TN Assembly

எதிர்க்கட்சி – சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி வித்தியாசம்.. காங்கிரஸ் கட்சியில் ச.ம தலைவர் பதவி யாருக்கு?

எதிர்க்கட்சித் தலைவர் – சட்டமன்ற கட்சித் தலைவர் பதவிகளுக்கிடையில் என்ன வித்தியாசம்?

காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி யாருக்கு?

காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பெற்ற எம்.எல்.ஏ-க்களைவிட இரண்டு மடங்கு எம்.எல்.ஏ-க்களை இந்த முறை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. அதனால், தமிழ்நாடு சட்டமன்றத்தில், இந்தமுறை காங்கிரஸ் கட்சியும், முக்கியத்துவம் வாய்ந்த எதிர்காட்சியாக அமர்கிறது.

எதிர்க்கட்சி – சட்டமன்றக் கட்சி – குழுத் தலைவர்கள் யார்?

பேரவை விதியின்படி, பெரும்பான்மை அதாவது 117 சீட்டுக்களுக்கு மேல் பெறுகிற கட்சி (தனிப்பெரும்பான்மையாக அல்லது கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்று) ஆளும் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்று ஆட்சி அமைக்கும். அதற்கடுத்தபடியாக, சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 234 பேரில் 10-ல் ஒரு பங்கு எம்.எல்.ஏ அல்லது அதற்கு மேல் வைத்திருக்கிற கட்சி சட்டமன்ற எதிர்கட்சி அந்தஸ்தைப் பெறும்.

அந்தவகையில், 66 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள அ.தி.மு.க சட்டமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அதுபோல, 8 எம்.எல்.ஏ-க்களுக்கு அதிகமான எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கிற கட்சிக்கு சட்டமன்ற கட்சித்தலைவர் பதவி கிடைக்கும். அந்தவகையில், 18 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கிற காங்கிரஸ் கட்சிக்கு இந்தமுறை சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி கிடைக்க உள்ளது. 8 எம்.எல்.ஏ-க்களுக்கு குறைவாகப் பெற்றுள்ள கட்சிகளுக்கு சட்டமன்றக் குழுத்தலைவர் பதவி ஒதுக்கப்படும்.

Congress Party

தேர்வுக் கூட்டம்…

காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்.எல்.ஏ-க்கள் உள்ளதால், சட்டமன்றக் கட்சித் தலைவரை, அந்தக் கட்சி தேர்ந்தெடுத்து, அதை சட்டமன்ற செயலாளரிடம் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். அதற்கான தேர்வுக் கூட்டம் இரண்டு முறை, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. ஆனால், இரண்டு முறையும், அதில் தீர்வு எட்டப்படவில்லை. இத்தனைக்கும், இரண்டாவது முறை நடைபெற்ற கூட்டத்தில் நிச்சயம் ஒரு முடிவை எடுத்தவிட வேண்டும் என காங்கிரஸ் தலைமை விரும்பியது.

அதற்காக, கடந்த 17-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்த, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புதுச்சேரி எம்.பி வைத்தியலிங்கம், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மேற்பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதோடு காங்கிரஸ் கட்சி வரலாற்றில் இல்லாத அளவுக்கு, அதன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகிய அனைவரும் கலந்து கொண்ட கூட்டம் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது.

அதுபோல், சத்தியமூர்த்தி பவன் பக்கம் எப்போதும் தலைகாட்டாத ப.சிதம்பரமும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இத்தனை முஸ்தீபுகளோடு நடக்கும் கூட்டத்தில் கண்டிப்பாக ஒரு முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம்போலவே அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

சிக்கலுக்கு காரணம் என்ன?

