தாடி வளர்ப்பது இன்றைய டிரெண்டிங் ஃபேஷனாக இளைய தலைமுறை ஆண்களிடம் கடைபிடிக்கப்படுகிறது. தாடியில்லாமல் ஆண்களைப் பார்ப்பது அரிது என்றாகும் சூழல் வந்துவிடும் போல. போலீஸ், மிலிட்டரியில் தாடி வைக்க அனுமதி இல்லை என்பதால், அவர்களும் விடுமுறையில் தாடி வைத்து தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்வதுண்டு. அந்த அளவுக்கு தாடி மீதான கிரேஸ் இன்று இருக்கிறது. தாடி வைப்பது ஒருபுறம் ஸ்டைலுக்கு என்றாலும், அதனால் ஏற்படும் நன்மைகளும் இருக்கின்றன. தாடியால் ஏற்படும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட 5 நன்மைகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.
தோல் புற்றுக்கு எதிரான கேடயம்
தாடி வைப்பதால் சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் எனப்படும் அல்ட்ரா வயலட் கதிர்களில் இருந்து 90-95 வரை பாதுகாப்பு கிடைக்கும் என்கிறது ஒரு ஆய்வு. எப்படி தலையை புற ஊதா கதிர் தாக்குதலில் இருந்து தலைமுடி காக்கிறதோ, அதேபோல் முகத்தை புற ஊதா கதிர் தாக்குதலில் இருந்து தாடி பாதுகாக்கிறது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வின்படி, கிளீன் ஷேவில் இருப்பவர்களை விட மூன்றில் ஒரு பங்கு முகத்தில் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் தாடி வைத்திருப்பவர்களுக்குக் குறைவு என்கிறது தரவு.
ஷேவிங் டைம்
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஆய்வின்படி, ஒரு மனிதன் வாழ்நாளில் 3,350 மணி நேரம் ஷேவ் செய்வதற்காக செலவிடுவதாகத் தெரியவந்திருக்கிறது. தாடி வைப்பதால், அத்தனை மணி நேரம் கண்ணாடி முன் நிற்பதையோ அல்லது சலூன் கடைகளில் செலவிடுவதையோ தவிர்க்கலாம்.
மோஸ்ட் அட்ராக்டிவ்
டேஸ்ட் என்று பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைல், சுவை என பிடித்தமான விஷயங்கள் மாறுபடும். ஆனால், பொதுவான டிரெண்ட் என்று பார்த்தால், ஃபுல் ஷேவில் இருக்கும் ஆண்களை விட தாடி வைத்திருக்கும் ஆண்கள்தான் மோஸ்ட் அட்ராக்டிவ் என்கிறது குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வு. வெவ்வேறு ஏஜ் குரூப்பில் இருக்கும் 8,000 பெண்களிடம் நடத்திய ஆய்வின் முடிவில் இதை அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.
உங்கள் மீதான அபிமானத்தை மாற்றலாம்
தாடி வளர்ப்பது உங்களின் அவுட்லுக்கை மாற்றும். உங்கள் தலைமுடியை வித்தியாசமான ஹேர்கலரால் நீங்கள் அலங்கரித்தால், மக்கள் எப்படி உங்களைப் பார்க்கும் விதம் மாறுமோ, அதேபோல், தாடி வளர்ப்பதாலும் அபிமானம் மாறும் என்கிறது ஆய்வு. சைக்காலஜி டுடே இதழின் ஆய்வின்படி, தாடி வைத்திருக்கும் ஆண்கள், மெச்சூரானவர்களாகவும் சமுதாயப் பொறுப்புமிக்கவர்களாகவும் பார்க்கப்படுவார்கள் என்கிறது முடிவு. அதேபோல், 2012ல் நியூரிபப்ளிக் இதழ் ஆய்வில், தாடி வைத்திருப்பவர்கள், இல்லாதவர்களை பல்வேறு எக்ஸ்பிரஷன்கள் கொடுத்து எடுக்கப்பட்ட போட்டோக்கள் பல்வேறு நபர்களிடம் காட்டப்பட்டது. அப்போது தாடி வைத்திருப்பவர்கள் கோபத்தை வெளிப்படுத்திய விதம், கிளீன் ஷேவில் இருக்கும் நபர்களை விட அக்ரசிவாக இருந்ததாக முடிவில் தெரியவந்தது.
கிருமிகள்
2015ல் வெளியான ஒரு ஆய்வு, தாடியில் இருக்கும் கிருமிகள் ஒரு டாய்லெட்டில் இருக்கும் கிருமிகள் அளவுக்கு இருப்பதாகச் சொன்னது. இதனால், இங்கிலாந்தில் தாடி வைத்திருப்பவர்கள், அதை எடுப்பது அப்போது வழக்கமான டிரெண்டானது. ஆனால், இது உண்மையில்லை என்கிறது ஜர்னல் ஆஃப் ஹாஸ்பிடல் இன்ஃபெக்ஷன் ஆய்வு. அந்த இதழ் மருத்துவமனைகளில் பணிபுரியும் தாடி வைத்திருப்பவர்கள் மற்றும் தாடி இல்லாதவர்கள் 408 பேரிடம் நடத்திய ஆய்வில் கிருமிகள் என்ற விஷயத்தில் உண்மையில்லை என்று கண்டறிந்தது.