Challenges

தண்ணீர் குடிப்பது முதல் கேஷ் ஒன்லி வரை… இந்த 30 நாள் சேலஞ்ச்களை ட்ரை பண்ணிப் பாருங்க!

ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் மாதம் கடைசி வர்றப்ப அடுத்த வருஷத்துக்கான ரெசல்யூஷன் எடுப்போம். அதை ரெசல்யூஷனா எடுத்தா சரியா பண்ண மாட்டோம்னு நமக்கு நாமே சேலஞ்ச் பண்ணிப்போம். இதுபோக சமூக வலைதளங்களில் அப்பப்போ டல்கோனா சேலஞ்ச், சிங்கிங் சேலஞ்ச், கப்புள் சேலஞ்ச், பிளாக் மற்றும் ஒயிட் புகைப்படங்கள் போடுற சேலஞ்ச்னு அப்பப்போ சில சேலஞ்ச்கள் டிரெண்டாகும். பொதுவாக சேலஞ்சா எடுத்து சில விஷயங்களைப் பண்ணும்போது அது நம்ம வாழ்க்கைல இருந்து பிரிக்க முடியாத ஒரு விஷயமா மாறிடுது. நம்மள்ல நிறைய பேர் புதுவருஷம் அப்போ எடுத்த சேலஞ்சை நிச்சயம் ஃபாலோ பண்ணியிருக்க மாட்டோம். இப்போ புது வருஷத்துல ஆறு மாதமும் முடிஞ்சு போச்சு. சரி, இனிமேல் என்ன சேலஞ்ச் எடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்குற ஆளா நீங்க? உங்களுக்கான சிம்பிளான 30 நாள் சேலஞ்ச் ஐடியாக்களை தான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப்போறோம்! 

தண்ணீர் குடிக்கிற சேலஞ்ச்

நம்மில் பலருக்கு நாள்தோறும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம் கிடையாது. ஒரு கப் தண்ணீர் குடிக்கிறதுக்கு பதிலாக காபி அல்லது டீ குடிப்போம். ஆனால், நீங்க சேலஞ்சா காபி மற்றும் டீ-க்குப்பதிலா தண்ணி குடிக்கிற சேலஞ்ச எடுத்துக்கோங்க. குறைந்தபட்சம் 30 நாள் இந்த சேலஞ்சை அக்சப்ட் பண்ணி செய்ங்க. அப்புறம் டெய்லி ரொட்டீன்ல ஒரு பழக்கமாகவே மாறிடும். சருமம் முதல் செரிமான உறுப்பு வரையிலான பல உறுப்புகளுக்கு தண்ணீர் குடிப்பதால் நன்மை உள்ளது என்பதை நினைவில் வைத்து இந்த சேலஞ்சைப் பண்ணுங்க.

காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்க்கும் சேலஞ்ச்

நீங்கள் மிகப்பெரிய நான் வெஜ் பிரியரா இருக்கலாம். நான் வெஜ் சாப்பிடுங்க தப்பில்ல. ஆனால், வழக்கமா நீங்க சாப்பிடுற உணவு வகைகள் கூடவே கொஞ்சம் அதிகமா கலர்ஃபுல்லான காய்கறிகளை சேர்த்துக்கோங்க. கீரை வகைகள், கேரட், பீன்ஸ் என எந்தவகையான காய்கறியாகவும் அது இருக்கலாம். இதையே ஒரு 30 நாள் ட்ரை பண்ணி பாருங்க.

நோ சுகர் சேலஞ்ச்

இனிப்பு எல்லாருக்கும் மிகவும் பிடித்த சுவை. இதனால், இதை தவிர்ப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். இருந்தாலும் பரவால்ல.. நீங்க தண்ணி குடிக்கிற சேலஞ்ச அக்சப்ட் பண்ணிக்க முடியலைனா, குறைந்தபட்சம் காபி மற்றும் டீ-யில் சர்க்கரை சேர்ப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம். சுமார் 30 நாள்கள் இதேமாதிரி சர்க்கரையை பயன்படுத்தாமல் ஒரு சேலஞ்ச் பண்ணி பாருங்க. 

10,000 ஸ்டெப்ஸ் சேலஞ்ச்

நம்மில் பெரும்பான்மையானவர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பெரும்பாலான வேலைகளை செய்கிறோம். வெளியே எங்காவது செல்ல வேண்டும் என்றால் வாகனங்களை பயன்படுத்துகிறோம். இனிமேல் இதற்கு பதிலாக 10,000 ஸ்டெப்ஸ் சேலஞ்சை எடுத்துக்கோங்க. 30 நாளுக்கும் சேர்த்து 10,000 ஸ்டெப்ஸ் இல்ல. ஒரு நாளைக்கு 10,000 ஸ்டெப்ஸ் நடக்கனும்னு சேலஞ்ச் எடுத்து நடங்க. உங்களது ஸ்டெப்சை கேல்குலேட் செய்ய நிறைய ஆப்கள் உள்ளன. அதை பயன்படுத்திக்கோங்க. மாடிப்படிகளில் ஏறி இறங்குவதைக்கூட நீங்கள் சேலஞ்சாக செய்யலாம். 

