விஜயகாந்த் தேமுதிக

#Vijayakanth – 25 ஆண்டுகால ரசிகர் மன்றத்தின் நீட்சி… தேமுதிக-வின் கதை!

அரசியல் கட்சி தொடங்கணும்னு விஜயகாந்த் முடிவெடுக்குறதுக்கு முன்னாடியே ரசிகர் மன்றங்கள் மூலமா மக்களுக்குத் தொடர்ச்சியா உதவிகள் பண்ணிட்டு இருந்தார் விஜயகாந்த். தையல் மிஷின் தொடங்கி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவினு பல தரப்பட்ட மக்களும் இதனால் பயன்பெற்றனர். தமிழ்நாட்டோட பல கிராமங்கள்லயும் விஜயகாந்த் ரசிகர் மன்றங்கள் கிளை பரப்பி ஆலமரமாய் வளரத் தொடங்குச்சு. ஒவ்வொரு ஊர்லயும் அவரோட உதவியைப் பெற்ற சில பேராவது இருந்தாங்கங்குற நிலைமை வந்துச்சு. இன்னும் சொல்லப்போனா சென்னை தி.நகர்ல இருந்த அவரோட ஆபிஸ்ல மதிய உணவு சாப்பிட்டவர்களாவது இருந்தாங்கனுதான் சொல்லணும்.

விஜயகாந்த் கட்சி தொடங்குறதுக்கு முன்னாடியே 2000-ம் ஆண்டு பிப்ரவரியில தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார். புரட்சி தீபத்தோட மூன்று கலர்கள் கொண்ட அந்தக் கொடியை மோதிரமாக அணிந்துகொண்டதோடு, தன்னோட படங்கள்லயும் தொடர்ச்சியா பயன்படுத்த ஆரம்பிச்சார்.

ரசிகர் மன்றத்துக்கான கொடி அறிமுகத்துப் பிறகு விஜயகாந்த் ரசிகர்கள் செய்த செயல் ரொம்பவே முக்கியமானது. தேசியக் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் இல்லாத கிராமங்களிலும் கூட திராவிடக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக கொடியை ஏற்றிக் காட்டினார்கள் விஜயகாந்த் ரசிகர்கள். ரசிகர்கள் கொடுத்த இப்படியான நம்பிக்கைதான் விஜயகாந்த் நேரடியான அரசியலுக்கு வருவதற்கு முக்கியமான காரணமாகவும் அமைந்தது. 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2005-ம் ஆண்டு செப்டம்பர் 14-ல் மதுரையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தி தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை விஜயகாந்த் தொடங்குனாரு. தேமுதிக வரலாற்றில் 2011 சட்டமன்றத் தேர்தல் ரொம்பவே முக்கியமானது. கட்சி தொடங்கும்போதே கடவுளுடனும் மக்களுடனும்தான் கூட்டணி என்றுதான் விஜயகாந்த அறிவித்திருந்தார். தேமுதிக முதன்முதலில் சந்தித்த 2006 சட்டமன்றத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே ஜெயித்திருந்தாலும், அந்தத் தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 27 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள். கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்தில் நடந்த தேர்தலில் அந்தக் கட்சி பெற்றிருந்த வாக்கு சதவிகிதம் 8.4 என்பதைத் தமிழக அரசியல் கட்சிகள் மிரட்சியுடன் பார்த்தன. தனியொரு எம்.எல்.ஏவாக தேமுதிகவுக்காக சட்டமன்றத்தில் களமாடினார் விஜயகாந்த்.

2009 மக்களவைத் தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் தனித்துக் களம்கண்டது தேமுதிக. அந்தத் தேர்தலில் எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லையென்றாலும் 31 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்று, தனது வாக்கு சதவிகிதத்தை 10.3%-ஆகப் பதிவு செய்திருந்தது தேமுதிக. எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான கட்சி விஜயகாந்தோடது – திமுக – அதிமுகவுக்கு சரியான மாற்று இவர்தான்னு மக்கள் நம்ப ஆரம்பிச்சதோட விளைவுதான் தேமுதிகவின் இந்த எழுச்சி. இந்தப் பின்னணியில்தான் 2011 தேர்தலில் தேமுதிகவின் இருப்பை தங்கள் கூட்டணியில் உறுதி செய்துகொள்ள திமுக – அதிமுக என இரண்டு கட்சிகளுமே பெரும் பிரயத்தனம் செய்தன. இரு கட்சிகளின் தரப்பிலுமே தூதுவர்கள் பறந்தார்கள். `தேமுதிக எந்தப் பக்கம்பா?’னு அரசியல் களமே தகித்தது. இரண்டு கட்சிகளுடனும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியது தேமுதிக. விஜயகாந்த் வீட்டு வாசலில் கட்டிலோடு கலைஞர் இருப்பது போல் அப்போ வெளியான ஒரு கார்ட்டூன் ரொம்பவே ஃபேமஸ்.

