கலிஃபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ பேவில் கைவிடப்பட்ட எரிவாயு நிலையம் ஒன்றின் வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு பூவைக் காணக் கூடினர். இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலும் ஆனது. அப்படி அந்தப் பூவில் என்னதான் ஸ்பெஷல்? – இதைப் பற்றி தான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப் போறோம். வாங்க!
கார்ப்ஸ் ஃப்ளவர் – சடலப் பூ
இந்தோனேஷியாவின் சுமத்ரா மழைக்காடுகளுக்கு சொந்தமான பூதான் இந்த `சடலப்பூ.’ இந்தப் பூவைக் காணதான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சான் ஃபிரான்சிஸ்கோ பேவில் கூடினர். சாலமன் லேவா என்ற நர்ஸரி வைத்திருக்கும் நபர்தான் இந்த அரிய வகை பூவைக் காட்சிப்படுத்தினார். அரிய வகைச் செடிகளை அதிகமாக வளர்க்கும் இவர் சமூக வலைதளங்களில் முதலில் இந்தப் பூவைப் பற்றி பதிவிட்டுள்ளார். அதிகமான நபர்கள் பார்க்க விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து பொது வெளியில் காட்சிப்படுத்தினார்.
என்னுடைய கிரீன் ஹவுஸூக்குச் சென்று எனது நண்பரின் உதவியுடன் இந்தப் பூவை இங்கு வைத்தேன். கடைசியாக அவர்கள் இதனை சான் பிரான்சிஸ்கோவில் பார்த்ததாகத் தெரிவித்தனர். அவர்கள் இந்தப் பூவை அருகில் சென்று காண நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது” என்று பூவின் அருகே நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுத்தபடி லேவா தெரிவித்தார். மக்களும் லேவாவுக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர். “அவர் இதனை காட்சிப்படுத்தவில்லை என்றால் நாங்கள் ஒருபோதும் இதனை பார்த்திருக்க மாட்டோம்” என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
சடலப் பூவின் அறிவியல் பெயர், `அமோர்போபாலஸ் டைட்டனம்’ என்பதாகும். இதனை ஜெயின்ட் மிஷேபன் பாலஸ் என்றும் அழைப்பர். அதன் மிகப்பெரிய தோற்றம் காரணமாக இந்தப் பெயரை வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு தசாப்த காலத்தில் இந்தப் பூவானது சுமார் 10 அடிக்கும் அதிகமான உயரம் வரை வளரக்கூடியது. ஸ்கர்ட் போன்ற பூவின் பகுதி ஸ்பேத் என்றும் ராட் போன்ற பகுதி ஸ்பேடிக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பூவின் மற்றொரு சதைப்பற்று மிக்க அடிப்பகுதி `கார்ம்’ என்று அழைக்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய கிளைகள் இல்லாத செடியாக இது அறியப்படுகிறது. மூன்று முதல் நான்கு மாதங்கள் இதனுடைய ஆயுட்காலம் இருக்கிறது. அதன் தோற்றத்தைத் தவிர இந்தப் பூவானது அதன் துர்நாற்றத்துக்கும் பெயர் பெற்றது. அழுகிய இறைச்சி அல்லது அழுகிய சடலத்தின் துர்நாற்றத்துக்கு ஒப்பானதாக அதன் வாசனை உள்ளது. இந்த செடி பூ பூக்கும்போது மட்டுமே தனித்துவமான அந்த நாற்றத்தை வெளியிடுகிறது. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது மிகவும் நீண்ட காலத்துக்கு ஒருமுறைதான் பூக்கிறது.
சடலப் பூவின் துர்நாற்றத்தின் பின்னணி என்ன?
காடுகளில் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளையும் தேனீக்களையும் ஈர்க்கும் பொருட்டு இந்த மலர் துர்நாற்றத்தை வெளியிடுகிறது. பயோ சயின்ஸ், பயோ டெக்னாலஜி மற்றும் பயோ கெமிஸ்ட்ரி இதழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ஆய்வின்படி, பூவுக்கு அதன் தனித்துவமான துர்நாற்றத்தைக் கொடுப்பது அதில் சுரக்கும் டைமிதைல் ட்ரைசல்ஃபைட் ஆகும். பூண்டு மற்றும் சீஸ் போன்றவற்றில் துர்நாற்றம் வீச சுரக்கும் டைமைதில் டைசல்ஃபைட் மற்றும் மீத்தைல் தியோலசெட்டேட் போன்ற ரசாயனங்களாலும் இந்தப் பூவில் துர்நாற்றம் ஏற்படுகிறது. அதேபோல, ஐசோவெலரிக் என்ற அமிலமும் பூவில் வியர்வை வாசனையை ஏற்படுத்துகிறது.
சடலப் பூ ஏன் அரியவகையைச் சேர்ந்தது?
கடந்த பல ஆண்டுகளாக இந்தோனியாவைச் சேர்ந்த சடலப் பூ உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பயிரிடப்பட்டிருந்தாலும் காடுகள் அழிப்பு காரணமாக இந்த பூவின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் கடந்த 2018-ம் ஆண்டு ஆபத்தான தாவரமாக இதனைப் பட்டியலிட்டது. இந்தப் பூவை இயற்கையான இடங்களுக்கு வெளியே வளர்ப்பது எளிதான விஷயம் அல்ல. இது செழித்து வளர குறிப்பிட்ட அளவு வெப்பமும் குறிப்பிட்ட அளவு ஈரப்பதமும் தேவைப்படுகிறது.
குறைவான விதைகளையே இவை விளைவிக்கிறது. எனவே, இதனை பராமரிப்பதும் வளர்ப்பதும் மிகவும் கடினமான விஷயமாக இருந்து வருகிறது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, சிகாகோ தாவரவியல் பூங்கா இந்த பூவின் இனப்பெருக்கத்தை பெருக்க தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அழிந்து வரும் விலங்குகளை பாதுகாக்க உயிரியல் பூங்காக்கள் கடைபிடிக்கும் அதே முயற்சிகளை இந்த தாவரவியல் பூங்கா பின்பற்றி வருகிறது.
Also Read : ப்ளாக் ஃபங்கஸைத் தொடர்ந்து பரவும் வொயிட் ஃபங்கஸ்! – மிகவும் ஆபத்தானதா?