சாலைகளை அகலப்படுத்தும் போது உரிய வசதிகள் செய்யப்படுவதில்லை. குறிப்பாக, கழிவு நீர் வாய்க்கால்கள், மழைநீர் வடிகால்கள் போன்றவை உரிய முறையில் அமைக்கப்படுவதில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில், 2015-ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தைப் பாடமாகக் கொண்டு மழை நீர் தேங்காமல் உரிய நடவடிக்கையை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், மழை நீர் தேங்கி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்படுவது குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். மேலும், 2015ம் ஆண்டு பெருவெள்ளத்துக்குப் பிறகு கடந்த 6 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அந்த சம்பவத்தில் இருந்து அதிகாரிகள் எதுவும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று கருத்துத் தெரிவித்த நீதிமன்றம், இன்னும் ஒரு வாரத்துக்குள் நிலைமை சீரடையும் என்று நம்புவதாகத் தெரிவித்தது. 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தைப் போல இப்போதும் மழைநீர் தேங்கி மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். மாநகராட்சி என்னதான் செய்துகொண்டிருந்தது என்றும் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.
ஒருவாரத்துக்குள் நிலைமை சீராகவில்லை என்றால் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். சென்னை மக்கள் பாதி நாட்கள் தண்ணீருக்காகவும், மீதி நாட்கள் தண்ணீரில் இறப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். நீர் வழிப்பாதைகளில் எந்தத் தடையும் இருக்க கூடாது என்று உத்தரவிட்டனர். இந்த விவகாரத்தில் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்க முற்பட்டபோது, இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
Also Read – Chennai Rains: மழை, வெள்ளத்தின் போது பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்… செய்யக் கூடாதது!