sunny leone

Trolls-ஐ விடுங்க… சன்னி லியோன் மறுபக்கம் உங்களுக்குத் தெரியுமா?!

`சன்னி லியோன்’ – இந்தப் பெயரைப் பற்றிய அறிமுகம் பெரும்பான்மையானவர்களுக்கு தேவை இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் அதிகளவில் அறியப்பட்ட இவர் கூகுளில் அதிகம் தேடப்படும் பாலிவுட் நடிகைகளில் ஒருவராக உள்ளார். பலவித ட்ரோல்களுக்கு ஆளாகி இருந்தாலும் ஆஃப் ஸ்கிரீனில் அவர் செய்யும் செயல்கள் அவர்மீது நிச்சயம் மரியாதையை ஏற்படுத்தும். சமூக சேவகராக இருப்பதன் மூலம் அனைவருக்கும் உத்வேகத்தை தரும் ஒருவராகவும் இருந்து வருகிறார். மே 13-ம் தேதி அதாவது நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கும் சன்னி லியோனின் மறுபக்கத்தையும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்… வாங்க!

சன்னி லியோன்
Sunny Leone

இந்தியாவில் பெண்கள் இன்றும் தனது சொந்த வாழ்க்கைக்கான தேர்வுகளை முடிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால், அவர் தன்னுடைய சிறு வயதிலேயே சொந்த வாழ்க்கைக்கான முடிவுகளை தைரியமாக எடுத்துள்ளார். நிதி ரீதியாக சுதந்திரமாக செயல்படத் தொடங்கினார். அடல்ட் படங்களில் நடிக்க விரும்பினார். தன்னுடைய வாழ்க்கையை தனது கைகளில் வைத்துக்கொண்டு அதை வழிநடத்துகிறார். அவருடைய துணிச்சலான முடிவுகளை பலரும் விமர்சனம் செய்தாலும் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. தன்னைப் பற்றி எப்போதுமே பெருமிதம் கொண்ட ஒருவராகவே இருந்து வருகிறார்.

Also Read : சோனு சூட் – நிஜ ஹீரோவா.. மக்களுக்கு எப்படி உதவி செய்கிறார் அவர்?

பாலிவுட் நடிகர்களில் ஷாருக்கான், கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் இசைத்துறையில் ஏ.ஆர்.ரஹ்மான என அவரவர் துறைகளில் வெற்றிப் பெற்றவர்களைப் போல சன்னி லியோன் தனது துறையில் வெற்றி பெற்ற ஒருவராகவே இருந்து வருகிறார். ஆனால், அவரை விமர்சிக்கும் நம்மில் எத்தனை பேர் நம்முடைய துறையில் வெற்றி பெற்ற ஒருவராக இருந்து வருகிறோம் என்று கேள்வி எழுப்புவது மிகவும் முக்கியமானது. அடல்ட் படங்களில் நடித்து பின்னர் பாலிவுட் சினிமாவுக்குள் நுழைந்து வெற்றிப்பெற்ற பெயரும் சன்னி லியோனுக்கு உண்டு. ஒருவரது சுய கவுரவத்தையும் அவரது தொழிலையும் பிரித்துப் பார்க்க சன்னி லியோனின் வாழ்க்கை தொடக்கமாக இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

சன்னி லியோன்
Sunny Leone

மும்பையில் உள்ள பள்ளி ஒன்றுக்கு சன்னி லியோன் நிதி அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளியின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும் சில நெருங்கிய வட்டாரங்கள் அவர் அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்காக குறிப்பிட்ட தொகையை செலவு செய்து வருவதாக தெரிவிக்கின்றன. தொடர்ந்து அந்தப் பள்ளியை கவனித்து வருவதாகவும் தேவைப்படும் நேரத்தில் உதவி செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சன்னி லியோன் பிபிசியின் 100 செல்வாக்குமிக்க பெண்களின் பட்டியலில் இடம் பிடித்தார். தன்னுடைய சமூகப்பணிகளின் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

சன்னி லியோன்
Sunny Leone

சன்னி லியோன் நடிப்பில் உருவான ஜிஸ்ம் 2 திரைப்படம் வெளியாவதற்கு சில நாள்களுக்கு முன்பு இணையதளங்களில் செய்தி ஒன்று வெளியானது. சன்னி லியோன் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவதற்காக தனது உள்ளாடைகளை ஏலம் விடுவதாக அந்த தகவல்கள் தெரிவித்தன. பெரும்பான்மையானவர்கள் இதனை அவர் தன்னுடைய விளம்பரத்துக்கு செய்கிறார் என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால், உண்மையில் அவற்றை ஏலம் விட்டு வந்த பணத்தை புற்றுநோயாளிகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அளித்திருக்கிறார். ஒருமுறை அவர் புற்றுநோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக மாரத்தான் ஓடியதும் கவனிக்கத்தக்கது.

சன்னி லியோன்
Sunny_Leone

மகாராஷ்டிராவில் உள்ள ஆர்பனேஜைச் சேர்ந்த பெண் குழந்தை ஒருவரை சன்னி லியோன் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். “குழந்தையை தத்தெடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பொதுவாக குழந்தையைப் பெற்றெடுக்க 9 மாதங்களுக்கு மேல் ஆகும். ஆனால், நாங்கள் இந்தக் குழந்தையை மூன்று வாரங்களில் தத்தெடுத்துவிட்டோம்” என்று நெகிழ்ச்சியுடன் அப்போது கூறியிருந்தார். குழந்தையின் நிறம், பின்னணி மற்றும் சுகாதார நிலை என எதையும் பார்க்காமல் மகிழ்ச்சியுடன் குழந்தையை அவர் தத்தெடுத்து தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். சன்னி லியோனால் தத்தெடுக்கப்பட்ட குழந்தை அவரால் தத்தெடுக்கப்படுவதற்கு முன்பு சுமார் 11 குடும்பங்களால் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read : இந்தியாவின் டாப் 10 சோலோ யூ டியூப் கிரியேட்டர்ஸ்!

விலங்கு நல ஆர்வலராகவும் சன்னி லியோன் இருந்து வருகிறார். விலங்குகளின் உரிமைகளுக்காகவும் அவைகளின் பாதுகாப்பிற்காகவும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ந்து உதவி செய்து வருகிறார். பீட்டாவின் ஆதரவாளராகவும் உள்ளார். ஆதரவற்ற தெரு நாய்களை தத்தெடுப்பது குறித்தும் அடிக்கடி பேசி வருகிறார். விலங்குகளுக்கு வீடுகள் இல்லாத நிலைமை மிகவும் மோசமானது என சன்னி லியோன் உணர்வதாக தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டில் பீட்டாவால் ஆண்டின் சிறந்த நபர் என்றும் பெயரிடப்பட்டார்.

இப்போ சொல்லுங்க.. சன்னி லியோனைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top