`மைக் டைசன்’ என்ற பெயரைக் கேட்டாலே எதிரில் நிற்கும் குத்துச்சண்டை வீரர்களின் குலை நடுங்கும். `ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்’ – டயலாக் யாருக்கு பொருந்துதோ இல்லையோ மைக் டைசனுக்கு பக்காவா பொருந்தும். இதுவரை குத்துச்சண்டை வீரர்களின் பஞ்சில் மைக் டைசனின் குத்துதான் மிகவும் பலம் வாய்ந்தது என கூறுகின்றனர். தன்னுடைய இருபது வயதிலேயே ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்று உலகளவில் தன்னை திரும்பி பார்க்க வைத்தார். இவர் செய்த நாக் அவுட்டுகள் அவரது ரசிகர்களின் கண்களைவிட்டு விரைவில் அகலாது எனலாம். குத்துச்சண்டையில் அவர் எந்த அளவுக்கு ஃபேமஸோ அதே அளவு சர்ச்சைக்கும் பெயர் போனவர், மைக் டைசன். அவருடைய பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிஞ்சுக்கலாம்!
* மைக் டைசனின் ஃபேன்ஸ் அறிவார்கள், அவருக்கு புறாக்களை மிகவும் பிடிக்கும் என்பதை. மைக் டைசன் தன்னுடைய சிறிய வயதில் இருந்தே புறாக்களின் மீது காதல் கொண்டிருந்தார். அவர் குழந்தையாக இருக்கும்போது ஒதுக்கிவைக்கப்பட்ட சமயங்களில் அவர் புறாக்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிட்டதாகவும் கூறப்படுகிறது. பறவைகள் உடனான அவரது உறவில் ஒருவித அழகு இருப்பதாக கூறுகின்றனர். சின்ன வயசுல பசங்க சிலர் சேர்ந்து மைக் டைசனை கிண்டல் பண்னியிருக்காங்க. அப்படியான ஒரு சம்பவத்தில் மைக் டைசனின் புறா ஒன்று இறந்துவிட்டது. இதற்கு பிறகுதான் முதன்முறையாக மைக் டைசன் சண்டை போட்டாராம். இந்த சண்டையில் புறாவைக் கொன்றவரை மைக் டைசன் வெற்றி பெற்றுள்ளார்.
* சர்ச்சைகளையும் சிறை வாழ்க்கையையும் ஒதுக்கிவிட்டு மைக் டைசனின் வாழ்க்கையை முழுமையாக கூறிவிட முடியாது. மைக் டைசன் தன்னுடைய சிறிய வயதில் சக வயதினர்களால் அதிகமான புறக்கணிப்பிற்கும் கிண்டலுக்கும் ஆளானார். இதனை சமாளிக்க அவர் வீதிகளில் சண்டைகள் போட்டுள்ளார். இதனால், பல குற்ற சம்பவங்களில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார். அவர் தன்னுடைய 13 வயதை எட்டும் வரை சுமார் 38 முறை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
* தன்னுடைய இளம் வயதுகளில் மைக் டைசன் சிறையில் இருந்தபோது குத்துச்சண்டை ஜாம்பவான் ஆன முகம்மது அலி டைசன் இருக்கும் சிறையை பார்வையிட்டாராம். அதுமட்டுமல்ல அவருக்கு குத்துச்சண்டை போட்டிக்குள் வர சிறந்த வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.
* உலக குத்துச்சண்டை அசோசியேசன் பட்டத்திற்காக 1997-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இவான்டர் ஹோலிபீல்டுடன் மோதிய மைக் டைசன் போட்டியின் போது கோபத்தில் இவான்டரின் காதை கடித்து துப்பினார். இதனைத் தொடர்ந்து குத்துச்சண்டை போட்டிகளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் மைக்.
* மீடியாக்களின் வெளிச்சத்தில் இருந்து சிலகாலம் விலகியிருந்த மைக் டைசன் ஒருமுறை, “நான் கெட்டவன். பல்வேறு தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். நான் மன்னிக்கப்பட வேண்டுகிறேன். எனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன். நிதானமாக வாழ விரும்புகிறேன். நான் சாக விரும்பவில்லை” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
* பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் மூன்று வங்காளப் புலிகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்தார். அந்த புலிகளுக்கு போரிஸ், ஸ்டோர்ம் மற்றும் கென்யா என்று பெயர் வைத்திருந்தார். இதில் கென்யா என்ற புலி மைக் டைசனின் மனதுக்கு மிகவும் நெருக்கமானது எனவும் ஒரே கட்டிலில் புலியுடன் மைக் டைசன் தூங்கியதாகவும் கூறப்படுகிறது. கென்யா புலியைப் பற்றி மைக் டைசன் பேட்டி ஒன்றில் பேசும்போது, “ஒரு காலத்தில் எனக்கு செல்லப் புலி ஒன்று இருந்தது. அவள் பெயர் கென்யா. அவள் சுமார் 550 பவுண்டுகள் எடை உடையவள். எனக்கு அவளிடம் மிகுந்த பாசம் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
* பாலியன் வன்முறை தொடர்பான வழக்கில் மைக் டைசன் சிறையில் இருந்தபோது இஸ்லாம் மதத்தின் சூஃபி பிரிவுக்கு மாறினார். அப்போது அவர் தன்னுடைய பெயரை மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக்கொண்டார். மைக் டைசன் தொடர்ந்து சூஃபி தத்துவத்தை கடைபிடித்தாரா என்பது தெரியாத விஷயமாகவே இருந்து வருகிறது. ஏனெனில், அவர் தன்னுடைய வாழ்வில் பல முயற்சிகளை மேற்கொண்டு பின்னர் மனதில் மாற்றம் ஏற்பட்டதும் மாறிவிடக்கூடியவர்.
Also Read : மைக் டைசன் புலி வாங்கிய கதை தெரியுமா?!