத்து ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி ஒவ்வொரு இந்தியனும் பிஸ்கட் சாப்பிட வேண்டும் என்று விரும்பினார் மோகன்லால் சௌகான். இந்தியாவிலேயே பிஸ்கட் தயாரித்து மிகக்குறைந்த விலையில் விற்க நினைத்தார்.
1938 ஆம் ஆண்டு அப்படி அவர் உருவாக்கிய பிஸ்கட்தான் ‘பார்லே குளுக்கோ’. அந்த நேரத்தில் உலகிலேயே மிக நீளமான ‘Oven’ இவர்களிடம்தான் இருந்தது. இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற பல இந்திய வீரர்களுக்கு தெம்பு தரக்கூடியதாக இருந்தது இந்த க்ளூக்கோ பிஸ்கட். 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பார்லே-க்ளூக்கோ வெளியிட்ட ஃப்ரீடம் விளம்பரம் பட்டிதொட்டி எங்கும் அந்த பிஸ்கட்டை எடுத்துச் சென்றது. ஐம்பது வருடங்களுக்கும் மேலாக பார்லே க்ளூக்கோ என்ற பெயரில் விற்பனையான அந்த பிஸ்கட் 80களில் பார்லே ஜி யாக மாற்றம் கண்டது. G for Genius என்று தனது டேக்லைனை மாற்றியது பார்லே. அந்த நேரத்தில் அவர்களுடைய பிஸ்கட் பாக்கெட்டின் கவரில் ஒரு குழந்தையின் படத்தைச் சேர்த்தது. பிறகு அந்தக் குழந்தையே பார்லே-ஜி யின் அடையாளமாகிப் போனது.
யார் அந்தக் குழந்தை?
சில வருடங்களுக்கு முன்பு பார்லே ஜியின் இருக்கும் குழந்தை இவர்தான் என்று நீரு தேஷ்பாண்டே என்பவர் பற்றிய செய்திகள் மீடியாக்களில் வந்தது. 65 வயதுக்கு மேல் ஆகும் நீரு தேஷ்பாண்டே நாக்பூரைச் சேர்ந்தவர். இவர் நான்கு வயதாக இருக்கும்போது இவருடைய அப்பா எதேச்சையாக எடுத்த படம்தான் பார்லே-ஜியில் இடம்பிடித்தது என்று கதைகள் உலாவந்தது. ஆனால் அது உண்மையல்ல என்று மறுத்தது பார்லே ஜி நிறுவனம். எவரெஸ்ட் என்ற விளம்பர நிறுவனம் பல வருடங்களாக பார்லேஜிக்கு விளம்பரங்கள் தயாரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தது. அந்த நிறுவனம் 1960 களில் உருவாக்கிய கற்பனை ஓவியம்தான் பார்லே ஜி குழந்தை. உண்மையில் அப்படி யாருமே இல்லை என்று விளக்கம் கொடுத்தது பார்லே ஜி.
உலக அளவில் அதிகம் விற்பனையாகும் பிஸ்கட்டான பார்லே ஜி ஒரு நாளைக்கு 40 கோடி பிஸ்கெட் தயாரிக்கிறது. 130 ஃபேக்டரி இருக்கிறது. 50 லட்சம் கடைகளில் விற்பனையாகிறது. கொரோனா முதல் லாக்டவுன் போட்ட மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதுவரை 85 வருட வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமான பார்லே ஜி பிஸ்கட்கள் விற்பனையாகியிருக்கிறது.
பார்லேஜி மட்டுமல்ல மேங்கோ பைட், மொனாக்கோ, ஃப்ரூட்டி, ஆப்பி, பாப்பின்ஸ் என எல்லாமே இவர்களுடைய ப்ராடக்ட்தான். பிஸ்லரி வாட்டர் பாட்டிலும் பார்லே நிறுவனத்தின் தயாரிப்புதான்.
Also Read – பூமர் பபுள்கமின் வரலாறு என்ன… எப்படி இத்தனை வருடம் விலை ஏறாமல் இருக்கிறது?
sbdyj0