கடந்த சில ஆண்டுகளிலேயே மிகவும் வெரைட்டியான, விதவிதமான ஜானர்ல பட்டையைக் கிளப்பும் படங்களை 2022-ல் கொடுத்திருக்கிறார்கள் சேட்டன்ஸ். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் கிட்டத்தட்ட 25 மலையாளப் படங்கள் தேறும். இதுல பலருக்கும் பிடிக்கக் கூடிய, முழுக்க முழுக்க எங்கேஜிங்காக வைத்திருக்கக் கூடிய கவனத்துக்குரிய 10 மலையாள படங்கள்தான் இந்த வீடியோல பார்க்கப் போறோம். தியேட்டர் ரிலீஸ் ஆன பிறகு ஓடிடியில் வெளியான படங்கள், நேரடியாக ஓடிடியில் வெளியான படங்களை எல்லாம் சேர்த்து, இப்போதைக்கு ஓடிடில காணக் கிடைக்கக்கூடிய படங்களோட அறிமுகத்தைதான் இந்த வீடியோல ஃபாஸ்டா பார்க்கப்போறோம்.
மலையாளப் படங்கள்!
ஒரு விஷயத்தைக் கவனுத்துல வெச்சுக்கோங்க. என்னதான் சினிமா பற்றியதா இருந்தாலும், இந்த விடியோ ஸ்டோரியில யதேச்சையா தேசப்பற்று கொண்ட ஒரு மேட்டர் இருக்கு. அந்த ஃபன்னி ரீசன் கடைசில சொல்றேன்.
ஜன கண மன (Jana Gana Mana)
பல்கலைகழகப் பேராசிரியராக பணியாற்றி வரும் மம்தா மோகன்தாஸ் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். மாணவர்கள் போராட்டம் வெடிக்கிறது. வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது. ஏசிபி-யாக வருகிற சூரஜ் வெஞ்சரமூடு டீம் விசாரணை நடத்துகிறது. அதன் தொடர்ச்சியாக கோர்ட்-டிராமாவா மாறுது படம். முதல் பாதியில் சூரஜும், ரெண்டாம் பாதியில் பிருத்விராஜும் ஸ்க்ரீன் ஸ்பேஸ் மொத்தத்தையும் எடுத்துக்குற இந்தப் படம், க்ரைம் – த்ரில்லருக்கு உரிய எங்கேஜிங்கா மட்டும் இல்லாம, உயர்கல்வி நிறுவனங்களில் ஒட்டியிருக்கிற சாதி, மத அரசியலையும் நிறைய நிஜமான ரெஃபரன்ஸுடன் அப்பட்டமா காட்டி மிரட்டுகிறது. ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடக்குது. அதையொட்டி, நான்கு பேரை என்கவுன்டர் செய்றாங்க. மக்கள் அதை செலிபிரேட் பண்றாங்க. அது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு குத்திக் காட்டுது இந்தப் படம். ஆம், இதுக்கான ரெஃபரன்ஸ்… 2019-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த என்கவுன்ட்டர் சம்பவம். அதைப் பத்தி நமக்கு தெரிஞ்சிருந்தா, இந்தப் படம் பேசுற போலி என்வுன்ட்டர் அரசியல் நமக்கு புரியும். தெளிவும் கிடைக்கும். இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது.
Also Read – அவங்கள மாதிரி பாட முடியாதுப்பா.. சித்ராவின் பெஸ்ட் பாடல்கள் லிஸ்ட்!
