நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 55-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது அரசியல் பயணத்தின் முக்கியமான புள்ளியாக இருந்தது 2008-ல் ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய போராட்ட மேடை. அந்தக் கூட்டத்தில் சீமான் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த கூட்டத்தில் சீமான் பேசியது என்ன?
திரையுலகினர் போராட்டம் 2008
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் 2008-ம் ஆண்டு அக்டோபர் 19-ல் பேரணி, பொதுக்கூட்டம் நடந்தது. இதில், இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, சீமான், அமீர், சேரன், செல்வமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த போராட்ட மேடையே இயக்குநர் சீமான், அரசியலில் அடியெடுத்து வைக்க அடித்தளம் அமைத்த மேடை என்று சொல்லலாம். திரையுலகினர், பொதுமக்கள் முன்னிலையில் சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக சீமான் ஆற்றிய உணர்வுபூர்வமான உரை டெல்லி வரை எதிரொலித்தது. அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியையையும் இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவரது பேச்சு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சீமான் பேச்சுக்கு அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில், “ராமேஸ்வரத்தில் திரை உலகத்தினரால் நடத்தப்பட்ட பேரணி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் அமீர் போன்றவர்கள் தமிழினத்தை காக்கின்ற மத்திய அரசையும், இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாகவே இருந்து பல்வேறு நடவடிக்கைகளை தங்கள் காலத்தில் செயல்படுத்திய இந்திரா காந்தியையும் ராஜீவ் காந்தியையும், அவரது படுகொலையை கொச்சைப்படுத்தியும், நியாயம் கற்பித்தும் பேசியதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. வன்முறைப் பேச்சை, தடுத்து நிறுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழின உணர்வாளர்களின் கடமையாகும். அப்பாவி தமிழ் மக்களின் வாழ்வுரிமையைப் பெற்றுத் தரும் சக்தி இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு. வெறும் வாய்ச் சவடால் பேசுவோருக்கு அந்த தகுதியும் உரிமையும் கிடையாது. அவர்களால் தமிழர்களை காப்பாற்றவும் முடியாது’’ என்று தெரிவித்திருந்தார். ராமேஸ்வரம் போராட்டத்தில் பேசியதற்காகவும், அதன்பின்னர் ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் பேசியதற்காகவும் சீமான் தேசப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.
சீமான் என்ன பேசினார்?
ராமேஸ்வரம் போரட்ட மேடையில் சீமான், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். போராட்டத்தை நடத்தை ராமேஸ்வரத்தைத் தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து பேசிய சீமான், `தமிழர்களுக்காப் போராட்டம் நடத்த இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். ராஜபக்சே அவர்களே இன்னும் 16 கி.மீ தூரம்தான் உங்கள் அருகே வருவதற்கு… இடையில் பெரிய கடல் இருக்கே என்று நீங்கள் சொல்லலாம். பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல 4 கோடி தமிழ் மக்களும் எழுந்து நடந்தால், கடலும் திடல்தானே… அந்த உணர்வை வெளிக்காட்டத்தான் இந்த இடத்தைத் தேர்வு செய்து போராட்டம் நடத்துகிறோம்’ என்று விளக்கம் கொடுத்தார்.
கர்நாடகா, கேரளா தொடங்கி பல்வேறு இடங்களில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து பேசிய அவர், இலங்கையில் மட்டும்தான் தமிழன் திருப்பி அடிக்கிறான் என்று பேசினார். `தமிழர்கள் தாக்கப்பட்டால் நன்முறை; அதே தமிழன் திருப்பி அடித்தால் வன்முறை என்கிறார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் தமிழராகப் பிறந்தவர் அதிபராக முடியாது என்று சட்டம் இருக்கிறது என்று பேசிய அவர், இந்தியாவில் பிறந்த எந்தவொரு குடிமகனும் பிரதமராக முடியும் என்று சட்டம் இருக்கிறது. இதனால், இலங்கையில் இறையாண்மை என்பதே இல்லை என்று விமர்சித்தார். மேலும், இலங்கையில் ஒரு ஆட்சியின் கீழ் கட்டுப்பட்டு வாழுங்கள் என்று யார் பேசுகிறாரோ அவர்தான் என் இனத்தின் முதல் எதிரி. அந்த மண்ணில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டார்.
`தமிழன் ஒரு நாடு அடைந்தால், இந்த நாட்டில் வாழ்கின்ற ஆறரை கோடி மக்களுக்கும், உலகெங்கிலும் வாழும் 12 கோடி தமிழர்களுக்கும் தனி பிரதிநிதித்துவம் கிடைத்துவிடும் என்று அச்சப்படுகிறார்கள்’ என மத்திய அரசை விமர்சித்தார். சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து வருவதாக மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், ராஜீவ் காந்தி கொலை குறித்தும் அவர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பேச்சுக்குப் பிறகு அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கிய சீமான், இலங்கை இறுதிப் போர் முடிவுக்குப் பிறகு 2009 ஆண்டு மே 18-ம் தேதி மதுரையில் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கினார். தேர்தல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று தொடக்கத்தில் சொன்ன அவர், அடுத்த ஆண்டு அதாவது 2010-ம் ஆண்டு மே 10-ல் நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றினார்.
Also Read – Chennai Rains: மழை, வெள்ளத்தின் போது பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்… செய்யக் கூடாதது!