தினமும் வாசிக்கும் சேலஞ்ச்

உங்களுடைய கற்பனைத்திறனை மேம்படுத்தவும் பல அரிய விஷயங்களை தெரிந்துகொள்ளவும் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் வாசிப்பு பழக்கம் மிகவும் உதவும். ஒருநாளைக்கு குறைந்தது 50 பக்கங்களை படிக்க வேண்டும் என சேலஞ்ச் எடுத்துக்கொள்ளுங்கள். புத்தகங்களை வாசியுங்கள். அப்போதுதான் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இருந்து உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்.

ஐடியா சேலஞ்ச்

ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 ஐடிக்களை எழுதுங்கள். அந்த ஐடியாக்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக வணிகம் சார்ந்தது, தோட்டக்கலை வடிவமைப்பு சார்ந்தது, கதைகள் சார்ந்தது என எதைப்பற்றி வேண்டுமானாலும் சுமார் 10 ஐடியாக்களை எழுதிப் பழகுங்கள். அதை தொலைந்து போகாமல் பாதுகாப்பாக வைத்திருங்கள். எப்போதாவது உங்களுக்கு அந்த ஐடியாக்கள் நிச்சயம் பயன்படலாம். இதனால், நீங்கள் பணியாற்றும் குறிப்பிட்ட துறையில் ஐடியா மிஷினாக திகழலாம்.

சிரிக்கும் சேலஞ்ச்

`கடைசியாக எப்போ சிரிச்சீங்க?’னு கேட்டா, `டக்’னு பதில் ஞாபகத்துக்கு வர்றாது. ஏன்னா, இயந்திரமயமான வாழ்க்கைல சிரிப்பு என்பதையே நாம பெரும்பாலான நேரங்களில் மறந்துட்டோம். இனி `கடைசியா எப்போ சிரிச்சீங்க?’னு கேட்டா பதில் `டக்’னு ஞாபகத்துக்கு வர்ற மாதிரி தினமும் சிரிங்க. உங்க கூட அலுவலகங்களில் வேலை செய்றவங்க, உங்க பக்கத்து வீட்டுக்காரங்க, உங்க தெருவில் நீங்க பாக்குற குட்டி பசங்க இவங்கள பாத்துலாம் சின்னதா ஒரு ஸ்மைல் பண்ணுங்க டெய்லி. 30 நாள் கழிச்சு நீங்க சிரிக்கலைனாலும் அவங்க உங்கள பாத்து சிரிப்பாங்க. உங்களுக்கு இடையே உறவில் மிகப்பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கும். எவ்வளவு பெரிய கஷ்டங்களில் நீங்க சிக்கிகிட்டாலும் அவங்க சிரிப்பால உங்க மனசுல சின்னதா சில மாற்றங்கள் வரும். சோ, சிரிக்க மறக்காதீங்க.

சோஷியல் மீடியா பிரேக் சேலஞ்ச்

`ஃபேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் இல்லாமல் ஒரு நாள்கூட வாழ்க்கை நகருவதே இல்லை’னு நினைக்கிற நபரா நீங்க? அப்போ உங்களுக்கான சேலஞ்ச்தான் இது. ஒரு 30 நாள் எந்த சோஷியல் மீடியாவும் யூஸ் பண்ணாம ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கோங்க. அந்த நாள்களில் உங்களுக்கு பிடிச்ச வேறு சில விஷயங்களில் ஃபோகஸ் பண்ணுங்க. குடும்பத்தினருடன் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. அப்புறம் டிஜிட்டல் தளங்களுக்கு எந்த அளவு அடிமையா இருந்தீங்கனு நீங்களே புரிஞ்சிப்பீங்க. 

கேஷ் ஒன்லி சேலஞ்ச்

இன்றைக்கு பெரும்பாலும் நாம கேஷ் யூஸ் பண்றதே இல்லை. கூகுள் பே, ஆன்லைன் டிரான்சேக்‌ஷன்னு டிஜிட்டல் தளத்துலேயே எல்லா பணபரிவர்த்தனைகளையும் பண்ணிட்றோம். இதனால, எவ்வளவு நாம செலவு செய்றோம்ற கணக்கே நமக்கு தெரியாமல் போகுது. அதனால, 30 நாள் கேஷ் ஒன்லி சேலஞ்சை அக்சப்ட் பண்ணிட்டு அதை உங்க வாழ்க்கைல அப்ளை பண்ணி பாருங்க. ஒரு மாதம் முடிவில் நீங்க எவ்வளவு செலவு பண்றீங்கனு உங்களுக்கு தெரிய வரும்.

இந்த சேலஞ்சுகளில் உங்க ஃபேவரைட் சேலஞ்ச் எது.. இதைத்தவிர வேற என்ன புதுமையான சேலஞ்சுகளை ட்ரை பண்ணலாம்னு கமெண்ட் பண்ணுங்க மக்களே!

Also Read : புது Diet எடுக்கப்போறீங்களா… உங்களுக்கான 5 கேள்விகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top