பூதகாலம் (Bhoothakaalam)
ஒரு வாடகை வீடு. அம்மா ரேவதி. மகன் ஷேன் நிகம். அம்மாவுக்கும் மகனுக்கும் எமோஷனலா அட்டாச்மென்ட் இல்லை. ஷேன் வேலை கிடைக்காம தம்மு, தண்ணின்னு அடிக்ஷன் நோக்கிப் போகிறார். இந்தச் சூழலில், வீட்டுக்குள் பீதியாக்குற மாதிரி பல சம்பவங்கள் நடக்குது. படம் கொஞ்சம் கொஞ்சமாக திக் திக் அனுபவத்துக்கு டிரான்ஸ்ஃபர் ஆகுது. பேய் நடமாட்டம், அதுக்குப் பின்னாடி இருக்கிற சம்பவங்கள்னு நம்மயும் சேர்த்து மிரட்டுறாங்க. இதற்கிடையே அம்மாவுக்கும் மகனுக்குமான எமோஷனல் பாண்டிங் வலுவாகுது. ரொம்ப சிம்பிளா படத்துல இருக்குற கேரக்டர்ஸையும் நம்மையும் மிரட்டி, சைக்கலாஜிக்கலாகவும் டீல் பண்ற இந்தப் படம் சோனி லிவ்-ல இருக்கு. ரேவதியும் ஷேன் நிகமும் போட்டி போட்டு பெர்ஃபார்மன்ஸ்ல மிரட்டி இருப்பாங்க. இந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்காக கேரள அரசு விருதும் ரேவதிக்கு கிடைச்சுருக்கு. வழக்கமான, பேய் படங்கள்ல வர்ற மாதிரி இல்லாம, நிஜத்துல நம்ம வீட்லயும் ஆன்மாக்கள் அலைந்தால் எந்த மாதிரி நாம ஃபீல் பண்ணுவோமா, அந்த மாதிரி ஃபீல் கொடுக்குற மாதிரியான காட்சி அமைப்புகள்தான் இந்தப் படத்தோட ஸ்பெஷலே.
மலையங்குஞ்சு (Malayankunju)
மலைக்கிராமம் ஒன்றில் தாயுடன் வசித்து வருகிறார் ஃபஹத் ஃபாசில். நிலச்சரிவு ஒன்றில் சிக்கிக்கொள்ளும் அவர், எப்படி மீண்டு வந்தார்? அவருடன் நிலச்சரிவில் சிக்கியவர்களின் நிலை என்னவானது என்பதுதான் படமே. ரொம்ப சிம்பிளா ஆரம்பிச்சுப் போற இந்தப் படம், போகப் போக நம்மையும் உள்ளே இழுத்துட்டுப் போயிடும். ஹீரோ ஃபகத் ஃபாசிலுக்கு ஃபர்ஸ்ட் ஆஃப்ல செம்மயா இரிட்டேட் பண்ற ஒரு குழந்தையின் அழுகுரல், இரண்டாம் பாதியில் வேறு விதமா மாறுது. அந்த டிரான்ஸிஷன்தான் இந்தப் படத்தோட அடிநாதம்னே கூட சொல்லலாம். ஃபகத் பெர்ஃபார்மன்ஸ் பத்தி சொல்லணுமா என்ன? ஃபக்த் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவும் இந்தப் படத்தோட தனிச்சிறப்பு. ஒரு டார்ச் லைட் ஒளியில் மட்டும் புதைக்குழிக்குள் நடக்குறதை பதிவு செய்து காட்டுறது உண்மையிலேயே நம்மை மலைக்க வைக்கும் விஷயம். கடைசில வர்ற ரஹ்மானோட அந்தப் பாட்டு, எல்லா வலிகளுக்கும் நிவாரணமான அனுபவம் தரும். இந்த சர்வைவர் த்ரில்லர் படத்தை ப்ரைம் வீடியோல பார்க்கலாம்.
