பார்வதி ஏன் `அவுட் ஆஃப் தி சிலபஸ்’ நடிகை தெரியுமா? – அவர் செய்த 4 தரமான சம்பவங்கள்!

ஒரு இன்டர்வியூல பார்வதிக்கிட்ட அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ‘பார்வதி ரொம்பவே செலக்ட் பண்ணி நடிக்கிற படங்கள் பொலிட்டிக்கல் கரெக்டனஸ் உள்ள படங்களாக இருக்குமா? இல்லை, கமர்ஷியல் பிளாக் பஸ்டர் ஆகுற சினிமாவா இருக்குமா?’ அப்டினு கேள்வி கேட்பாங்க. அதுக்கு பார்வதி ‘ஏன் ரெண்டையும் எதிர் எதிர்ல வைக்கிறீங்க? நான் செலக்ட பண்ற படங்கள் எல்லாம் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் ஆகுற பொலிட்டிகல் கரெக்ட்னஸ் உள்ள படங்களா இருக்கணும்னுதான் என்னோட பெஸ்ட்ட கொடுப்பேன்’ அப்டினு சொல்லுவாங்க. பார்வதியோட சினிமா வாழ்க்கைலயும் சரி தனிப்பட்ட வாழ்க்கைலயும் சரி ‘பாலிடிக்ஸ்’ அப்டின்ற வார்த்தையை பிரிச்சுட்டு அவங்களோட வாழ்க்கையைப் பற்றி எதையும் எழுதவோ அல்லது பேசவோ முடியாது. பொதுவா நடிகைகளைப் பற்றி பேசும்போது ‘எவ்வளவு அழகா இருக்காங்கள்ல?, அவங்களை மாதிரி யாராலையும் நடிக்க முடியாதுப்பா!’ இப்படிலாம் குளோரிஃபை பண்ணி பேசுவோம். ஆனால், பார்வதியைப் பற்றி பேசும்போது இப்படிலாம் பேசுனா அவங்களுக்கு சுத்தமா புடிக்காது. இன்னொன்னு, அவங்களோட நடிப்புத்திறமையை நாம குறிப்பிட்டு சொல்லிதான் ரசிகர்களுக்கு தெரியனும்ன்ற எந்த அவசியமும் இல்லை. அதனால, அந்த சப்ஜெக்ட்டை அப்படியே கட் பண்ணிட்டு. தன்னுடைய வாழ்க்கையில் பார்வதி செய்த 4 தரமான சம்பவங்களை இந்த வீடியோல நாம பார்க்கலாம்.

பார்வதி

சூப்பர்ஸ்டாருக்கு எதிரான குரல்

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார், மம்முட்டி. இவரது நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ‘கசபா’ என்ற திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் இந்தப் படம் பெற்றது. இந்தப் படத்தில் பெண்களுக்கு எதிரான சில வசனங்கள் இருந்ததைப் பார்த்து பெண்ணியவாதிகள் உட்பட பலரும் அதிருப்தி அடைந்தனர். ஆனால், ‘கசபா’ வெளியானபோது இதற்கு எதிராக பெரிய குரல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதற்கு அடுத்த ஆண்டு கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இதில் நடிகை பார்வதி திருவோத்து கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பார்வதி, ”சமீபத்தில் ‘கசபா’ திரைப்படம் பார்த்தேன். மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் பெண்களைப் பற்றி தரக்குறைவாக பேசுவதைப் பார்த்து அதிருப்தி அடைந்தேன். வருத்தமாக உள்ளது” என விமர்சிக்கும் வகையில் பேசினார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மம்முட்டி பேசிய வசனங்களுக்கு எதிராக பல குரல்கள் ஒலித்தின. ஆனால், மம்முட்டியின் ரசிகர்கள் பார்வதியை கடுமையாக தகாத வார்த்தைகளால் விமர்சித்தனர். கேலி செய்தனர். பார்வதியின் இடத்தில் மற்ற நடிகைகள் யாராவது இருந்திருந்தால், ‘‘நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. உங்களை எனது வார்த்தைகள் கஷ்டப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்” அப்டினு மன்னிப்பு கேட்க வாய்ப்புகள் இருந்துருக்கும். ஆனால், பார்வதி அப்படி பண்ணல. மிகவும் தைரியமாக தனது ட்விட்டர் பக்கத்தில், “சினிமா என்பது சமூகத்தில் உள்ள அனைத்து மனிதர்களையும் அனைத்து அம்சங்களையும் பிரதிபலிக்கும் விஷயமாக உள்ளது. சினிமாவில் அநியாயங்களையும் வன்முறைகளையும் மாஸ் என்று கூறுவதை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என தான்கூறிய கருத்தில் அழுத்தமாக கால் வைத்து நின்றார். ஒரு நடிகையாக இருந்துவிட்டு முன்னணி நடிகரையே எதிர்த்து குரல் கொடுக்கலாமா என பலரும் கேட்டதற்கு, ”நான் நடிகை தான். ஆனால், அதற்கு முன்பு ஒரு பெண்” என்றார், பார்வதி. உண்மையிலேயே பார்வதி பண்ணதுதான மாஸ்!