சட்டமன்ற கட்சித் தலைவர் பதவிக்கு, ஒருமுறைக்கு மேல் எம்.எல்.ஏ-க்களாக இருந்தவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்தவகையில் தற்போதுள்ள 18 எம்.எல்.ஏ-க்களில் 11 பேர் புதிய முகங்கள். அதனால், அவர்களை கழித்துவிட்டு, மீதமுள்ள 7 பேர் அந்தப் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இரண்டு முறை எம்.எல்.ஏ அந்தஸ்தைப் பெற்றுள்ள செல்வப் பெருந்தகை, மூன்று முறை எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள விஜய தாரணி, 4 முறை எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோர் அந்த ரேஸில் முன்னிலையில் உள்ளனர். இவர்களில், செல்வப்பெருந்தகை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்தவர். அதுபோல், ஏ.எம்.முனிரத்தினம், காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து மூப்பனார் ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குச் சென்றவர். அதன்பிறகு, ஜி.கே.வாசனுடனும் அந்தக் கட்சியில் பணியாற்றிவர். பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்.

Vijayadharani

விஜயதாரணி காங்கிரஸ் கட்சியிலேயே பணியாற்றினாலும், அவருக்கு கட்சிக்குள் நல்ல பெயர் இல்லை. கடந்தமுறை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் என்ற பேச்சு உள்ளது. அதுபோல், தனக்கு எம்.பி சீட் கிடைக்காத காரணத்தால், கன்னியாகுமரி தொகுதியில் எம்.பி- பதவிக்குப் போட்டியிட்ட விஜய் வசந்துக்கு அவர் உரிய ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. அதுவும் விஜயதாரணி மீது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. அதனால், இந்தக் குற்றச்சாட்டுக்களில் சிக்காத, இதுபோன்ற குறை இல்லாத பிரின்ஸ்-க்கு இந்த முறை சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், இவர்கள் அனைவரும் டெல்லி தலைமையில் ஒவ்வொருவருக்கும், நெருக்கமாக உள்ளனர். அதனால், இங்கிருப்பவர்களால் உறுதியான முடிவை எட்டமுடியவில்லை. அதையடுத்து, இந்தத் தகவல் டெல்லித் தலைமைக்குச் சொல்லப்பட்டது, அனைவரைப் பற்றிய விரிவான அறிக்கையைக் கொடுங்கள். தமிழ்நாடு சட்டமன்ற கட்சித் தலைவர் யார் என்பதை நாங்களே முடிவு செய்து கொள்கிறோம் என டெல்லியில் இருந்து உத்தரவு வந்ததும், இப்போது அறிக்கை டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இனி டெல்லி யாரை முடிவு செய்கிறதோ… அவர்தான் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர்…

சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியால் பலன் என்ன?

சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி பெறுபவர், எதிர்கட்சியினருக்கான இடத்தில் முன் வரிசையில் அமர முடியும். மற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு முன்வரிசையில் இடம் கிடைக்காது. அவர்கள் ஒதுக்கப்படும் இருக்கையில் அமர வேண்டும். அதுபோல, மற்ற எம்.எல்.ஏ-க்களைப் பொறுத்தவரை சபாநாயகர் வாய்ப்புக் கொடுத்தால்தான் பேச முடியும். ஆனால், சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி பெறுபவர் எந்த நிலையிலும் தன் கருத்தைச் சொல்லலாம். அவர் கருத்துக்கூறு எழுந்தால், உடனே சபாநாயகர் அதற்கு அனுமதி கொடுப்பார். மேலும், சட்டப்பேரவையில் இயற்றப்படும் தீர்மானங்கள், சட்டங்கள், என அனைத்திலும் அவரிடம் கருத்துக் கேட்கப்படும். அதுபோல், காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடத்தால் நடத்தப்படும் முக்கியமான கூட்டங்களில், தமிழ்நாடு சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற தகுதியோடு பங்கேற்க முடியும். கட்சித் தலைமைக்கும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் இடையிலான பாலமாக சட்டமன்றக் கட்சித் தலைவர் இருப்பார். அந்தவகையில் அது முக்கியத்துவமான பதவியாகக் கருதப்படுகிறது.

Also Read – சாங்கியா’வா… கண்ணுக்குத் தெரியாத ‘விஷமி’யா? – ம.நீ.ம சரிவுக்குக் காரணம் என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top