Harpreet Brar

ஹர்ப்ரீத்தின் 7 பால் மேஜிக்… மூன்றில் இரண்டைத் தோற்ற ஆர்.சி.பி! #PBKSvRCB

முதல் 4 போட்டிகளை வெற்றியுடன் தொடங்கிய ஆர்.சி.பி, கடைசியாக விளையாடிய 3 மேட்சுகளில் இரண்டில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் கே.எல்.ராகுலின் பஞ்சாப் கிங்ஸ் அணி, விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Gayle - KL Rahul

ஐபிஎல் 2021 சீசனில் முதலில் விளையாடிய 6 போட்டிகளில் ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்திருந்த ஆர்.சி.பி, இந்தப் போட்டியில் டாஸ் வென்று சேஸ் செய்ய முடிவு செய்தது. பஞ்சாப் கிங்ஸில் மயங்க் அகர்வாலுக்குப் பதிலாகக் களம்கண்ட 20 வயது ஓபனர் பிரப்சிம்ரன் சிங், பெரிதாக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐந்து ஓவர்கள் முடிவில் 29/1 என்றிருந்த பஞ்சாபின் ஸ்கோர், பவர்பிளே முடியும்போது 49/1 என்று எகிறியது. ஜேமிசன் வீசிய ஆறாவது ஓவரில் 5 பவுண்டரிகள் விளாசி, தான் இன்னும் யுனிவர்சல் பாஸ்தான் என்று மெசேஜ் தட்டினார் கெய்ல். அவரது அதிரடியால் பஞ்சாப் ரன் ரேட் சீராக உயர்ந்தது. மறுமுனையில் கேப்டன் கே.எல்.ராகுல், அவருக்கு கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தார்.

11-வது ஓவரில் நான்காவது பந்தில் கிறிஸ் கெய்லே ஆட்டமிழந்தார். அவர் 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது, 99/1 என்றிருந்த பஞ்சாப்பின் ஸ்கோர், 14.4 ஓவர்களில் 118/5 என்று தலைகீழாக மாறியது. பஞ்சாப்பில் மிடில் ஆர்டர் சொதப்பல் இந்த மேட்சிலும் தொடர்ந்தது. ஆறாவது விக்கெட்டுக்கு கேப்டன் கே.எல்.ராகுலோடு கைகோர்த்த ஹர்ப்ரீத் ப்ரார், 61 ரன்கள் குவிக்கவே, பஞ்சாப் 179/5 என்று சவாலான ஸ்கோரை எட்டியது. கே.எல்.ராகுல், 57 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். ஹர்ப்ரீத் 17 பந்துகளில் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

180 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய ஆர்.சி.பிக்கு பஞ்சாப் பௌலர்கள் தொடக்கம் முதலே நெருக்கடி கொடுத்தனர். மெரிடித் வீசிய மூன்றாவது ஓவரில் தேவ்தத் படிக்கல் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். அடுத்து விராட் கோலியுடன் கைகோர்த்த ரஜாத் படிடார் ஸ்லோ இன்னிங்ஸ் ஆடினார். பஞ்சாப் பௌலர்களின் நெருக்கடியான பந்துவீச்சால், பவர்பிளேவில் ஆர்.சி.பியால் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 10 ஓவர்கள் முடிவில் 62 ரன்கள் எடுத்திருந்தது ஆர்.சி.பி. ஹர்ப்ரீத் ப்ரார் வீசிய 11வது ஓவர், மேட்சை பஞ்சாப் பக்கம் மாற்றியது. முதல் பந்தில் விராட்கோலியையும் அடுத்த பந்தில் மேக்ஸ்வெல்லையும் பெவிலியனுக்கு அனுப்பினார் ஹர்ப்ரீத். தனது நான்காவது ஐபிஎல் மேட்சில் விளையாடிய ஹர்ப்ரீத்தின் முதல் விக்கெட் விராட் கோலி. `முதல் விக்கெட் நினைவு என்றென்றும் நிலைத்திருக்கும்’ என்று போஸ்ட் மேட்ச் பிரசன்டேஷனில் குறிப்பிட்டார் ஹர்ப்ரீத்.

அவர் வீசிய 11வது ஓவரின் ஹாட்ரிக் பாலைத் தடுத்தாடிய டிவிலியர்ஸ், 13வது ஓவரின் முதல் பந்தில் போல்டாகி வெளியேறினார். ஆர்.சி.பியின் முக்கிய மூன்று பேட்ஸ்மேன்களான விராட் கோலி, மேக்ஸ்வெல், டிவிலியர்ஸ் என மூன்று விக்கெட்டுகளை ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 7 பந்துகளில் வீழ்த்தி அசத்தினார் ஹர்ப்ரீத் ப்ரார். இந்த வீழ்ச்சியிலிருந்து ஆர்.சி.பி-யால் கடைசி வரை மீளவே முடியவில்லை.

டெத் ஓவர்களில் அதிரடி காட்டிய ஹர்ஷல் படேல் பஞ்சாப் அணியின் வின்னிங் மார்ஜினைக் குறைத்தார். 20 ஓவர்களில் ஆர்.சி.பி 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. ஹர்ஷல் படேல் 13 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் 4 போட்டிகளை வெற்றியுடன் தொடங்கிய ஆர்.சி.பி, கடைசியாக விளையாடிய 3 மேட்சுகளில் இரண்டில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

Photo Credits – BCCI

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top