144 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
2019ம் ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. தொடரின் தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி வந்தநிலையில், கொரோனா சூழலால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியின் முடிவு தெரியும்வரை இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெறுமா என்ற கேள்வி இருந்து வந்தது. முடிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது விராட் கோலி படை.
இங்கிலாந்தின் சவுதாம்டன் நகரில் இறுதிப்போட்டி நடக்கிறது.
இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.11.86 கோடி), இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.5.93கோடி) பரிசுத்தொகையும் கிடைக்கும். போட்டி டிராவிலோ அல்லது டையாகவோ முடிந்தால் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும். அத்தோடு டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸை இரு அணிகளுக்கும் சாம்பியன் அந்தஸ்து வகிக்கும் காலகட்டத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ICC Test Championship mace
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குவதற்கு முன்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸ், ஆண்டு இறுதியில் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கே வழங்கப்பட்டு வந்தது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 2017ம் ஆண்டு முதலே டெஸ்ட் தரவரிசையில் முன்னணியில் இருந்து வருகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்குக் கொடுக்கப்படும் ICC Test Championship mace, கடந்த 2000-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த லக்ஸுரி பிராண்டான Thomas Lyte என்ற நிறுவனம் அதை வடிவமைத்தது. கிரிக்கெட் ஸ்டம்ப் போன்ற நீளமான ஒரு கோலில் முனையில் கிரிக்கெட் பந்து ஒன்று இருப்பதைப் போன்று அது வடிவமைக்கப்பட்டிருந்தது. அதை வடிவமைத்தவர் டிரெவோர் பிரவுன். அதற்கான இஸ்பிரேஷனான பிரவுன் குறிப்பிடுவது, `ஒரு போட்டி முடிந்ததும் வெற்றிபெற்றதற்கான அடையாளமாக வீரர் ஒருவர் ஸ்டம்பைத் தூக்குவார்கள். அதை நினைவுபடுத்தவே அந்த டிசைன். வழக்கமான டிராஃபி டிசைனை விட இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று தோன்றியது. அதன் முனையில் இருக்கும் கிரிக்கெட் பந்தானது உலகத்தையும் குறிக்கும்’’ என்றார். அந்த டிசைனில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருக்கும் 12 நாடுகளின் சின்னங்களும் இடம்பெற்றிருக்கும்.
சில்வரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மேஸ், தங்க மூலாம் பூசப்பட்டது. அதன் சில பகுதிகள் ஒளியைப் பிரதிபலிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. டிரெவோர் பிரவுன் வடிவமைத்துக் கொடுத்த டிஸை தாமஸ் லைட் நிறுவனத்தின் சில்வர் தயாரிப்பு வல்லுநர்கள், டைப்போகிராஃபர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட டீம் வடிவமைத்திருக்கிறது. அதன் கொண்டைப் பகுதியில் இருக்கும் உருண்டை வடிவ பந்து போன்ற உருளையை சில்வரில் வடிவமைப்பதுதான் சவாலாக இருந்தது என்கிறார்கள். சில்வர், தங்க மூலாம் பூசப்பட்டிருந்தாலும் எடைக் குறைவாக இருக்கும்படியாக வடிவமைக்கபப்ட்டிருக்கிறது. 2000-2001 ஆண்டுகளிலேயே இந்த மேஸ் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் தயாரிப்பு உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளிவராமலேயே இருந்தது.
ICC Test Championship mace எப்படி உருவாக்கப்பட்டது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்…
Also Read – ஒரே நேரத்தில் 2 தொடர்கள்.. 2 வெவ்வேறு அணிகள்… இந்திய அணியின் அப்ரோச் சொல்லும் சேதி?