பேரிடர் காலம்

TNSMART, வெப்சைட், அவசர எண்கள்… பேரிடர் காலத்தில் எப்படி உதவி கோரலாம்?

புயல், வெள்ளம், மழை, கடல் சீற்றங்கள் என பேரிடர் காலங்கள் இப்போதெல்லாம் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன. இந்த காலங்களில் மக்கள் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். பேரிடர் காலங்களில் தகவல் தொடர்புகள் கடுமையாக பாதிப்படைவதால் மக்கள் தங்களது நிலைமைகளை அரசாங்கத்திடம் சரியாக கொண்டு செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இந்த நிலையில், தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் வாட்ஸ் அப் எண் மற்றும் இணையதளம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரிடர்க் காலங்களில், பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்குப் பேரிடர் குறித்தான தகவல்களைக் குறித்த நேரத்தில் தெரியப்படுத்தும் ஒரு அமைப்பு முறையினை உருவாக்குவது மிக முக்கியமானதாகும். இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய தேசிய கடல்சார் தகவல் மையம், மத்திய நீர்வள ஆணையம் போன்ற அமைப்புகளிடமிருந்து பெறப்படும் கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் குறித்தான எச்சரிக்கைத் தகவல்கள் TNSMART செயலி மூலமும், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்களது நிலைமைகளை அரசிடம் தெரிவிக்கவும் புகைப்படங்களை எடுத்து அனுப்பவும் 24 மணி நேரமும் இயங்கும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்த எண்ணுக்கு மக்கள் அனுப்பும் தகவல்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் மக்கள் தங்களது பேரிடர் பாதிப்பு தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், “சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம், தகவல் தொடர்பு மையமாக 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுகின்றது. பேரிடர்க் காலங்களில், வருவாய் நிர்வாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ், தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட இதர முக்கியத் துறைகளின் மூத்த அதிகாரிகளின் துணையோடு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்பட்டு, முன்னெச்சரிக்கைத் தகவல்களை மிகத் துரிதமாக அனுப்புகின்றது” என்றும் தெரிவித்துள்ளார்.

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் வழியாகவும் அரசாங்கத்தை தொடர்புகொண்டு உதவிகளைப் பெற முடியும். இதுமட்டுமில்லாமல் பேரிடர் தொடர்பான தகவல்களை உடனடியாகப் பெற TNSMART என்ற செயலியின் வழியாக வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தாமினி செயலி குறித்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அமைச்சர், “தாமினி செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்களுக்கு, தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 40 கிலோ மீட்டர் சுற்றளவில் இடி மற்றும் மின்னலின் தாக்கம் குறித்து 45 நிமிடங்களுக்கு முன்னர் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இடி மற்றும் மின்னலின் தாக்கம் குறித்துப் பொதுமக்களுக்குத் தகவல் கிடைக்கப் பெறுவதால், இடி மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறைய வாய்ப்புள்ளது” என்றார். 1077 என்ற எண்ணும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி செய்ய உள்ளது. இவற்றைத் தவிர பேரிடர் காலங்களில் பாதிப்படையும் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கென தனித்தனியாக எண்களும் பேரிடர் காலங்களுக்கு முன்பாக வழங்கப்படும்.

Also Read : ஒரு பழத்தின் விலை ரூ.500-1,000… மத்தியப்பிரதேசத்தின் `நூர்ஜஹான்’ மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top