கூமன் (Kooman)
‘த்ரிஷ்யம்’, த்ரிஷ்யம் டூ-க்கு அப்புறம் இயக்குநர் ஜீத்து ஜோசப் கொடுத்திருக்கிற முக்கியமான க்ரைம் த்ரில்லர்தான் ‘கூமன்’ (Kooman). இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை கே.ஆர்.கிருஷ்ணகுமார் கவனித்திருக்கிறார். ஜீத்து ஜோசப்புக்கு பழக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்லயும், டீக்கடையிலும் அதிக காட்சிகள், இந்தப் படத்திலும் உண்டு. ஒரு போலீஸ், திருடன் ஆனா என்னா ஆகும்ன்றதுதான் ஒன்லைன். ஆனா இந்த ஒன்லைனுக்குப் பின்னால நிறைய சைக்கலாஜிக்கல் விஷயங்கள் இருக்கு. ரொம்ப விறுவிறுப்பாக நகரும் இந்தத் த்ரில்லரில் வரும் ட்விட்ஸ்ட் எதிர்பாராத ஒண்ணு. எல்லாருக்கும் பிடிக்குமான்றது டவுட். ஆனா, நல்ல இண்ட்ரஸ்டிங்கான மூவி பார்க்க நினைக்கிறவங்களுக்கு, திருட்டு என்பதும் ஒரு கலைன்னு சொல்லாம சொல்லும் இந்தப் படம் நல்ல தீனியா இருக்கும். குறிப்பா, ஹாசிஃப் அலி மற்றும் ஜாஃபர் இடுக்கு ரெண்டு பேரும் தங்களோட பெர்ஃபார்மன்ஸ்ல மிரட்டியிருப்பாங்க. படம் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கிறது.
படா (Pada)
2022-ல் மலையாளத்தில் வெளிவந்த முக்கியமான பொலிட்டிகல் – த்ரில்லர்தான் படா. பழங்குடியின மக்களின் நில உரிமைக்காக, 1996-ல் பாலக்காடு கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்து ‘அய்யன்காளி படை’யின் நான்கு பேர், கலெக்டரை சுமார் 10 மணி நேரம் பிணைக் கைதியாக்கினர். அந்தப் போராட்டம்தான் கமல் கேஎம் எழுத்து – இயக்கத்தில் படா எனும் படமா பக்காவாக வந்திருக்கிறது. குஞ்சாக்கோ போபன், விநாயகன், ஜோஜூ ஜார்ஜ், திலீஷ் போத்தன்… இந்த நாலு பேரும் செமத்தியா மிரட்டியிருப்பாங்க. மற்றொரு முக்கியமான கேரக்டரில் வரும் பிரகாஷ் ராஜும், கலெக்டர் கேரக்டர்ல வர்ற அர்ஜுன் ராதாகிருஷ்ணனும் கச்சிதமாக நடித்திருப்பார்கள். வழக்கமா இந்த மாதிரியான கதைகள்ல வலுவான ஃப்ளாஷ்பேக் போர்ஷன் வச்சிருப்பாங்க. ஆனால், இதுல தேவையில்லாத சீன்களோ, ஃபிளாஷ்பேக் சம்பவங்களோ இல்லாமல் ப்ரோட்டாகனிஸ்ட் நான்கு பேர், அவங்க பர்சனல் சம்பந்தப்பட்ட சில நிகழ்கால காட்சிகள் மட்டும் வெச்சு திரைக்கதையை ரொம்ப க்ரிப்பா செஞ்சிருப்பாங்க. கொஞ்சம் கேர்லஸ்ஸா இருந்தா ஆவணப் படமா மாறியிருக்க வாய்ப்பு இருக்கு. ஆனால், அட்டகாசமான திரைக்கதையால விறுவிறுப்பான சினிமாவா நம் கண்முன்னே விரியும் இப்படம் ப்ரைம் வீடியோவில் இருக்கிறது.