பார்வதி

பார்வதி மேனன் இல்லை… ‘பார்வதி’ மட்டும்தான்!

பார்வதி சினிமாத்துறைக்குள்ள நுழைந்ததுல இருந்து சுமார் 10 வருஷம் ‘பார்வதி மேனன்’ அப்டின்ற பெயரோடுதான் எல்லாராலும் அழைக்கப்பட்டாங்க. இன்னைக்கும் பல இண்டஸ்ட்ரீல பல நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் தங்களோட பெயருக்கு பின்னால சாதி பெயர் வைச்சிட்டுதான் இருக்காங்க. ஆனால், அதற்கு எதிரா குரல் கொடுத்த நடிகை பார்வதி. “என்னோட பெயர் பார்வதி மட்டும்தான். பார்வதி மேனன்லாம் இல்லை. ரொம்பவே சந்தோஷமா ஒரு சாதிப்பெயரை என்னோட பெயர்ல சேர்க்க வேண்டாம் என்ற முடிவோட இருக்கேன். என்னோட பாஸ்போர்ட்லகூட வெறும் பார்வதினு மட்டும்தான் இருக்கு. எனக்கு சாதி பெயர்கள் வைச்சிருக்குறது புடிக்காது” அப்டினு பார்வதி பல மேடைகள்ல, பல இன்டர்வியூக்கள்ல சொல்லியிருக்காங்க. செமல்ல!

பார்வதி

வாழ்வதே புரட்சிதான்!

பொதுவாக நடிகைகளும் சரி பெண்களும் சரி தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக வெளியே சொல்லமாட்டாங்க. ஆனால், பார்வதி தனக்கு நடந்த அநீதிகளை தைரியமா வெளியே சொன்னாங்க. மும்பையில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பார்வதி, “எனக்கு அந்த சம்பவம் நடந்தபோது நான் குழந்தையாக இருந்தேன். எனக்கு பாலியல் தொல்லை நடந்தது என்பதை உணர 17 வருடங்கள் அனது. அதை வெளியில் தெரிவிக்க இன்னும் 12 வருடங்கள் ஆனது. இந்த சம்பவம் தொடர்பாக பல இடங்களில் பேச எண்ணினேன். ஆனால், என்னுடைய பாலினம் அதற்கு தடையாக இருந்தது. பிறகு ஒரு மனிதராக என்னை உணர்ந்து இந்த சம்பவத்தைப் பற்றி பேசுகிறேன். என்னை இந்த சம்பவம் ரொம்பவே பாதிச்சுது. இதனைக் கடக்க நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும் இதை தெரியப்படுத்தேன். அவர்கள் எனக்கு இதனை சமாளிக்க உதவினர்” அப்டினு பேசியிருந்தாங்க. #MeToo மூமண்டின் தொடர்ச்சியாக இந்த பேச்சு வைரலானது. பார்வதியின் இந்தப் பேச்சைப் பகிர்ந்து பலரும் தங்களுக்கு நடந்த அநீதிகளையும் வெளியில் கூறினர். #MeToo மூமண்ட் சமூக வலைதளங்களில் வைரலாக இருந்தபோது பார்வதி தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியமானவையாக பார்க்கப்பட்டது. கேரளாவில் முன்னணி நடிகைக்கு நடந்த நீதிக்கு எதிராகவும் பார்வதி கொடுத்த குரல் அழுத்தமானது. இதன் தொடர்ச்சியாக மலையாள நடிகர் சங்க அமைப்பான `அம்மா’ அமைப்பில் இருந்து வெளியேறினார். அதுமட்டுமல்ல கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் 13 முறை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கட்ட விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக #avalkoppam என்ற ஹேஷ்டேக் வைரலானது. இதன்கீழ் பார்வதி கடிதம் ஒன்றை அவருக்கு ஆதரவாக எழுதி வெளியிட்டார். அந்தக் கடிதத்தில், “நான் இந்த சூழ்நிலையில் உங்களோட அமர்ந்து ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன். நீங்கள் வாழும் இந்த நொடியில் உங்களது உயிருக்கு மதிப்பளியுங்கள். உங்களுக்குப் பின்னால் நாங்கள் இருக்கிறோம். முட்கள் நிரம்பிய இந்தப் பாதையில் உங்களோடு நடக்கவும், உங்களுக்காக சண்டையிடம், உங்களோடு வாழவும் நாங்கள் இருக்கிறோம். மதிப்பற்ற, தூக்கி எறியும் ஒரு பொருளாக நம்மை கருதும் இந்த உலகத்தில் வாழ்வதே புரட்சிதான்” என குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதமும் சமூக வலைதளங்களில் செம வைரலானது. இப்போது நான் சொன்ன சம்பவங்கள் எல்லாம் பாலியல் தொல்லைக்கு எதிராக அவர் கொடுத்த குரல்களுக்கான சின்ன எக்ஸாம்பிள்தான். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு அவர் குரல் என்றைக்கும் ஒலிக்கும். ஏன்னா, பார்வதி தான் ஒரு பெண், பெண்ணியவாதி என்பதில் பெருமைகொள்கிறார்.