இறுதியில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2011 தேர்தலை சந்தித்தது தேமுதிக. அந்தத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட 41 இடங்களில் 29-ஐ வென்றது தேமுதிக. அதேநேரம் வாக்கு சதவிகிதம் 7.9% ஆக சரிந்தது. இந்தத் தேர்தல் மற்றொரு வகையில் தேமுதிகவின் சரிவுக்குத் தொடக்கமாக அமைந்தது என்றே சொல்லலாம். எந்தக் கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார்னு மக்கள் அவர்மீது நம்பிக்கை வைத்தார்களோ… அந்த கட்சிகளுடனே கூட்டணி என்கிற தேமுதிகவின் அரசியல் ஸ்டண்டை மக்கள் ரசிக்கவில்லை. கூட்டணியில் இருந்துகொண்டே ஆளும் கட்சியை விமர்சித்த விவகாரத்தில் அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்தது. சட்டமன்றத்திலேயே ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசி பரபரப்பைப் பற்றவைத்தார் விஜயகாந்த். இந்த சம்பவத்துக்குப் பிறகு தேமுதிக எம்.எல்.ஏக்கள் பலர் அதிமுகவுக்குப் போன சம்பவமும் நிகழ்ந்தது. தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தேமுதிகவுக்கு பிரதான எதிர்க்கட்சியாக ஆளும்கட்சிக்கு அடுத்தபடியான இரண்டாவது பெரிய கட்சி என்கிற அந்தஸ்து கிடைத்தது. ஆனால், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் தேமுதிகவுக்கு சரியானபடியாக அமையவில்லை.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி, பாமக, மதிமுகவுடன் இணைந்து 14 தொகுதிகளில் போட்டியிட்டபோதிலும் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. வாக்கு சதவிகிதம் இந்தத் தேர்தலில் 5.1%-ஆக சரிந்தது. 2016 சட்டமன்றத் தேர்தல் தேமுதிகவுக்கு ஆசிட் டெஸ்ட்னுதான் சொல்லணும். மக்கள் நலக் கூட்டணி என்கிற பெயரில் மூன்றாவது அணி சார்பில் 104 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியபோதும், ஒரு தொகுதியில் கூட வெற்றியைப் பதிவு செய்ய முடியவில்லை. வாக்கு சதவிகிதமும் 2.41%-ஆக அதலபதாளத்துக்குச் சென்றது. அதிலும் குறிப்பாக உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்தால் மூன்றாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. 2019, 2021 தேர்தல் முடிவுகளோடு சேர்ந்து கட்சியின் செல்வாக்கும் வாக்கு சதவிகிதமும் சரிந்தது. விஜயகாந்துக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவும் தேமுதிகவின் வீழ்ச்சிக்கு வலு சேர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். ரசிகர் மன்றமாக இருக்கும்போதே அன்பு விஜயகாந்த் மூலம் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த விஜயகாந்த், பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், தொண்டர்கள் மத்தியில் சுணக்கம் ஏற்பட்டதோடு பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச செல்வாக்குக்குமே அடி விழுந்தது.  

Also Read – விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய கதை!

1990-ல் விஜயகாந்த் – பிரேமலதா திருமணம் நடந்திருந்தாலும், 2004-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில்தான் பிரேமலதா முதன்முதலில் மைக் பிடித்து பேசத் தொடங்கினார். அதன்பிறகு, அரசியலில் ஆர்வம் கொண்டு தீவிரமாகப் பணியாற்றினார்.

அடுத்தடுத்த தேர்தல்கள்ல தேமுதிக தமிழ்நாட்டு அரசியல்ல எந்த இடத்துல இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. 

1 thought on “#Vijayakanth – 25 ஆண்டுகால ரசிகர் மன்றத்தின் நீட்சி… தேமுதிக-வின் கதை!”

  1. My brother suggested I might like this website. He was totally right. This post actually made my day. You cann’t imagine just how much time I had spent for this information! Thanks!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top