குமாரி (Kumari)
2022-ல் வெளியான மலையாள படங்களில் தனித்து நிற்கிறது ‘குமாரி’. தொன்மம் சார்ந்த ஃபேண்டசி வகை படம்தான் இது. மேக்கிங்கும், கேரக்டரைசேஷனும், நடிப்பும் பயங்கர மிரட்டலா இருக்கும். ஒரு பழங்குடிகளின் தெய்வம், அந்த ஊரின் தம்புரானை பழிவாங்கும் கதைன்னு மேலோட்டமா பார்த்தாலும், பெண்கள் ஒடுக்கப்படுவதும், அதிலிருந்து ஒரு பெண்ணோட பேரெழுச்சியும் ரத்தமும் சதையுமா காட்டியிருப்பாங்க. பொன்னியின் செல்வன்ல பூங்குழலியா வந்து நம்மை மனசை கவர் பண்ணின ஐஸ்வர்யா லக்ஷ்மிதான் குமாரி படத்தோட ப்ரொட்டாகனிஸ்ட். அவங்களோட ஆக்டிங்கும், ஷைன் டாம் சாக்கோவோட பெர்ஃபார்மன்ஸும் படத்தோட இன்டன்சிட்டியை கூட்டியிருக்கும். கன்டென்ட் ரீதியா கம்பேர் பண்ணும்போது காந்தாராவுக்கு இணையான படம்னும் சொல்லலாம். குறிப்பாக, சாவு வராம அழுகின உடலோட நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வதைபட்டு கிடக்குற தம்புரானைக் காட்டும் காட்சிகள்ல ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு ஏற்படுற அதே திகில் அனுபவம், நமக்கும் கிடைக்கும். தன்னையும் தன் குழந்தையும் காப்பாத்திக்க எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போகுற ஐஸ்வர்யா லக்ஷ்மி கேரக்ட்ர் வடிவமைத்த விதம் ‘க்ளாஸ்’னே சொல்லலாம். நெட்ஃப்ளிக்ஸ்ல இருக்கு ட்ரை பண்ணுங்க.
நா தான் கேஸ் கொடு (Nna Thaan Case Kodu)
திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ்பவர் குஞ்சாக்கோ போபன். ஒருநாள் உச்சா போக ஒதுங்கும்போது, அவர் மீது ஆட்டோ மோத, அதுல இருந்து தப்பிக்க ஒரு வீட்டுச் சுவரை எகிறி குதிக்க, அந்த வீட்ல இருக்குற நாய்கள் இவர் உட்கார்ற இடத்துல குதறித் தள்ள, தனக்கு ஏற்பட்ட துன்பியல் சம்பவத்துக்கு எதிரா கேஸ் போட்டு, தானே வாதாடுறாரு. ஒரு முழு நீள கோர்ட் – டிராமா. ஆனா, ப்ளாக் ஹ்யூமர்ல நமக்கு செமத்தியான சிரிப்பு விருந்து நிச்சயம். அதேநேரத்துல, நம் சமூகத்தையும் அரசியலையும் இந்தப் படம் பகடி பண்ற விதம் க்ளாஸ். ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண சட்டப் போராட்டத்தைக் காட்டும் இந்தப் படம், நம்மை என்டர்டெயின் பண்றதுலயும் ஜெயிச்சு நிக்குறதுதான் மேட்டர். படத்துல ஆரம்பத்துல இருந்தே காட்சித் திரையில் அப்பப்ப பெட்ரோல் விலையை நமக்கு காட்டுவாங்க. ஆரம்பத்துல 72 ரூபாய் என்ற தகவலை பதிவு செய்வாங்க. படம் முடியும்போது பெட்ரோல் விலை ரூ.100-னு காட்டுவாங்க. காலம் நகர்வதை ஆடியன்ஸுக்கு சொல்றதுக்கு கூட அரசியலை பயன்படுத்தின விதம் டாப் க்ளாஸ்.
