Mr.IPL சுரேஷ் ரெய்னாவின் டாப் 5 ஐபிஎல் இன்னிங்ஸ்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு உறுப்பினராகக் கடந்த 2008ம் ஆண்டு முதல் பயணித்து வந்த சுரேஷ் ரெய்னாவை, 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் ஏலம் எடுக்க எந்தவொரு அணியுமே விருப்பம் காட்டவில்லை. இது, சி.எஸ்.கே ரசிகர்கள் மட்டுமல்லாது, கிரிக்கெட் உலகில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விராட் கோலி, ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக ஐபிஎல் தொடரின் நான்காவது லீடிங் ரன் (5,528) ஸ்கோரர் நம்ம ரெய்னாதான். ரூ.2 கோடி அடிப்படை விலையில் பொசிஷன் செய்யப்பட்டிருந்த அவரை முதல், இரண்டாவது சுற்று என இரண்டு சுற்றுகளிலுமே எந்தவொரு அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பதுதான் சோகம். சி.எஸ்.கே ரசிகர்களால் `சின்ன தல’ என்று அன்போடு அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா, அந்த அணிக்காக விளையாடிய 5 பெஸ்ட் இன்னிங்ஸ்களைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

25 பந்துகளில் 87 ரன்கள் Vs KXIP – 2014

ரெய்னா
ரெய்னா

2014 ஐபிஎல் தொடரில் டேபிள் டாப்பரான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான எலிமினேட்டர் போட்டியில் 227 என்ற மெகா டார்கெட்டை நோக்கி சி.எஸ்.கே விளையாடியது. அந்தப் போட்டியின் பவர் பிளேவில் பஞ்சாபின் பவுலிங்கை நொறுக்கிய ரெய்னா, 25 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டாகி ரெய்னா வெளியேறிய பின்னர், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சி.எஸ்.கேவால் வெற்றிபெற முடியவில்லை. இதுதான், தனது மனதுக்கு நெருக்கமான ஐபிஎல் பெர்ஃபாமென்ஸ் என்று ரெய்னாவே ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார்.

55 பந்துகளில் 98 ரன்கள் Vs RR – 2009

ரெய்னா
ரெய்னா

ஐபிஎல் இரண்டாவது சீசனில் நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியனில் நடந்த போட்டியில், ரெய்னா ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார். முதலில் பேட் செய்த சி.எஸ்.கே-வுக்கு 55 பந்துகளில் 98 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் ரெய்னா. அந்தப் போட்டியில் 164 ரன்கள் எடுத்த சி.எஸ்.கே, ராஜஸ்தானை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதல் சதம் Vs KXIP – 2013

முதல் செஞ்சுரி
முதல் செஞ்சுரி

ஐபிஎல் தொடங்கி பல முறை செஞ்சுரியை மிஸ் செய்த ரெய்னா, ஆறு ஆண்டுகளுக்கு 2013 சீசனில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் சதமடித்த ரெய்னா, அந்தப் போட்டியில் சி.எஸ்.கே சவாலான இலக்கை நிர்ணயிக்க உதவினார். அந்தப் போட்டியில் சி.எஸ்.கே 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேன் ஆஃப் தி மேட்சாக ரெய்னா தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் ஃபைனலில் கலக்கிய 57 ரன்கள் Vs MI -2010

ரெய்னா
ரெய்னா

தனது வாழ்நாளின் டாப் ஃபார்மில் இருந்த ரெய்னா, 2010 ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பைக்கு எதிராக 35 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். குறிப்பாக, கேப்டன் தோனியுடன் கைகோர்த்து நான்காவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்ததன் மூலம், சி.எஸ்.கே 168 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயிக்கும். மும்பை கேப்டன் சச்சின் டெண்டுல்கர் போராடியும் இலக்கை எட்ட முடியாமல் போகவே, முதல்முறையாக ஐபிஎல் தொடரில் சாம்பியனாக கோப்பையை சி.எஸ்.கே வெல்லும். அதே ஆண்டில், ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்து இரண்டு வாரங்களில் தென்னாப்பிரிக்காவுக்கெதிரான டி20 போட்டியில் சதமடித்து, டி20-யில் சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் ரெய்னா படைத்தார்.

73 Vs RCB -2011

ரெய்னா
ரெய்னா

2011 ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றின் முக்கியமான போட்டியில் ஆர்.சி.பி-யை சி.எஸ்.கே எதிர்க்கொண்டது. அந்தப் போட்டியில் ஜாகிர் கான் – வெட்டோரி கூட்டணி மிரட்டவே, சி.எஸ்.கே 7/2 என்று தடுமாறும் நிலைக்குச் செல்லும். அப்போது, பத்ரிநாத், தோனி ஆகியோருடன் கூட்டணி அமைத்து ரெய்னா ரன் குவிக்கவே சி.எஸ்.கே 176 ரன்கள் குவிக்கும். அந்தப் போட்டியில் 73 ரன்கள் அடித்து முக்கியமான பங்காற்றியிருப்பார் ரெய்னா. குறிப்பாகக் கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன் குவித்திருப்பார்.

Also Read – IPL 2022-ல் கலக்கப்போகும் 14 தமிழக வீரர்கள்… யாரெல்லாம் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top