பார்வதி

அர்ஜூன் ரெட்டியை கிழித்த பார்வதி!

இந்திய சினிமா ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம், அர்ஜூன் ரெட்டி. இந்த திரைப்படத்தை பலரும் கத்திக் கொண்டாடிய சப்தத்தில் இதற்கு எதிரான குரல்கள் பலருக்கும் கேட்காமலேயே போனது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் உள்ள நடிகர், நடிகைகள், பெண்கள், இளைஞர்கள் விஜய் தேவரகொண்டாவுக்கு வேறலெவல் ஃபேன் ஆனது இந்தப் படத்தில்தான். ஆனால், விஜய் தேவரகொண்டாவுக்கு எதிராகவே நின்று அந்தப் படத்துக்கு எதிராக குரல் கொடுத்தார். விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா, ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், ஆயுஷ்மான் குரானா, மனோஜ் பாஜ்பாய்னு பலரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பார்வதியும் கலந்துகொண்டார். அப்போது அவரிடம், “ஒரு நடிகர் ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கும்போது சமூகப் பொறுப்பு இருக்க வேண்டுமா? பெண் வெறுப்பு மாதிரியான குறிப்பிட்ட சில விஷயங்கள் இருக்கும் கதைகளில் நடிக்க மாட்டேன் என சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு இந்த விஷயங்களை மீறி ஒரு கதை பிடித்திருந்தாலும் அதில் நடிக்க மாட்டீங்களா?” என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலாக, “இப்படியான விஷயங்கள் உள்ள கதை நிச்சயம் எனக்குப் பிடிக்காது. ஒரு ஆண், பெண்ணின் மீது வெறுப்பைக் காட்டுகிறான். வன்முறையாக நடந்து கொள்கிறான். அதை நீங்கள் திரையில் காட்டும்போது ரசிகர்கள் கை தட்டுகிறார்கள் என்றால் அது அப்படியான விஷயத்தை போற்றுவதுதான். அதே நேரத்தில் அந்தக் கதாபாத்திரம் செய்தது சரியா? தவறா? என்று ரசிகர்களை யோசிக்க வைத்தால் அப்போது நீங்கள் ரசிகரோடு இணைந்து ஒரு உரையாடலை துவங்குறீர்கள். அதுதான் சினிமா. அர்ஜூன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களில் ஆணாதிக்கம் உயர்வாக சித்தரிக்கப்பட்டுள்ளது” என்று விஜய் தேவரகொண்டா முன்பாகவே அப்படத்தில் இருக்கும் தவறான விஷயங்களை சுட்டிக்காட்டினார். அதுதான் பார்வதி!

தன்னுடைய படங்களில் வரும் கேரக்டர்களைவிட நிஜத்தில் இன்னும் போல்டாக இருப்பவர். அவருடைய நடிப்பில் வெளியான படங்களில் உங்களோட ஃபேவரைட் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: எவர்கிரீன் நாயகி சிம்ரனை ஏன் பிடிக்கும்… 4 `நச்’ காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top