தள்ளுமாலா (Thallumaala)
தமிழ்ல 2கே கிட்ஸ் கொண்டாடும் படமா ‘லவ் டுடே’ அமைந்தது. ஆனா, அதோட கன்டென்ட்டும் கருத்தும் பூமர்த்தனம் கொண்டதுன்றது வேற விஷயம். உண்மையிலேயே தெறிக்கத் தெறிக்க 2கே கிட்ஸ் வாழ்வியலை அச்சு அசலா நியோ-நாயிர் [neo-noir] ஸ்டைல்ல எடுக்கப்பட்ட படம்னா அது தள்ளுமாலா (Thallumaala)தான். 2கே கிட்ஸின் கலர்ஃபுல் வாழ்க்கையையும் கருப்புப் பக்கங்களையும் கலந்து கட்டி சொல்லியிருக்கு இந்தப் படம். கேரளால இந்தப் படத்துக்கு செம்ம ரெஸ்பான்ஸ். தெளிந்த நீரோடை மாதிரி கதை நகரணும்னு நினைக்கிறவங்களுக்கு இந்தப் படம் சுத்தமா புரியாது. விதவிதமான ஜானர்ல சினிமாவை விரும்புறவங்களுக்கு இந்தப் படத்தோட மேக்கிங் தர்ற அனுபவம், செம்ம ட்ரீட். சண்டைக்காட்சிகளும் பின்னணி இசையும் இந்தப் படத்தோட ஹைலைட்னு சொல்லலாம். தியேட்டர் சண்டைக்காட்சியில் ‘விக்ரம் வேதா’ பின்னணி இசை வர்ற இடம், கல்யாணத்துல இரண்டு டீமும் சண்டை போடும்போது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் மீம் டெம்ப்ளெட் மாதிரி இடுப்புல கை வெச்சுகிட்டு கல்யாணி முறைக்கிற சீன்-னு நம்மை அசத்துல மொமண்ட்ஸ் நிறைய நிறைய இருக்கும். டோவினோ தாமஸும் ஷைன் டாம் சாக்கோவும் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிற இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ்ல இருக்கு.
ரோசார்க் (Rorschach)
ஒரு பேய் பழிவாங்குற கதையை எத்தனையோ பார்த்திருப்போம். ஆனா, தனக்கு நேர்ந்த ஒரு கொடூர சம்பவத்தால், ஒரு பேயை மனுஷன் துரத்தித் துரத்தி பழிவாங்குறதைப் பார்த்திருக்கோமா? அதுதான் மம்முட்டி அசால்டா மிரட்டியிருக்கிற ‘ரோசார்க்’. சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லரா வெளிவந்துள்ள இந்தப் படம் ஒரு ஸ்லோ பர்னர். ரொம்ப நிதானமா ஸ்டார்ட் ஆகும். மம்முட்டி தன்னோட கர்ப்பிணி மனைவி காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிப்பார். தேடுதல் வேட்டை நடக்கும். ஆனா, மம்முட்டி வேட்டையாடுவதோ ஒரு பேயை. ஏற்கெனவே செத்துப் போனவனை எப்படி பழிவாங்க முடியும்னு நமக்கு தோணலாம். அந்தப் பேயோட நிம்மதியை சீர்குலைக்குறதுதான் மமுட்டியோட மோட்டிவ். அதற்கான வேலைகளை அவர் செய்வார். நாம மிரண்டு போயிடுவோம். நிச்சயம் ஆடியன்ஸுக்கு ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். படத்தோட இறுதிக் காட்சிகளில் ஒரு அம்மா கேரக்டரின் விஸ்வரூபத்துல நமக்கு காட்டுவாங்க. அது ஷாக்கிங்கா இருக்கும். உண்மை என்னென்னா, 80ஸ், 90ஸ்ல எல்லா இந்திய அம்மாக்களும் அப்படித்தான். தங்களோட பசங்க எவ்ளோ மோசமானவங்களா இருந்தாலும், அவங்களுக்கு மட்டுமே சப்போர்ட் பண்ற பொதுவான குணாதிசயத்தை கவனிக்கலாம். இந்தப் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்ல இருக்கு.
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே (Jaya Jaya Jaya Jaya Hey)
கடைசியா நாம பார்க்கப்போற படம், ஜெய ஜெய ஜெய ஜெய ஹே. சமீப காலமாக, இந்தப் படத்தோட போஸ்டரையும், ரைட்டப்களையும் நிச்சயம் நீங்க கடந்து வந்திருப்பீங்க. அக்டோபர் கடைசில தியேட்டருக்கு வந்த இந்தப் படத்தோட பட்ஜெட் வெறும் ஆறு கோடி ரூபாய். ஆனா, கல்லா கட்டினதோ கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய். டிசம்பர் கடைசில டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்ல வெளியாகியிருக்கிற படத்தை நம்மூர் ரசிகர்களும் கொண்டாடிட்டு இருக்காங்க. மலையாள திரையுலகில் முக்கியமான படைப்பாளியா மட்டும் இல்லாமல், தேர்ந்த நடிகராகவும் உருவெடுத்து இருக்குற பசில் ஜோசப்புக்கு இது ஜாக்பாட் படம். அதேமாதிரி, ஆக்ஷன் அவதாரம் எடுத்து இருக்குற தர்சனா ராஜேந்திரனுக்கு இது மெகா ஹிட் படம். ஒரு சீரியஸான சப்ஜெக்ட்டை வயிறு குலுங்க வைக்கிற காமெடியா கன்வெர்ட் பண்ணியிருக்காங்க. ‘தி கிரேட் இந்தியன்’ கிச்சன்… பூப்பாதைன்னா, ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’வை சிங்கப்பாதைன்னு சொல்லலாம். டொமஸ்டிக் வயலன்ஸ் என்று சொல்லப்படுகிற குடும்ப வன்முறையை முள்ளை முள்ளால எடுக்கணும்னு பெண்களுக்கு சொல்லிக் கொடுத்து பிற்போக்கு ஆண்களை பீதியடைய வெச்சிருக்கு இந்தப் படம். இந்த மாதிரி சீரியசான சப்ஜெக்ட்டை கைப்புள்ள ரேஞ்சுக்கு டீல் பண்ணினா, சீரியஸ்னஸ் நீர்த்துப் போகும்னு ஒரு பக்கம் சீரியஸான விமர்சனங்கள் இந்தப் படம் மேல வெச்சாலும், ஒரு ஃபுல் மீல்ஸ் என்டர்டெய்னரா இந்தப் படம் ஜெயிச்சு இருக்கு. நிச்சயம் இந்தப் படம் யாரையும் ஏமாத்தாது. அது மட்டும் கியாரன்டி.
இது தவிர, மலையாளப் படங்கள் வரிசையில் 2022-ம் ஆண்டு கமர்ஷியலா செம்ம ஹிட்டடித்த பீஷ்ம பர்வம் (Bheeshma Parvam), ஹிர்த்யம் (Hridayam) போன்ற வசூல் வெற்றிப் படங்களும், பத்தொன்பதாம் நூட்டாண்டு (Pathonpatham Noottandu), அறியுப்பு
(Ariyippu), புழு (Puzhu), ஒரு தெக்கன் தள்ளு கேஸ் (Oru Thekkan Thallu case), சல்யூட் (Salute), பால்து ஜான்வர் (Palthu Janwar), அவியல் (Aviyal), வெயில் (Veyil), போன்ற தீவிர சினிமா ஆர்வலருக்கான படங்களும் ஓடிடியில் காணக் கிடைக்கின்றன. உங்களை ஏதோ ஒரு வகையில ஈர்த்த 2022-ன் சிறந்த மலையாளப் படங்கள் பத்தி கமெண்ட்ல சொல்ல மறந்துடாதீங்க.
தேசப்பற்று – மலையாளப் படங்கள்!
ம்… மலையாளப் படங்கள் பத்தின இந்த வீடியோ ஸ்டோரில தேசப்பற்று கலந்துருக்குன்னு சொன்னேனே யாராவது கெஸ் பண்ணீங்களா..?
அது என்ன மேட்டர்னா, மலையாளப் படங்கள் பட்டியலில் முதல் இடம்பெற்றிருக்கும் படத்தோட தலைப்பு, நம்ம தேசிய கீதத்தின் முதல் வரி… ஜன கண மன. கடைசியா இடம்பெற்றிருக்கிற படத்தோட தலைப்பு, நம் தேசிய கீதத்து கடைசி வரி… ஜெய ஜெய ஜெய ஜெய ஹே… உங்களுக்குப் பிடிச்ச மலையாளப் படங்கள் எதெல்லாம்… மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!
எப்புர்றா!